ETV Bharat / state

யார் தீபம் ஏற்றுவது? ஓபிஎஸ் குடும்பம் - திமுகவினர் இடையே மோதல்!

author img

By

Published : Dec 7, 2022, 8:29 AM IST

கார்த்திகை தீபம் ஏற்றுவதில் ஓபிஎஸ் குடும்பத்தார் திமுகவினர் இடையே மோதல்
கார்த்திகை தீபம் ஏற்றுவதில் ஓபிஎஸ் குடும்பத்தார் திமுகவினர் இடையே மோதல்

பெரியகுளம் கைலாசநாதர் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்ச்சியில் ஓபிஎஸ் குடும்பத்தினர், திமுக மற்றும் அதிமுக இடையே யார் தீபம் ஏற்றுவது என்ற போட்டியால் பக்தர்கள் முகம் சுளித்தனர்

தேனி: பெரியகுளம் அருகே உள்ள கைலாசப்பட்டியில் அமைந்துள்ள கைலாசநாதர் கோயில் பல ஆண்டுகளாகப் பாழடைந்த நிலையிலிருந்து. பின்னர் ஓபிஎஸ் குடும்பத்தினரின் முயற்சியால் கோயில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கடந்த 14 ஆண்டுகளாக ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்தினர் கார்த்திகை தீபத் திருநாள் அன்று தீபம் ஏற்றி வந்தனர்.

மேலும் கோயிலுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தந்தனர். இதனால் கடந்த 14 ஆண்டுகளாக ஓபிஎஸ் மற்றும் அவரது குடும்பத்தார் மட்டுமே தீபம் ஏற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த சூழலில் இந்த கோயில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில் இந்த ஆண்டு கார்த்திகை தீபத்தை ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் தீபம் ஏற்று அனுமதிக்கக் கூடாது எனத் தங்கத் தமிழ்ச்செல்வன், திமுக சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் ஆகியோர் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களிடம் மனு அளித்தனர்.

கார்த்திகை தீபம் ஏற்றுவதில் ஓபிஎஸ் குடும்பத்தார் திமுகவினர் இடையே மோதல்

நேற்று(டிசம்பர் 6) கார்த்திகை தீபத்தை முன்னிட்டு கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தேனி திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் தங்கத் தமிழ்ச்செல்வன், பெரியகுளம் எம்எல்ஏ சரவணகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் தீபம் ஏற்றும் நிகழ்வில் பங்கேற்றனர்.

அதே சமயம் ஓ.பன்னீர்செல்வத்தின் இளைய மகன் ஜெயபிரதீப் மற்றும் அவரது குடும்பத்தினர் என பலரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது ஓபிஎஸ்சின் இளைய மகன் ஜெயபிரதீப்புக்கு பரிவாரம் கட்டப்பட்ட நிலையில், இதற்கு தங்கத்தமிழ் செல்வன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது தங்கத் தமிழ்ச்செல்வன், ஜெயப்பிரதீப் மற்றும் அதிமுகவினர், திமுகவினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த சூழலில் ஜெயபிரதீப் கையில் வைத்திருந்த விளக்கைக் கோயில் பூசாரி பெற்றுக் கார்த்திகை தீபத்தை ஏற்றி வைத்தார். இதனால் ஆத்திரமடைந்த தங்கத் தமிழ்ச்செல்வன் மற்றும் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் ஆகியோர் அந்த இடத்தை விட்டு ஆவேசமாகக் கிளம்பிச் சென்றனர். பின்னர் அங்கிருந்தவர்களிடம் பேசிய ஜெயப்பிரதீப் திமுகவினர் அரசியல் காரணங்களுக்காக இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், அவர்களை மக்களும் தெய்வமும் பார்த்துக் கொள்வார்கள் என ஆவேசமாக முழங்கினார்.

இந்த சூழலில் தங்கத் தமிழ்செல்வன், தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் வீட்டிற்குச் சென்று இந்து அறநிலையத்துறைக்குச் சம்பந்தப்பட்ட கோயில் ஓபிஎஸ் பிடியில் இருப்பதாகக் கூறி புகார் அளித்தார். திமுக, அதிமுகவினரின் செயல்களால் கார்த்திகை தீபத்தைக் காண வந்த பக்தர்கள் முகம் சுளித்தனர்.

இதையும் படிங்க: தேனியில் மதுபானக்கடையினை அடைக்கக்கோரி நூதனப்போராட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.