ETV Bharat / state

ஒடிசாவிலிருந்து நெல்லை வந்த 14 ஆயிரம் கிலோ லிட்டர் ஆக்சிஜன்!

author img

By

Published : May 18, 2021, 7:25 AM IST

ஒடிசாவிலிருந்து நெல்லை வந்த 14 ஆயிரம் கிலோ லிட்டர் ஆக்சிஜன்
ஒடிசாவிலிருந்து நெல்லை வந்த 14 ஆயிரம் கிலோ லிட்டர் ஆக்சிஜன்

திருநெல்வேலி : ஒடிசா மாநிலம் ரூர்கேலாவிலிருந்து 14 ஆயிரம் கிலோ லிட்டர் ஆக்ஸிஜன், அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது.

திருநெல்வேலி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 800-க்கும் மேற்பட்ட நோயாளிகள் ஆக்ஸிஜன் வசதியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே இங்கு ஏற்பட்டுள்ள ஆக்ஸிஜன் பற்றாக்குறையை சமாளிக்க மாவட்ட நிர்வாகம் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிடமிருந்து ஆக்ஸிஜனை பெற்று வருகிறது.

மாவட்டத்தில் கரோனா தடுப்பு பணிகளை நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் ஐ பெரியசாமி, தங்கம் தென்னரசு ஆகியோர் அவ்வப்போது மாவட்ட ஆட்சியருடன் ஆய்வு நடத்தி, அதனடிப்படையில் அரசை வலியுறுத்தி ஆக்ஸிஜன் கிடைக்க ஏற்பாடு செய்து வருகின்றனர்.

அந்த வகையில் ஒடிசா மாநிலம் ரூர்கேலாவிலிருந்து நேற்று (மே 17) ரயில் மூலம் தூத்துக்குடிக்கு ஆக்ஸிஜன் கொண்டுவரப்பட்டது. இதில், 15ஆயிரம் கிலோ லிட்டர் ஆக்ஸிஜன் டேங்கர் லாரி மூலம் நெல்லை அரசு மருத்துவமனைக்கு எடுத்து வரப்பட்டது.

அதில் 14ஆயிரம் கி.லிட்டர் ஆக்ஸிஜன் மருத்துமனை வளாகத்திலுள்ள சேமிப்பு கிடங்கில் நிரப்பப்பட்டது. மீதமுள்ள ஆயிரம் கிலோ லிட்டர் தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. நெல்லை அரசு மருத்துவனைக்கு ஏற்கனவே இஸ்ரோ நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்து பல கட்டங்களாக ஆக்ஸிஜன் வழங்கப்பட்டுள்ளது.

அதிகபட்சம் மகேந்திரகிரி இஸ்ரோ நிறுவனத்திலிருந்து ஒரே நாளில் 8 ஆயிரம் கி.லிட்டர் ஆக்ஸிஜன் வழங்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் தற்போது இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 14 ஆயிரம் கிலோ லிட்டர் மருத்துவ ஆக்ஸிஜன் நெல்லை அரசு மருத்துவனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் அடுத்த சில தினங்களுக்கு நெல்லை அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை சமாளிக்க முடியும் என மாவட்ட நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: ’ஆக்ஸிஜன் உற்பத்தி இயந்திரங்கள் உதிரிபாகங்கள் கிடைக்காததால் மூடப்பட்டன’ - திருச்சி பெல் நிறுவனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.