ETV Bharat / state

பயன்படுத்தாத கிரெடிட் கார்டுக்கு ரூ.17,742 பிடித்தம்.. வாடிக்கையாளருக்கு ரூ.24ஆயிரம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் ஆணை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 6, 2023, 5:21 PM IST

Etv Bharat
Etv Bharat

Tirunelveli credit card issue: திருநெல்வேலியில் பயன்படுத்தாத கிரெடிட் கார்டுக்கு மாதம் தோறும் பணம் பிடித்தம் செய்து பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளருக்கு 24 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க கோரி திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலி: நெல்லை தருவையைச் சேர்ந்தவர் அரி முத்துக்குமார் (43). இவர் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கு பாளையங்கோட்டையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் சேமிப்புக் கணக்கு உள்ளது. அரசின் ஊதியமும் இந்த வங்கி கணக்கிலேயே வரவு வைக்கப்படுகிறது. இந்த நிலையில் 2019ஆம் ஆண்டு, இவரது வரவு செலவு சிறப்பாக இருப்பதை கவனித்து இவருக்கு கிரெடிட் கார்டு வழங்க வங்கி முடிவு செய்தது. இது குறித்து அரி முத்துக்குமாரிடம் தெரிவித்த நிலையில் அவர் தனக்கு வேண்டாம் என மறுத்துள்ளார்.

ஆனால், கிரெடிட் கார்டு பெற கட்டணம் ஏதும் கட்டத்தேவையில்லை, எப்போது வேண்டுமானாலும் நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். அப்போது மட்டுமே கட்டணம் செலுத்தினால் போதும் என வங்கி தரப்பில் கூறி அவரை நிர்பந்தம் செய்து வாங்க வைத்ததாக கூறப்படுகிறது.

பின்னர் 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 200 ரூபாய் வங்கி கணக்கில் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து நவம்பர் மாதம் 326 ரூபாய், டிசம்பர் மாதம் 322 ரூபாய் என வங்கிக் கணக்கில் பணம் பிடித்தம் செய்யப்படவே உடனடியாக வங்கியைத் தொடர்பு கொண்டு, கிரெடிட் கார்டை திரும்ப கொடுத்துள்ளார். தனக்கு அந்த கார்டு தேவை இல்லை எனவும் தனது வங்கி கணக்கில் பணம் பிடித்தம் செய்ய வேண்டாம் எனவும் புகார் அளித்துள்ளார்.

ஆனால், வாடிக்கையாளரை மதிக்காத வங்கி நிர்வாகம், அவரை டெல்லியில் உள்ள கிரெடிட் கார்டு தொடர்பான நோடல் அதிகாரியையும், ஹரியானா மாநிலம் குவாரகானிலுள்ள கார்டு தொடர்பான பொது மேலாளரையும் தொடர்பு கொள்ள அறிவுறுத்தியுள்ளது. தொடர்ந்து, அவர்களது தொலைபேசி எண்ணுக்கும் புகார் அளித்துள்ளார். மின்னஞ்சல் மூலமாகவும் தனது புகாரை தெரிவித்துள்ளார். இருந்தபோதிலும், 2022ஆம் ஆண்டு வரை மாதம் தோறும் பணம் பிடித்தம் செய்யப்பட்டு இதுவரை 17 ஆயிரத்து 742 ரூபாய் வங்கிக் கணக்கில் இருந்து மொத்தம் எடுக்கப்பட்டுள்ளது.

முறையான பதில் எதையும் வங்கி நிர்வாகமும் கார்டுகள் பரிவர்த்தனையை கவனிக்கும் அதிகாரிகளோ தெரிவிக்கவில்லை. இதனை அடுத்து வழக்கறிஞர் பிரம்மா மூலம் திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் அரி முத்துக்குமார் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி க்ளாட்சன் பிளஸ்டு தாகூர், சம்பந்தப்பட்ட வங்கி சேவை குறைபாடு செய்துள்ளது என தீர்ப்பளித்தார்.

மேலும், நஷ்ட ஈடாக வங்கி சார்பில் பத்தாயிரம் ரூபாயும், நோடல் அதிகாரியும் கார்டுகளை கவனிக்கும் பொதுமேலாளரும் இணைந்து 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், வழக்கு செலவிற்கு நான்காயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என மொத்தமாக 24 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என தீர்ப்பளித்தார். அதோடு கணக்கில் பிடித்தம் செய்யப்பட்ட 17,742 ரூபாயையும் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறாக பதிவிட்டதாக வழக்கு; கோவை பாஜக தலைவரின் முன்ஜாமீன் மனு தள்ளிவைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.