ETV Bharat / state

நெல்லையில் விடிய விடிய மழை - 28 அடியாக உயர்ந்தது பாபநாசம் அணையின் நீர் மட்டம்

author img

By

Published : Oct 18, 2021, 6:58 PM IST

மழை நீடித்தால் நிலைமையை சமாளிப்பதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் இருப்பதாக தகவலளித்துள்ளனர்
முழு கொள்ளவை நெருங்குவதால் மாவட்ட கண்காணிப்பு அலுவலர், ஆட்சியர்

பாபநாசம் அணையின் நீர்மட்டம் இரண்டு நாளில் 28 அடியை எட்டியுள்ளது. முழுக் கொள்ளளவை நெருங்குவதால் மாவட்டக் கண்காணிப்பு அலுவலர், ஆட்சியர் ஆகியோர் அணையை நேரில் ஆய்வு செய்தனர். மழை நீடித்ததால் நிலைமையை சமாளிப்பதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் இருப்பதாகத் தகவலளித்துள்ளனர்.

திருநெல்வேலி: மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த இரண்டு தினங்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக பாபநாசம், மணிமுத்தாறு, மாஞ்சோலை, அம்பாசமுத்திரம் ஆகியப் பகுதிகளில் நேற்று முன்தினம் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது.

அதிகபட்சம் பாபநாசம் அணைப்பகுதியில் 275 மி.மீ., மழை பதிவானது. தொடர் மழையால் மலைப்பகுதியில் இருந்து அணையை நோக்கி காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இதன் காரணமாக மாவட்டத்தின் பிரதான அணைகளான பாபநாசம், மணிமுத்தாறு அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. குறிப்பாக, 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் கடந்த இரண்டே நாளில் 28 அடி உயர்ந்துள்ளது.

நிரம்பி வரும் அணைகள்

அதேபோல் 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம், 9 அடி உயர்ந்துள்ளது. பாபநாசம் அணைக்குத் தற்போது விநாடிக்கு 6,530 கன அடி நீரும்; மணிமுத்தாறு அணையில் விநாடிக்கு, 1,248 கன அடி நீரும் வந்து கொண்டிருக்கிறது.

அதேபோல கொடுமுடியாறு, நம்பியாறு, சேர்வலாறு ஆகிய அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன.

கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

தொடர்ந்து மலைப்பகுதியில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால், எந்த நேரமும் அணை நிரம்பும் சூழல் உள்ளது. எனவே, தாமிரபரணி ஆற்றோரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் நெல்லை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அபூர்வா ஐஏஎஸ், ஆட்சியர் விஷ்ணு உள்ளிட்ட அலுவலர்கள் இன்று பாபநாசம் அணையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அணையின் நீர்மட்டம் குறித்தும் நீர்வரத்து குறித்தும் அலுவலர்களுடன் கேட்டறிந்தனர்.

தொடர்ந்து கண்காணிப்பு அலுவலர் அபூர்வா பத்திரிகையாளர்களுக்கு அளித்தப் பேட்டியில், 'நெல்லை மாவட்டத்தில் உள்ள ஆறு அணைகளில் பாபநாசம், சேர்வலாறு ஆகிய அணைகளுக்கு மட்டும் அதிக நீர்வரத்து உள்ளது. தற்போதைக்கு நெல்லை மாவட்டத்தில் வெள்ள அபாயம் எதுவும் இல்லை; தொடர்ந்து மழை பெய்தாலும் நிலைமையை சமாளிக்கத் தயாராக இருக்கிறோம்' என்று கூறினார்.

நெல்லையில் விடிய விடிய மழை

கட்டுபாட்டுக்குள் உள்ளது

'கடந்த ஜனவரி மாதம் பாபநாசம், மணிமுத்தாறு ஆகிய இரண்டு அணைகள் நிரம்பியதால், ஒரே நாளில் 65 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டது.

ஆனால், தற்போது பாபநாசம் அணை மட்டுமே நிரம்பி வருவதால் அணைகளின் நீர்மட்டம் கட்டுக்குள் உள்ளது' என்று தெரிவித்தார். மேலும் அவர், 'பாபநாசம் அணைக்கு தற்போது 2 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

127 பாதுகாப்பு மையங்கள்

ஆகையால், 88 தாழ்வான இடங்கள் கண்டறியப்பட்டு அங்கு மீட்புப்பணிகான ஏற்பாடுகள் தயாராக உள்ளன. அதேபோல் 127 பாதுகாப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளன.

எனவே, பொதுமக்கள் யாரும் இது குறித்து அச்சப்பட வேண்டாம்' என்று விளக்கமளித்துள்ளார்.

குறிப்பாக, நெல்லை மாவட்டத்தில் இன்று மழை பெய்யாவிட்டாலும் கூட அண்டை மாநிலமான கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், முன்னெச்சரிக்கையாக அலுவலர்கள் அணைகளில் ஆய்வு நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: த(க)ண்ணீரில் மிதக்கும் கடவுளின் தேசம்: கரோனாவுக்குப் பின் பேரிடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.