14 வயதில் 100 உலக சாதனைகள்.. ஆச்சரியத்தில் ஆழ்த்தும் நெல்லை சிறுமி!

14 வயதில் 100 உலக சாதனைகள்.. ஆச்சரியத்தில் ஆழ்த்தும் நெல்லை சிறுமி!
14 year old girl who set 100 world records: 14 வயதில் அசாத்திய திறமைகளை வெளிப்படுத்தி வரும் திருநெல்வேலியைச் சேர்ந்த சிறுமி குறித்த சிறப்புத் தொகுப்பை இங்கு பார்க்கலாம்.
திருநெல்வேலி: பெற்றோர்கள் ஒவ்வொருவருக்கும் தங்கள் குழந்தைகள் ஏதாவது ஒரு துறையில் சாதனை படைக்க வேண்டும் என்ற ஆசை இயல்பாகவே இருக்கும். அந்த வகையில் திருநெல்வேலியைச் சேர்ந்த 14 வயதே நிரம்பிய சிறுமி ஒருவர் உலக அளவில் மிகக் குறைந்த வயதில் 100 உலக சாதனைகளைப் படைத்து அசத்தியுள்ளார்.
திருநெல்வேலி, வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன்-தேவி பிரியா தம்பதியின் மகள் பிரிஷா இவர் இரண்டு வயதாக இருக்கும்போதே தனது பாட்டி மற்றும் தாய் இருவரும் யோகா செய்வதைக் கவனித்ததன் தாக்கமாக இரண்டு வயதிலிருந்தே சிறுமி பிரிஷா யோகா செய்யத் தொடங்கி பல்வேறு சாதனைகளைப் புரியத் தொடங்கியுள்ளாராம்.
அதன்படி யோகாவில் இருக்கும் அனைத்து ஆசனங்களையும் முறையாக கற்றுத் தேர்ந்து அதிலும் குறிப்பாக, யோகாவில் மிகச் சவாலான ஆசனங்களான வஜ்ராசனம், அனுமன் ஆசனம், சுகாசனம், மூன்று வளைவு ஆசனம், வாமதேவ ஆசனம் என பல்வேறு ஆசனங்களை மிகச் சுலபமாக்கச் செய்து பல உலக சாதனைகளைப் படைத்துள்ளார்.
மேலும் யோகா மட்டுமல்லாமல் கண்களைக் கட்டிக்கொண்டு நீச்சல் அடிப்பது, சைக்கிள் ஓட்டுவது, கணிதம் போடுவது, ஒரு பொருளின் பெயரைத் துல்லியமாகக் கூறுவது என பல்வேறு வகைகளில் இவர் உலக சாதனைகளைப் படைத்துள்ளார்.
அந்த வகையில் ஏற்கனவே 70 உலக சாதனைகளைப் படைத்த பிரிஷா சமீபத்தில் கூடுதலாக 30 உலக சாதனைகளை ஒரே நேரத்தில் நிகழ்த்தி ஒட்டுமொத்தமாக 100 உலக சாதனைகளைப் படைத்து உலக அளவில் இளம் வயதில் 100 உலக சாதனை படைத்த முதல் சிறுமி என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
சிறுமி பிரிஷா வீட்டில், அவர் வாங்கிய விருதுகளை வைப்பதற்கு என்றே பிரத்தியேகமாக அறை ஒன்றை ஒதுக்கிக் கொடுத்துள்ளனர் அவரது பெற்றோர். அந்த அறை முழுவதும் எங்குத் திரும்பினாலும் கோப்பைகளும் தங்கப் பதக்கங்களும் பாராட்டு சான்றிதழ்களும் குவிந்து இருப்பதைக் காண முடிகிறது.
இதுகுறித்து பிரிஷா கூறுகையில், "நான் இளம் வயதில் உலக அளவில் அதிக உலக சாதனைகளைப் படைத்துள்ளேன். உலகிலேயே இளம் வயது யோகா ஆசிரியர் நான்தான் என்பது உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளேன். மேலும், சிறு வயது முதலே யோகாவினை செய்து வருவதால் எனக்கு மூன்றாம் கண் திறந்துள்ளது அதன் மூலமாகவே பல சாதனைகளைச் செய்கிறேன். நான் வாழ்நாள் முழுவதும் மேலும் பல்வேறு சாதனைகளைப் புரிய வேண்டும். யோகாசனம் குறித்த விழிப்புணர்வை உலகம் முழுவதும் ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது லட்சியம்" எனப் பெருமையோடு தெரிவித்தார்.
