ETV Bharat / state

அதிகாரிகளையே மிரள வைத்த 12 மணிநேர சோதனை.. நெல்லை அரசு அதிகாரியிடம் இவ்வளவு சொத்தா?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 6, 2023, 7:01 PM IST

ஊழல் புகாரில் சிக்கிய நெல்லை அரசு அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை
ஊழல் புகாரில் சிக்கிய நெல்லை அரசு அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை

Vigilance Raid: சோதனைக்கு சென்ற அதிகாரிகளே மிரண்ட போகும் அளவிற்கு நெல்லை தொழில் மைய அதிகாரி வீடு மற்றும் அலுவலகத்தில் இருந்து 8 கோடி மதிப்புள்ள 221 சொத்து ஆவணங்கள் மற்றும் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஊழல் புகாரில் சிக்கிய நெல்லை அரசு அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை

திருநெல்வேலி: பாளையங்கோட்டை ரஹ்மத் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேஷ் (43). இவர் கள்ளக்குறிச்சி மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளராக பணியாற்றி வந்தார். தற்போது ஊழல் புகார் காரணமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக இவர், திருநெல்வேலி மாவட்ட தொழில் மைய பொது மேலாளராக பணியாற்றியபோது, முறைகேடாக பணம் சம்பாதித்து வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பல்வேறு புகார் எழுந்தது.

இந்த புகாரின் அடிப்படையில் கடந்த 4ஆம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார் முருகேஷ் மீது வழக்குப் பதிவு செய்தனர். அதைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தின் அனுமதியுடன் முருகேஷின் திருநெல்வேலி வீட்டில் ஆய்வாளர் ராபின் ஞானசேகர் தலைமையிலான போலீசார் நேற்று (அக்.06) அதிரடி சோதனை நடத்தினர்.

சுமார் 12 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த சோதனையில் கணக்கில் வராத பணம், பல்வேறு முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது. குறிப்பாக முருகேஷ் தனது பெயரிலும், தனது மனைவி சசிகலா பெயரிலும் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை வாங்கி குவித்திருப்பது, ஆவணங்கள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, சில பினாமி பெயரிலும் முருகேஷ் திருநெல்வேலி மாநகரின் முக்கிய பகுதிகளில் சொத்துகள் வாங்கியதாக தெரிகிறது. வி.எம்.சத்திரம், கேடிசி போன்ற பகுதிகளில் பல கோடி மதிப்புள்ள நிலம் வாங்கி கட்டிடங்கள் கட்டியிருப்பதாகவும், அதுதொடர்பான ஆவணங்கள் போலீசார் கையில் சிக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

நேற்று ஒரே நாள் சோதனையில் முருகேஷ் வீட்டில் இருந்து 128 சொத்து ஆவணங்கள், அலுவலகத்தில் இருந்து 93 சொத்து ஆவணங்கள் என மொத்தம் 221 சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்துள்ளதாக தற்போது தகவல்கள் கசிந்துள்ளது. மேலும், தோண்ட தோண்ட கிடைத்த ஆவணங்களைக் கண்டு அதிகாரிகளே மிரண்டுபோயுள்ளனர்.

இதன் மதிப்பு சுமார் 8 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என தெரியவந்துள்ளது. இதுதவிர வீட்டில் ஒரு லட்சத்து எழுபத்து ஏழாயிரத்து நூறு ரூபாய் ( 1,77,100) ரொக்கம் சிக்கியதாக கூறப்படுகிறது. எனவே வெளியூரில் இருந்த முருகேஷை வரவழைத்து அவரிடம் மேற்கண்ட சொத்து ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்; அரசு வழங்கிய பட்டா செல்லாது என கூறியதாக குற்றச்சாட்டு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.