ETV Bharat / state

திருநெல்வேலி மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 12, 2024, 1:17 PM IST

நெல்லை மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி
நெல்லை மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

Tirunelveli Mayor: திருநெல்வேலி மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானக் கூட்டத்தில் ஒரு கவுன்சிலர் கூட வராததால், நம்பிக்கையில்லா தீர்மானம் கைவிடப்பட்டதாக மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ்

திருநெல்வேலி: நெல்லை மாநகராட்சியில் 55 வார்டுகள் உள்ளன. இதில் 45 வார்டுகளில் திமுகவைச் சேர்ந்த உறுப்பினர்களும், மீதமுள்ள 10 வார்டுகளில் அதிமுக, காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் உள்ளனர். இதில், பெரும்பாலான தி.மு.க கவுன்சிலர்கள், மேயர் பி.எம்.சரவணன் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று ஆணையாளருக்கு மனு அளித்தனர்.

இது தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், மனுவில் கையெழுத்திட்ட கவுன்சிலர்களிடம் நேரில் விளக்கம் கேட்டார். தொடர்ந்து அவரது உத்தரவுப்படி, இன்று (ஜன.12) காலை 11 மணிக்கு தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு மற்றும் விவாதம் நடைபெறும் என மாநகராட்சி அறிவித்தது. அதன்படி, நெல்லை மாநகராட்சி மைய அலுவலக ராஜாஜி மண்டப மாமன்ற கூட்டரங்கில், நம்பிக்கையில்லா தீர்மான கூட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு கூட்டரங்கு அமைக்கப்பட்ட நிலையில், காலை 10.55 மணிக்கு மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் கூட்டம் நடைபெறும் அரங்கிற்குள் சென்றார். சுமார் அரை மணி நேரம் ஆணையர் காத்திருந்தும். ஒரு மாமன்ற உறுப்பினர் கூட பங்கேற்காததால், நெல்லை மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியில் முடிந்ததாக மாநகராட்சி ஆணையாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “நம்பிக்கை இல்லா தீர்மானம் தொடர்பான கூட்டத்திற்கு கொடுக்கப்பட்ட கூடுதல் கால அவகாசமும் நிறைவடைந்தது. மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் கலந்து கொள்ளாததால் தீர்மானம் தோல்வியில் முடிவடைந்து விட்டது. சட்ட விதிகளின்படி, அடுத்த ஓராண்டுக்கு கவுன்சிலர்கள் மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடியாது” என தெரிவித்தார்.

அடுத்த ஓராண்டுக்கு மேயர் மீது கவுன்சிலர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடியாது. இதனால் மேயர் சரவணன் மற்றும் அவரது கவுன்சிலர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். அதேநேரம், கட்சி தலைமை வற்புறுத்தலின் பேரில், மேயர் தானாகவே முன்வந்து ராஜினாமா செய்தால் மட்டுமே அவரது பதவி காலியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, நம்பிக்கையில்லா தீர்மான கூட்ட வாக்கெடுப்பில் திமுக கவுன்சிலர்கள் கலந்து கொண்டால், ஆளுங்கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் என்பதால், கவுன்சிலர்களை அமைச்சர் தங்கம் தென்னரசு சமாதானப்படுத்தியதாகவும், முன்னெச்சரிக்கையாக திமுக கவுன்சிலர்கள் அனைவரையும் இன்பச் சுற்றுலா அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: போகி பண்டிகை; சென்னை விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிவாசிகளுக்கு முக்கிய வேண்டுகோள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.