ETV Bharat / state

நெல்லையில் இருந்து சென்னைக்கு பறந்த ஆசிரியரின் இதயம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 23, 2023, 8:05 AM IST

உடல் உறுப்புகள் தானம்
சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த ஆசிரியர்

Thoothukudi Teacher death: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே சாலை விபத்தில் தலையில் பலத்த காயமடைந்து மூளைச்சாவு அடைந்த ஆசிரியரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.

திருநெல்வேலி: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே கீழநாலுமூலைக்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் (33). பணிக்கநாடார் குடியிருப்பில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் இவருக்கு, திருமணமாகி ஆறு மாதத்தில் குழந்தை உள்ளது.

சதீஷ் பள்ளிக்கு, பள்ளி வாகனத்தில் செல்வது வழக்கம். இந்நிலையில், நேற்று முன்தினம் தனது இருசக்கர வாகனத்தில் பள்ளிக்குச் சென்றுள்ளார். பின்னர், வேலை முடிந்த பின்னர் பரமன்குறிச்சி வழியாக, இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குத் திரும்பியுள்ளார். அப்போது, அவர் நடுநாலுமூலைக்கிணறு பகுதியில் சென்றபோது மாடு குறுக்கே சென்றதால், நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில், தலையில் பலத்த காயமடைந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார்.

மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சாலை விபத்தில் தலையில் பலத்த காயமடைந்ததால் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு மூளைச்சாவு அடைந்ததாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, அவரது குடும்பத்தினர் சதீஷின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க முடிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து, நெல்லை மருத்துவமனையில் அவரது இதயம், கண்கள், நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகள் முறைப்படி தானமாக வழங்கப்பட்டது.

இதையடுத்து, இதயம் குறுகிய நேரத்தில் கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதால், நெல்லையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் மதுரை கொண்டு செல்லப்பட்டு பின்னர், அங்கிருந்து விமானம் மூலம் சென்னை கொண்டு செல்லப்பட்டது. மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகளை தானம் செய்த ஆசிரியரின் இறப்பு, அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவம் - பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச் சூடு - 4 வீரர்கள் வீரமரணம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.