ETV Bharat / state

சாலையில் கிடந்த ஒரு லட்சம் ரூபாய்: காவல் நிலையத்தில் ஒப்படைத்த காவலர்களுக்கு பாராட்டு!

author img

By

Published : Sep 17, 2020, 7:25 PM IST

காவலர்களை பாராட்டிய காவல் கண்காணிப்பாளர்
காவலர்களை பாராட்டிய காவல் கண்காணிப்பாளர்

திருநெல்வேலி: மானூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற சகோதரர்கள் தவறவிட்ட ஒரு லட்சம் ரூபாய் பணம் உள்ளிட்ட சொத்து ஆவணங்களை, காவல் நிலையத்தில் ஒப்படைத்த காவலர்கள் இருவரை காவல் கண்காணிப்பாளர் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகேவுள்ள மேல இலந்தைகுளத்தைச் சேர்ந்த சகோதரர்கள் சுந்தர்ராஜ்(48), ஜெயக்குமார் (46). இவர்கள், நேற்று முன்தினம் (செப்டம்பர் 15) இரவில் இருசக்கர வாகனத்தில் ராமையன்பட்டி வழியாக சென்று கொண்டிருந்தனர்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த 1 லட்சம் ரூபாய் பணம், சொத்து ஆவணங்கள், வங்கி கணக்கு புத்தகம், இறப்பு மற்றும் வாரிசு சான்றிதழ் ஆகியவற்றை தவற விட்டுள்ளனர். இதற்கிடையில், மானூர் காவல் நிலைய காவல் துறையினர் மணிகண்டன், சண்முகராஜா ஆகியோர் இருசக்கர வாகனத்தில் ரோந்து செல்லும்போது, ராமையன்பட்டி கால்நடை மருத்துவக் கல்லூரி அருகே துணிப்பை ஒன்று கேட்பாரற்று கிடப்பதை கண்டனர்.

இதையடுத்து, அதனை சோதனை செய்ததில் அதில் ஒரு லட்சம் ரூபாய் பணம், உள்ளிட்ட சொத்து ஆவணங்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, பணம், ஆவணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்பு பணத்தை தவறவிட்ட சுந்தர்ராஜ், ஜெயக்குமார் ஆகியோர் மானூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்துள்ளனர்.

அப்போது, இது குறித்து மானூர் காவல் ஆய்வாளர் ராமர் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு, பணம் மற்றும் சொத்து ஆவணங்களை அவர்களிடம் ஒப்படைத்து, தக்க அறிவுரை வழங்கி அனுப்பினார். காவல் துறையினரின் கண்ணியமிக்க செயலை பாராட்டும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன், இன்று காவலர்கள் மணிகண்டன், சண்முகராஜ் ஆகியோரை நேரில் அழைத்து, நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

இதையும் படிங்க: இரவு ரோந்துப் பணியில் விழிப்புடன் செயல்பட்ட காவலர்களுக்கு ஆணையர் பாராட்டு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.