ETV Bharat / state

வனத்துறையினரால் சுடப்பட்ட விவசாயியின் உடலை வாங்க மறுத்து போராட்டம்... போலீசார் - உறவினர்கள் இடையே கைகலப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 29, 2023, 5:50 PM IST

Etv Bharat
Etv Bharat

Forest department shot dead a farmer in Theni:தேனி மாவட்ட வனத்துறையால் துப்பாக்கியால் சுட்டு விவசாயி உயிரிழந்த நிலையில், 'வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்காமல் உடலை வாங்கமாட்டோம்' என அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், போலீசாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வனத்துறையினரால் சுடப்பட்ட விவசாயியின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

தேனி: விவசாயி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் உடலை வாங்க மாட்டோம் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை போலீசார் கைது செய்ய முற்பட்ட நிலையில், இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

தேனி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள குள்ளப்பகவுண்டன்பட்டி கிராமத்தை சேர்ந்த ஈஸ்வரன் (வயது 51), நேற்று இரவு வண்ணத்திப்பாறை பகுதியில் உள்ள தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்று இருக்கிறார். இந்நிலையில் வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து வனத்துறையினரை கத்தியை காட்டி மிரட்டியதாக கூறி, அவரை வனத்துறையினர் சுட்டுக் கொன்றதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து விவசாயி ஈஸ்வரனின் உறவினர்கள் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். துப்பாக்கியால் சுட்ட வனத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என அவர்களது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட அவரது உறவினர்களை போலீசார் கைது செய்ய முற்பட்டபோது, போலீசாருக்கும் உறவினர்களுக்கும் இடையெ கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் கூறியதை அடுத்து உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

நீதிபதி விசாரணை: இந்த சம்பவத்தில் உயிரிழந்த விவசாயி ஈஸ்வரனின் குடும்பத்தினரிடம் உத்தமபாளையம் நீதிபதி ராமநாதன், விசாரணை மேற்கொண்டார். மேலும், மருத்துவமனையில் விவசாயியின் உடலை உடற்கூராய்வு செய்வதை முழு காணொளியாக பதிவு செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: தேனியில் தோட்ட வேலைக்குச் சென்றவரை சுட்டுக் கொன்ற வனத்துறையினர் - உறவினர்கள் சாலை மறியல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.