ETV Bharat / state

ரூ.14 கோடி வீணடிப்புக்கு தீர்வு இல்லை.. தற்பெருமை தேடுகிறதா நெல்லை மாநகராட்சி?

author img

By

Published : May 25, 2023, 12:11 PM IST

Nellai
நம்ம நெல்லை

ரூ.14 கோடி செலவில் கட்டப்பட்ட வ.உ.சி மைதானத்தின் மேற்கூரை இடிந்து வீணான மர்மத்துக்கு விடை கிடைக்காத நிலையில், நெல்லை மாநகரை மின் விளக்குகளால் மாநகராட்சி அலங்கரித்துள்ளது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாநகரை மின் விளக்குகளால் மாநகராட்சி அலங்கரித்துள்ளது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் புதிய குடிநீர் இணைப்புகள், பாதாளச் சாக்கடை திட்டம், சாலைகள் விரிவுபடுத்தப்பட்டு அழகிய மின்விளக்குகள் அமைத்தல், புதிய கட்டிடங்கள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாகத் தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோயில் முன்பிருந்து தொடங்கி பாளையங்கோட்டை முருகன் குறிச்சி வரை இருக்கும் சாலைகள் அகலப்படுத்தப்பட்டு சாலைகளின் நடுப்பகுதியில் பூ போன்ற அழகிய வடிவத்திலான மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த மின்விளக்குகளில் தேசியக்கொடி வடிவிலான வண்ணத்தில் தொகுப்பு விளக்குகளும் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது மின் விளக்குகள் அமைக்கப்படும் பணி நிறைவு பெற்றுள்ள நிலையில், தேசியக்கொடி வடிவிலான விளக்குகளால் மாநகர் பகுதி முழுவதும் வண்ணமயமாகக் காட்சியளித்து வருகிறது. இதனை ஆர்வமுடன் பொதுமக்கள் கண்டுகளித்து வருவதுடன் மாநகராட்சிக்கு பல்வேறு கோரிக்கைகளையும் வைத்து வருகின்றனர்.

அதாவது சாலைகள் ஒருபுறம் அழகு படுத்தப்படும் பணி நடந்து வந்தாலும், பல்வேறு பகுதிகளில் கிடப்பில் போடப்பட்ட பழைய சாலைகளை மேம்படுத்த வேண்டும் முறையாகப் பராமரிப்பு பணிகள் நடத்த வேண்டும், கட்டப்பட்ட கட்டிடங்களின் தரங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளது.

குறிப்பாகக் கடந்த 2021 ஆம் ஆண்டு சுமார் 14.95 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தின் கேலரி மேற்கூரை அரை மணி நேர மழைக்கு அடியோடு சாய்ந்து விழுந்தது. பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் அப்பகுதியில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. கட்டி 8 மாதங்களில் 14.95 கோடி ரூபாய் பணம் வீணானது அனைவரின் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே அரசு அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரரின் அலட்சியம் காரணமாகவே இந்த விபத்து நடைபெற்றதாகவும் பல குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் எல்லாம் சரியாக இருப்பது போன்று மாநகர் முழுவதும் வண்ண விளக்குகள் ஒளிரவிட்டு மாநகராட்சி பெருமை தேடிக் கொள்வது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சொத்துக்களை விற்று பழங்குடி மக்களுக்கு வீடு.. ஊர் போற்றும் உன்னத மனிதர் ஜோஸ்வா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.