ஜீரோ டிகிரி செல்சியஸ்.. பனியில் உறையும் மூணாறு!

author img

By

Published : Jan 13, 2023, 7:47 PM IST

ஜீரோ டிகிரி செல்சியஸ்.. பனியில் உறையும் மூணாறு

கேரளாவின் மூணாறில் ஏழுமலை மற்றும் தேவிகுளத்தில் ஜீரோ டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

ஜீரோ டிகிரி செல்சியஸ்.. பனியில் உறையும் மூணாறு..

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் மூணாறு சர்வதேச சுற்றுலா தலமாக விளங்குகிறது. ஆண்டு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். மேலும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை கொண்டாட வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.

இங்கு நவம்பர் முதல் குளிர்காலம் தொடங்கும். அவ்வப்போது மழை பெய்தபோதும் குளிர் அதிகரித்தே காணப்பட்டது. வெப்பநிலை 9 டிகிரியிலிருந்து 6 டிகிரி, 5 டிகிரி என படிப்படியாக குறைந்து வந்தது. இந்தநிலையில் ஏழுமலை, தேவிகுளம் ஆகிய எஸ்டேட் பகுதிகளில் இன்று காலை வெப்பநிலை 0 டிகிரியாக பதிவானதால் கடும் உறைபனி ஏற்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். சைலண்ட் வேலி, கூடர்விலா, செந்துவரா மற்றும் வட்டவாடா போன்ற இடங்களில் கடுமையான குளிர் நிலவுகிறது. சுண்டவுரை எஸ்டேட், முத்து, மாட்டுப்பட்டி, உபாசி மூணாறு, கன்னிமலை ஆகியப் பகுதிகளில் ஒரு டிகிரி செல்சியஸ் வெப்பநிலைப் பதிவானது.

அதேநேரம், சுற்றுவட்டாரப் பகுதியான வட்டவாடாவில் இன்று காலை 2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைப் பதிவாகியுள்ளது. இந்த ஆண்டின் குறைந்த வெப்பநிலை மூணாறு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை பதிவாகியுள்ளது. காலையில், பச்சை தேயிலைத் தோட்டங்கள் மெல்லிய பனியால் மூடப்பட்டு, வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கின்றன.

சூரிய உதயத்திற்குப் பிறகு பனி உருகும் மூணாறு மற்றும் அருகிலுள்ள பகுதிகள் பகலில் மிகவும் வெப்பமாகவும், காலையில் மிகவும் குளிராகவும் இருக்கும். டிசம்பர் மாதத்தில் குளிர் அதிகமாகி, ஜனவரி மாதத்தில் கடும் குளிராக மாறுவது மூணாறின் வழக்கமாக இருந்து வருகிறது.

இந்த கடும் குளிர் மூணாறில் சுமார் 20 நாட்கள் வரை இருக்கும். ஆனால், இந்த அதீத குளிர் காலை நேரத்தில் தான் உணரப்படுகிறது. புத்தாண்டு சீசன் முடிந்துள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்துள்ளது. பனி மூட்டத்தால் மூணாறு மீண்டும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் என கேரள சுற்றுலாத்துறையினர் நம்பிக்கை தெரிவித்தனர்.

இதையும் படிங்க:2024-ல் சென்னையில் "உலக முதலீட்டாளர்கள் மாநாடு" - முதலமைச்சர் அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.