2024-ல் சென்னையில் "உலக முதலீட்டாளர்கள் மாநாடு" - முதலமைச்சர் அறிவிப்பு

author img

By

Published : Jan 13, 2023, 5:05 PM IST

Etv Bharat
Etv Bharat ()

தமிழ்நாட்டில் வருகிற 2024ஆம் ஆண்டு ஜனவரி 10, 11ஆம் தேதிகளில் "உலக முதலீட்டாளர்கள் மாநாடு" (World Investors Conference 2024) 100-க்கும் மேற்பட்ட நாடுகளின் பங்களிப்புடன் சென்னையில் மிகப் பெரியளவில் நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜன.13) ஆளுநர் உரை மீதான விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசியபோது புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவையாவன பின்வருமாறு,

'கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம்: 'இந்த திட்டத்தின் அடிப்படையில் முக்கிய ஊராட்சி ஒன்றிய சாலைகளை வலுப்படுத்தவும், தரம் உயர்த்தவும், “முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம்” என்ற புதிய திட்டத்தை அரசு செயல்படுத்தும். முதற்கட்டமாக, 2 ஆண்டுகளில் 10,000 கி.மீ. அளவுக்கு ஊராட்சி ஒன்றிய சாலைகள் ரூ.4,000 கோடி மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்படும்.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்: முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் 15.9.2022 அன்று மதுரையில் தொடங்கப்பட்டது. 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கு முன்னோடி முயற்சியாக செயல்படுத்தப்பட்டது. இத்திட்டம் முதற்கட்டமாக 1,545 அரசுப் பள்ளிகளில் பயிலும் 1.14 லட்சம் மாணவர்களுக்கு அவர்களின் பள்ளியில் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், இந்த முயற்சியின் பயனாக, பள்ளிகளில் மாணவர்களின் வருகை எண்ணிக்கை வழக்கத்தைவிட அதிகரித்துள்ளது. இதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு, இந்தத் திட்டத்தினை 2023-2024ஆம் ஆண்டு, படிப்படியாக மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கும் விரிவாக்கம் செய்திட முடிவு செய்துள்ளது.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு: (World Investors Conference 2024) பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சியில், தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னணி மாநிலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இந்திய அளவில் பொருளாதாரத்தில் இரண்டாவது பெரிய மாநிலமாக தமிழ்நாடு திகழ்கின்றது.

1 டிரில்லியன் அமெரிக்க டாலர் இலக்கு: முதலீடுகளை பெருமளவில் ஈர்த்து, லட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கிடவும், மாநில பொருளாதாரத்தை வலுவடைய செய்திடவும், நான் 2030ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டினை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்தும் இலக்கை நிர்ணயித்தேன். அதனை அடைய பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்த இலக்கினை நோக்கிப் பயணம் மேற்கொள்ளும் விதமாக, பல முதலீட்டாளர்கள் மாநாடுகளை துபாய் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்டன. மேலும், உலகளவில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தொழில்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு தலைமையில் ஒரு உயர்மட்ட குழு, ஜெர்மனி, அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் மற்றும் தைவான் போன்ற நாடுகளுக்கும் அவர்கள் பயணம் மேற்கொண்டார்கள். சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரத்தில் நடைபெற்ற உலக பொருளாதார மன்றத்தின் ஆண்டுக்கூட்டம் கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

ஜன.10,11 ஆகிய தேதிகளில் மாநாடு: நம் மாநிலத்திற்கு மேலும் முதலீடுகளை ஈர்த்து, வேலைவாய்ப்புகளை உருவாக்கி, பொருளாதாரம் வளர்ச்சி அடைவதற்காக, “உலக முதலீட்டாளர்கள் மாநாடு” வரும் 2024ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 10, 11ஆம் நாட்களில், 100-க்கும் மேற்பட்ட நாடுகளின் பங்கேற்புடன், பெருமளவில் பிரமாண்டமாக சென்னையில் நடத்தப்படும்' என்று அறிவித்துள்ளார்.

முதலமைச்சரின் இந்த அறிவிப்பால், தமிழ்நாட்டில் புதிய தொழிற்சாலைகள் ஏற்படவும் அதன்மூலம் வேலையில்லாத பட்டதாரிகளுக்கு வேலைகள் கிடைக்கவும் வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க: சென்னையில் ஜல்லிக்கட்டு...போடு ஜோர்! - அமைச்சர் சொன்ன குட் நியூஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.