ETV Bharat / state

Video Leaked: கோர்ட் முன்பு மனைவியை கார் ஏற்றி கொலை செய்ய முயற்சி.. தேனியில் நிகழ்ந்த பகீர் சம்பவம்!

author img

By

Published : Jun 13, 2023, 11:31 AM IST

husband tried to kill wife
மனைவியை கொல்ல முயன்ற கணவன்

போடிநாயக்கனூர் நீதிமன்றம் முன்பு விவாகரத்து வழக்கிற்காக ஆஜராக வந்த மனைவியை காரை வைத்து ஏற்றி கொல்ல முயற்சி செய்த கணவன்

சிசிடிவி காட்சி

தேனி: தேவாரம் பகுதியில் வசித்து வரும் ரமேஷ் மற்றும் மணிமாலா தம்பதியினர் இடையே நிலவி வந்த கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருவரும் விவகாரத்து பெற்றுவிட்டனர்.

இந்த விவாகரத்து வழக்கில் மணிமாலா தனது கணவர் ரமேஷிடம் ஜீவனாம்சம் கேட்டு நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். இந்நிலையில் நேற்று அந்த வழக்கு தொடர்பாக போடி நீதிமன்றத்தில் ஆஜரான மணிமாலா, மதியம் இரண்டு மணி அளவில் நீதிமன்றத்திலிருந்து போடி பேருந்து நிலையத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது நீதிமன்ற வளாகம் அருகே நின்று கொண்டிருந்த டவேரா கார் ஒன்று அதிவேகமாக வந்து, நடந்துச் கொண்டிருந்த மணிமாலாவின் மீது பலமாக மோதியது. இதில் முன் பகுதி சக்கரத்தின் இடையே சிக்கிக்கொண்ட மணிமாலா பலத்த காயமடைந்தார்.

அப்போது நீதிமன்ற வளாகம் முன்பு நின்று கொண்டிருந்த பொதுமக்கள் இந்த அதிர்ச்சியான சம்பவத்தை கண்டு உடனடியாக டவேரா கார் ஓட்டி வந்த ஓட்டுநர் பாண்டித்துரையை பிடித்து காவல்துறை வசம் ஒப்படைத்தனர். பலத்த காயம் அடைந்த மணிமாலாவை சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: ரூ.500 கொடுத்தால் ரூ.2000.. போலீஸ் சீருடையில் ரூ.37 லட்சம் நூதன கொள்ளை.. வேலூரில் நடந்தது என்ன?

இந்த கொலை முயற்சி தொடர்பாக மணிமாலாவின் கணவர் ரமேஷை போடி டிஎஸ்பி பெரியசாமி தலைமையிலான காவல் சிறப்புப்படை அமைத்து தேடி வந்தனர். விபத்து நடந்த சுமார் இரண்டு மணி நேரத்திலேயே போலீஸார் தீவிர விசாரணை செய்து மணிமாலாவின் கணவர் ரமேஷ் இருக்கும் இடத்தை அறிந்து அங்குச் சென்று அவரை கைது செய்தனர்.

மேலும், மணிமாலாவின் மீது கார் ஏற்றி விபத்து ஏற்படுத்திக் கொல்ல முயற்சி செய்த டவேரா காரை கைப்பற்றி போடி நகரக் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். கைது செய்யப்பட்ட ரமேஷ் மற்றும் ஓட்டுநர் பாண்டித்துரை ஆகிய இருவரிடமும் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போடிநாயக்கனூர் நீதிமன்றம் முன்பு விவாகரத்து வழக்கிற்காக ஆஜராக வந்த மனைவியை கணவன் தூண்டுதலின் பேரில் கார் ஏற்றி கொலை செய்ய முயன்ற சம்பவம் தேனி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை வழக்கு: ஜூன் 16ம் தேதி விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.