ETV Bharat / state

நெல்லை ராதாபுரத்தில் 5,220 வாக்காளர்கள் நீக்கம் - ஆட்சியர் விளக்கம்

author img

By

Published : Jan 5, 2023, 1:26 PM IST

நெல்லை ராதாபுரத்தில் 5,220 வாக்காளர்கள் நீக்கம் - ஆட்சியர் விளக்கம்!
நெல்லை ராதாபுரத்தில் 5,220 வாக்காளர்கள் நீக்கம் - ஆட்சியர் விளக்கம்!

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் மட்டும் 5,220 வாக்காளர்கள் அதிகளவில் நீக்கப்பட்டது குறித்து அம்மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.

நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு செய்தியாளர் சந்திப்பு

திருநெல்வேலி: தமிழ்நாடு முழுவதும் இன்று (ஜன.5) இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அந்த வகையில் நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் அனைத்து கட்சியினர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். அதனை மாநகராட்சி ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தி பெற்றுக் கொண்டார். இதன்படி நெல்லையில் 1.01.2023 அன்று திருத்தம் செய்யப்பட்டதன் அடிப்படையில், இறுதி வாக்களார் பட்டியல் தயார் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

மாவட்டம் முழுவதும் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் ஆண் வாக்காளர்கள் 6,68,047, பெண் வாக்களார்கள் 6,97,451 பேர் இதர வகையினர் 134 பேர் என மொத்தம் 13,65,632 வாக்களார்கள் உள்ளனர். இவற்றில் அதிகபட்சமாக திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் 2,99,623 வாக்காளர்களும், குறைந்தபட்சமாக அம்பாசமுத்திரம் தொகுதியில் 2,48,282 வாக்காளர்களும் உள்ளனர்.

மேலும் மாவட்டம் முழுவதும் 1,484 வாக்குச்சாவடிகள் உள்ளது. அதேநேரம் நெல்லையில் உள்ள ராதாபுரம் தொகுதியில் மட்டும் 5,220 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, “இறந்த வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து விரைவில் நீக்கப்படும். தொடர்ந்து பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றுதல் போன்ற நடவடிக்கைகள் நடைபெறும். ராதாபுரத்தில் வாக்காளர்கள் பட்டியலில் பெயர் நீக்கம் அதிகமாக இருக்க காரணம், அப்பகுதியில் அதிகளவு மக்கள் இடம்பெயர்ந்து சென்றதாக இருக்கும். இருப்பினும், வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்யப்படும்.

திருநெல்வேலியில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணி 60 சதவீதம் நிறைவடைந்துள்ளது” என தெரிவித்தார். மேலும் ராதாபுரம் தொகுதி தவிர மற்ற 4 தொகுதிகளில் 1,000க்கும் குறைவான வாக்காளர்கள் மட்டுமே நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 6.20 கோடி வாக்காளர்கள்: இறுதி பட்டியலை வெளியிட்ட சாகு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.