ETV Bharat / state

'என் துன்பத்தில் துணை நின்ற அனைவருக்கும் நன்றி' - அற்புதம்மாள்

author img

By

Published : Aug 2, 2023, 10:59 PM IST

Etv Bharat பேரறிவாளன் விடுதலைக்கு ஆதரவாக இருந்தவர்களுக்கு நன்றி தெரிவித்த அற்புதம்மாள்
Etv Bharat பேரறிவாளன் விடுதலைக்கு ஆதரவாக இருந்தவர்களுக்கு நன்றி தெரிவித்த அற்புதம்மாள்

சிறைக்குள் வாடிய மகனை பாசப் போராட்டத்தால் மீட்ட அற்புதம்மாள் நெல்லையில் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சந்தித்து நன்றி தெரிவித்தார். இந்த பயணம் மூலம் உலகில் யாருக்கும் கிடைக்காத மகிழ்ச்சி தனக்கு கிடைத்திருப்பதாக அற்புதம்மாள் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

பேரறிவாளன் விடுதலைக்கு ஆதரவாக இருந்தவர்களுக்கு நன்றி தெரிவித்த அற்புதம்மாள்

திருநெல்வேலி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு சிறையில் இருந்த பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சியினரை நேரில் சந்தித்து அரசுக்கு கோரிக்கை வைத்தவர், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள். அதன் பலனாக பேரறிவாளன் சமீபத்தில் விடுதலை செய்யப்பட்டார்.

எனவே, தனது மகனின் விடுதலைக்காக சாதி, மதம், அரசியலைக் கடந்து குரல் கொடுத்த அனைத்து அமைப்புகள் மற்றும் பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அற்புதம்மாள் தமிழ்நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நெல்லை பாளையங்கோட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு அற்புதம்மாள் இன்று (ஆக.02) வருகை தந்தார்.

அப்போது நாம் தமிழர் கட்சி, மதிமுக உள்ளிட்ட அரசியல் அமைப்புகளின் நிர்வாகிகளை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். மேலும் அவர் கூறும்போது, ''உலகிலேயே யாருக்கும் கிடைக்காத மகிழ்ச்சி எனக்கு கிடைத்துள்ளது. தற்போது சட்டமே வலியவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாகத் தெரிகிறது. இந்த நிலையில் சாதாரணமான எனது போராட்டத்திற்கு சாதி, மதம், அரசியல் கடந்து அனைவரும் ஆதரித்தனர். அதற்கு தற்போது நன்றி சொல்லும் விதமாக ஊர் ஊராக சென்று வருகிறேன். தற்போது எனது மகிழ்ச்சியை அனைவரிடமும் பகிரும் வகையில் இந்த பயணத்தை மேற்கொண்டு உள்ளேன்'' என்றார்.

சிறைக்குள் வாடும் தனது மகனை காப்பாற்ற அற்புதம்மாள் மறைந்த முதலமைச்சர்கள் ஜெயலலிதா, கருணாநிதி, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்பட பல்வேறு தலைவர்களை பலமுறை நேரில் சந்தித்து மனு அளித்தார். நீதிமன்ற வாசல் ஏறி சட்டப் போராட்டமும் நடத்தினார். அற்புதம்மாளின் பாசப் போராட்டத்திற்கு தாமதமாக வெற்றி கிடைத்திருந்தாலும் அந்த வெற்றி மூலம் அடைந்துள்ள மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் தற்போது அவர் இந்தப் பயணம் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'சிறையில் இருக்க வேண்டியவர் சிறைத்துறை அமைச்சராக உள்ளார்’ - அண்ணாமலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.