கந்துவட்டி கொடுமையால் உயிரிழந்த குடும்பத்துக்கு நீதி கிடைப்பதில் தாமதமா? உறவினர் ஆட்சியரிடம் மனு..!

கந்துவட்டி கொடுமையால் உயிரிழந்த குடும்பத்துக்கு நீதி கிடைப்பதில் தாமதமா? உறவினர் ஆட்சியரிடம் மனு..!
Case of death due to usury: நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் கந்துவட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், ஆறு வருடங்கள் ஆகியும் நீதி கிடைக்கவில்லை என உயிரிழந்தவரின் சகோதரர் ஆட்சியர் மனு அளித்து உள்ளார்.
திருநெல்வேலி: கந்துவட்டி கொடுமையால் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு குடும்பத்தினர் 4 பேர் தீக்குளித்து உயிரிழந்த விவகாரத்தில், ஆறு வருடங்கள் ஆகியும் நீதி கிடைக்கவில்லை என்றும், வழக்கை திரும்ப பெறக் கூறி தொடர்ந்து மிரட்டல் வருவதாகவும், உயிரிழந்தவர்களின் உறவினர் சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டு உள்ளது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள காசிதர்மம் ஊராட்சி பகுதியைச் சேர்ந்த இசக்கி முத்து - சுப்புலட்சுமி தம்பதி, தங்களுடைய 2 குழந்தைகளோடு கடந்த 2017ஆம் ஆண்டு கந்துவட்டி கொடுமை குறித்து மனு அளிக்க ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றுள்ளனர். அதைத் தொடர்ந்து, அலுவலகம் முன்பு முறையிட்ட இவர்கள் குடும்பத்தோடு நான்கு பேரும் தற்கொலை செய்து கொண்டனர்.
இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் 2017ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், ஆறு வருடங்கள் கடந்தும் தற்போது வரை வழக்கு விசாரணை நடைபெறவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி இன்று (நவ. 20) ஆட்சியர் அலுவலகத்தில் உயிரிழந்த இசக்கி முத்துவின் சகோதரர் கோபி மனு அளித்துள்ளார்.
அப்போது அவர் கூறுகையில், "இந்த வழக்கு விசாரணை மிகவும் தாமதமாக நடைபெறுகிறது. விரைந்து வழக்கு விசாரணையை செய்து முடிக்க வேண்டும். காவல் ஆய்வாளருக்கும், உதவி ஆணையருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வழக்கு தாமதம் ஆகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் என்னை மிரட்டுகிறார்கள்.
வழக்கை திரும்பப் பெறக் கூறி தொடர்ந்து அச்சுறுத்தல் அளித்து வருகிறார்கள். எனக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளில் ஒருவர் வெளிநாடு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.மேலும் மாவட்ட ஆட்சியர் இந்த வழக்கை விரைந்து விசாரணை செய்து முடிக்க பரிந்துரை செய்ய வேண்டும் எனக் கூறி இன்று மனு அளித்துள்ளேன்" என்றார்.
மேலும், வழக்கு விசாரணையை 2 மாதங்களில் முடிக்க வேண்டும் என்றும் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ள நிலையில், சம்பவம் நடைபெற்று 6 ஆண்டுகள் ஆகியும், தற்போது வரை அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.
