ETV Bharat / state

காதல் விவகாரத்தில் இளைஞர் ஆணவக்கொலை? - நெல்லையில் நீதி கேட்டு வந்தவர்கள் கைது!

author img

By

Published : Jul 25, 2023, 7:59 AM IST

நெல்லையில் வேறு சமூகப் பெண்ணை காதல் செய்ததால் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் இளைஞருக்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

19 years old boy honour killing issue
காதல் விவகாரத்தில் இளைஞர் ஆணவக் கொலை

காதல் செய்ததால் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் வாலிபருக்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டத்தில் தள்ளுமுள்ளு

திருநெல்வேலி: திசையன்விளை அடுத்த அப்புகளை பகுதியைச் சேர்ந்தவர் கன்னியப்பன். இவரது கடைசி மகன் முத்தையா. இவர் நேற்று (ஜூலை 24) திசையன்விளை காவல் சரக்கத்திற்கு உட்பட்ட பகுதியில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக திசையன்விளை காவல் துறையினர் 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதில், முத்தையாவின் கொலைக்கு போதை பொருட்கள் பயன்படுத்தியபோது நடந்த வாக்குவாதம்தான் காரணம் என போலீசாரின் முதல் கட்ட தகவலாக உள்ளது. இந்த நிலையில் உயிரிழந்த முத்தையா மாற்று சமூகத்து பெண்ணை காதலித்ததாகவும், அதனை அந்த பெண்ணின் உறவினர்கள் பார்த்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த கொலை சம்பவத்திற்கு மாற்று சமுதாயத்துப் பெண்ணை காதலித்ததுதான் காரணம் எனவும், இந்த கொலை ஆணவப் படுகொலை எனவும் கூறி உயிரிழந்த நபர் முத்தையாவின் பெற்றோர் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், உயிரிழந்த முத்தையாவின் குடும்பத்தினருக்கு ஆதரவாக பல்வேறு அமைப்புகள் போராட்டங்கள் நடத்தி வருகிறது.

அந்த வகையில், நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும், உயிரிழந்த முத்தையாவின் குடும்பத்தினரும் வந்தனர். அப்போது காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் 5 நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என தெரிவித்த நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து 10 நபர்களை போலீசார் காவல் கண்காணிப்பாளரை சந்திப்பதற்கு அனுப்பி வைத்தனர். அப்போது பேச்சுவார்த்தைக்கு வந்தவர்கள் கோஷம் எழுப்பியதாக கூறப்படுகிறது. எனவே, நெல்லை மாநகர காவல் துறை உதவி ஆணையாளர் பிரதீப் தலைமையிலான போலீசார் அனுமதி இன்றி போராட்டம் நடத்தியதாகவும், சட்ட விரோதமாக கூடியதாகவும் கூறி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வாசலில் கூடியிருந்த அவர்களிடம் தெரிவித்த நிலையில், போலீசாருக்கும் அங்கிருந்தவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

மேலும் சம்பவ இடத்தில் இருந்த நபர்களை போலீசார் கைது செய்யத் தொடங்கினர். அப்போது வாசலில் இருந்தவர்கள் கைதாக மறுத்த சூழலில், குண்டு கட்டாக போலீசார் அவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். முன்னதாக வேனில் ஏற்றும்போது வயதான ஒருவரை போலீசார் தள்ளி விட்டதால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் வயதானவரை ஏன் இப்படி தள்ளுகிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.

இந்த நிலையில், பேச்சுவார்த்தைக்கு சென்றவர்கள், வாசலில் இருந்தவர்கள் கைது செய்யப்பட்ட தகவல் கிடைத்த நிலையில் அவர்களும் வெளியே வந்து கோஷங்கள் எழுப்பினர். எனவே, அவர்களையும் போலீசார் கைது செய்தனர். அப்போது கைதான நபர்கள் போலீசாரிடம், உண்மையான குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்யாவிட்டால் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்படும் நாங்கள் வெளியேற மாட்டோம் என கூறிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: சிங்கிலாக சிக்கிக் கொண்ட திமுக பிரமுகர் : கும்பலாக சேர்ந்து தாக்கிய நாம் தமிழர் கட்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.