ETV Bharat / state

போகி பண்டிகை; சென்னை விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிவாசிகளுக்கு முக்கிய வேண்டுகோள்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 12, 2024, 9:58 AM IST

சென்னை விமான நிலையம் வேண்டுகோள்
சென்னை விமான நிலையம் வேண்டுகோள்

Chennai Airport: போகி பண்டிகையின்போது சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் வானில் பறப்பதற்கு இடையூறு விளைவிக்கும் விதத்தில், விமான நிலைய பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் டயர், பிளாஸ்டிக் போன்ற குப்பைகளை எரிக்காதீர்கள் என்று இந்திய விமான நிலைய ஆணையம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

சென்னை: தமிழ்நாட்டில் தைப்பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாள் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம், அதிகாலையில் தங்கள் வீடுகளில் உள்ள பழைய தேவையற்ற பொருட்கள், டயர்கள், பிளாஸ்டிக்குகள் போன்றவைகளை தெருக்களில் போட்டு எரிப்பது வழக்கம். இந்த வழக்கம் குறிப்பாக, சென்னை புறநகர் பகுதிகளில் அதிகம் கடைபிடிக்கப்படுகிறது.

சென்னை புறநகரான பல்லாவரம், மீனம்பாக்கம், பம்மல், அனகாபுத்தூர், பொழிச்சலூர், கவுல் பசார், தரைப்பாக்கம், மணப்பாக்கம், கொளப்பாக்கம் ஆகிய சென்னை விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிக அளவில் பழைய பொருட்கள் எரிக்கப்படுவதால் ஏற்படும் புகை மண்டலம், விமான நிலையத்தில் காலி மைதானமாக உள்ள விமான நிலைய ஓடு பாதைகளை சூழ்ந்து கொள்கிறது.

இதையடுத்து, அதிகாலை நேரத்தில் ஏற்படும் பனிமூட்டமும், புகை மூட்டமும் சேர்ந்து விமான நிலைய ஓடுபாதையே தெரியாத அளவு புகை, பனிமூட்டத்தால் மூடப்படுகிறது. இதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் வந்து தரையிறங்குவது, புறப்படுவது பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த நிலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒவ்வொரு போகி பண்டிகையின் போதும் சென்னை விமான நிலையத்தில் இருந்து வந்தது.

கடந்த 2019ஆம் ஆண்டு 23 சர்வதேச விமானங்கள் உள்பட 42 விமானங்கள், போகி பண்டிகை புகை, பனிமூட்டம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல், புறப்பட முடியாமல் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின. பெரும்பாலான விமானங்கள் பெங்களூர், ஹைதராபாத், திருச்சி, கோவைக்கு திருப்பி அனுப்பப்பட்டன. ஒரு சில விமானங்கள் ரத்தும் செய்யப்பட்டன.

இதேபோல், 2020ஆம் ஆண்டு, 2021ஆம் ஆண்டு போகிப் பண்டிகையின் போதும், சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டன. இதனால் சென்னைக்கு வர வேண்டிய சில வெளிநாட்டு விமானங்கள், போகி பண்டிகை அன்று அதிகாலையில் ரத்து செய்யப்பட்டன.

இதையடுத்து, கடந்த 2022ஆம் ஆண்டு போகி பண்டிகைக்கு முன்னதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள், தமிழ்நாடு அரசு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகியோருடன் இணைந்து, சென்னை விமான நிலையத்தைச் சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகள், கிராமங்களை சேர்ந்தவர்களிடம் டயர், பிளாஸ்டிக் போன்றவைகளை எரிப்பதால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பெருமளவு பாதிக்கப்படுகிறது.

இதனால் பல ஆயிரக்கணக்கான பயணிகள் அவதிப்படும் நிலை ஏற்படுகிறது. அதோடு டயர், பிளாஸ்டிக் போன்றவைகளை எரிப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு, குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் குழந்தைகள், வயதானவர், நோயாளிகள் போன்றவர்களுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

எனவே, இதைத் தடுக்க அந்தந்த பகுதியில் உள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், இளைஞர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதையடுத்து, கடந்த 2022ஆம் ஆண்டு போகி பண்டிகையின்போது, சென்னை விமான நிலைய ஓடுபாதை பகுதிகள் புகைமூட்டம், பனிமூட்டம் காரணமாக பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை.

அதோடு, 2023ஆம் ஆண்டு போகி பண்டிகையின்போது அனைவரும் ஆச்சரியப்படும் விதத்தில் சென்னை விமான நிலையத்தில் புகைமூட்டம் எதுவுமே இல்லாமல், அனைத்து விமானங்களும் குறித்த நேரத்தில் இயக்கப்பட்டன. அதேபோல், இந்த 2024ஆம் ஆண்டு போகி பண்டிகையின் போதும் சென்னை விமான நிலைய ஓடுபாதை பகுதியில் புகைமூட்டம் ஏற்படாமல் தடுக்க, இந்திய விமான நிலைய ஆணையம், தமிழ்நாடு அரசுடன் இணைந்து விழிப்புணர்வு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

அதோடு விமான நிலையத்தைச் சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு பொங்கல் வாழ்த்துகளை தெரிவிப்பதோடு, டயர், பிளாஸ்டிக் போன்றவைகளை பொது இடங்களில் எரிப்பதை தவிர்த்து விடுங்கள், விமான சேவைகள் பாதிக்காமல் இருக்க உங்களுடைய முழு ஒத்துழைப்பைக் கொடுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தன்னார்வத் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், இந்த துண்டு பிரசுரங்களை வீடுகள்தோறும் வழங்கி வருகின்றனர். இதனால் இந்த 2024ஆம் ஆண்டின் போகி பண்டிகையின்போது, சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் எந்த பாதிப்பும் இல்லாமல் வழக்கம் போல் இயங்கும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: "பெண் காவலர்களுக்கு துப்பாக்கி தேவையில்லை" - காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.