ETV Bharat / state

Nellai:19 வயது இளைஞர் மரணம்; சாதிய படுகொலை இல்லை என எஸ்.பி. அலுவலகம் அறிக்கை

author img

By

Published : Jul 25, 2023, 11:09 PM IST

Etv Bharat
Etv Bharat

நெல்லையில் வேற்று சமூகப் பெண்ணை காதலித்ததாக கூறப்படும் 19 வயது இளைஞர் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில், இது சாதிய படுகொலை இல்லை என்று மாவட்ட எஸ்.பி. அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

நெல்லை: நெல்லை மாவட்டம், திசையன்விளை அடுத்த அப்புவிளை பகுதியைச் சேர்ந்தவர் கன்னியப்பன். இவரது மகன் முத்தையா (19) கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு உயிரிழந்த முத்தையா அழைப்பிதழ் அச்சடிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்தார். இதற்கிடையில், முத்தையா காதல் விவகாரத்தில் ஆணவ கொலை (Honour Killing) செய்யப்பட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதாவது, பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த முத்தையா இட்டமொழியைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்ததாகவும், அந்த பெண்ணின் குடும்பத்தினர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

சம்பவத்தன்று அந்த பெண் முத்தையாவை தேடி அவரது வீட்டுக்கு சென்றதாகவும் முத்தையா அந்த பெண்ணை அவரது வீட்டில் கொண்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது. அன்று இரவு தான் முத்தையா கொலை செய்யப்பட்டார். எனவே, பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் முத்தையாவை அந்த பெண்ணின் குடும்பத்தினர் ஆணவப் படுகொலை செய்து விட்டதாக முத்தையா வீட்டார் குற்றம்சாட்டினார். தமிழகத்தில் சமீபகாலமாக ஆணவ கொலைகள் தலைதூக்காமல் இருந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் மீண்டும் ஆணவ கொலை நடைபெற்றதாக கூறப்படும் சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பீதியை ஏற்படுத்தியது.

2 பேர் கைது: எனவே, இந்த வழக்கை நெல்லை மாவட்ட காவல்துறை மிக கூர்மையாக கண்காணிக்க தொடங்கியது. குறிப்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் திசையன்விளை காவல்துறையினரை தொடர்பு கொண்டு வழக்கின் அனைத்து விவரங்களையும் கேட்டறிந்தார். மேலும், முத்தையா காதலித்ததாக கூறப்படும் விவகாரம் குறித்தும் விரிவாக விசாரணை நடத்த ஆணையிட்டார். இவ்வழக்கில் போலீசார் வழக்கு பதிவு செய்து இரண்டு பேரை கைது செய்தனர்.

இருப்பினும் முத்தையா சாவுக்கு நீதி கேட்டு உறவினர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு திரண்ட நிலையில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக தான் முத்தையா கொலை செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதைக் கேட்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அப்பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகர் மற்றும் காவல் ஆய்வாளர் தங்கள் இல்லத்திற்கு வந்து 3 லட்சம் ரூபாய் வரை பணம் தருகிறோம் பேசாமல், உடலை வாங்கி கொண்டு கடைசி காரியத்தை செய்யுங்கள் என மிரட்டியதாக பெற்றோர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: காதல் விவகாரத்தில் இளைஞர் ஆணவக்கொலை? - நெல்லையில் நீதி கேட்டு வந்தவர்கள் கைது!

எனவே, இச்சம்பவம் விஸ்வரூபம் எடுக்கவே கம்யூனிஸ்ட் உள்பட இடதுசாரி அமைப்புகளும் முத்தையா விவகாரத்தை கையில் எடுத்தது. இதுகுறித்து பேட்டி அளித்த கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் காவல்துறை திட்டமிட்டு இந்த வழக்கை திசை திருப்புவதாகவும், இது ஒரு ஆணவப் படுகொலையே என்றும் தெரிவித்தனர். இதுபோன்ற சூழ்நிலையில், முத்தையா விவகாரத்தில் சாதிய படுகொலை நடைபெறவில்லை என நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் சார்பில் இன்று (ஜூலை 25) பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதில், 'கன்னியப்பன் தனது மகன் முத்தையா, வேறு சமுதாயத்தை சார்ந்த ஒரு பெண்ணை காதலித்ததாகவும், 23.07.2023-ம் தேதி அன்று இரவு தனது மகன் ஓடக்கரை பாலம்அருகில் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்ததாகவும், தனது மகன் காதலித்த பெண்ணின் குடும்பத்தை சார்ந்தவர்கள் சாதி வெறியில் கொலை செய்துள்ளதாகவும் மனு அளித்தார். தனிப்படை விசாணையில், இறந்துபோன முத்தையா என்பவர் அப்புவிளையை சேர்ந்த சுரேஷ் என்பவரின் தங்கையை அடிக்கடி கேலி கிண்டல் செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

திடுக்கிடும் தகவல்கள்: மேலும், இதனை அவரது தங்கை சுரேஷிடம் சொல்லி அழுதுள்ளதாகவும், ஏற்கனவே சுரேஷின் தங்கை இறந்துபோன முத்தையாவின் உறவினரால் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டு, அது சம்பந்தமான வழக்கு நடைபெற்று வருவதாகவும், இதனால், ஒரு மாதத்திற்கு முன்பு சுரேஷ் முத்தையாவை எச்சரித்துள்ளார். அதன் பின்பும் 22.07.2023-ம் தேதி மதியம் சுரேஷின் தங்கையை முத்தையா கிண்டல் செய்து தன்னை காதலிக்க வற்புறுத்தியதாகவும், அதனை அவரின் தங்கை சுரேஷிடம் அழுதுகொண்டே சொன்னதாகவும் தெரியவருகிறது.

இதனால், அவன் உயிருடன் இருக்கும்வரை தங்கையிடம் பிரச்னை செய்து கொண்டிருப்பான் என்று எண்ணி தனது உறவினர்களான மதியழகனிடமும், தெரிவித்து மூவருமாக சேர்ந்து 23.07.2023-ம் தேதி இரவு சென்றபோது முத்தையாவும் அவன் நண்பரும் பேசிக்கொண்டிருந்த போது முத்தையாவிடம் சென்று சுரேஷ் தனது தங்கையை கிண்டல் செய்தது பற்றி கேட்டுள்ளார். அப்போது அவர்கள் மூவரும் தாக்கியதில் முத்தையாவுடன் நின்றிருந்த அவரது நண்பர் சிறுகாயத்துடன் ஓடிவிட்டதாகவும், முத்தையாவிற்கு குத்து காயங்கள் ஏற்பட்டு இறந்ததாகவும் தெரியவந்தது.

ஆணவ படுகொலை இல்லை: இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு, இரண்டு எதிரிகள் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டும், ஒரு எதிரியை நீதிமன்றக்காவலுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விசாரணையில், இது சாதிய படுகொலை இல்லை என தெரியவருகிறது' என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Honour Killing:நெல்லையில் ஆணவ கொலை? வேற்று சமூகப் பெண்ணை காதலித்த இளைஞர் சடலமாக மீட்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.