ETV Bharat / state

பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை வழக்கு: ஜூன் 16ம் தேதி விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பு!

author img

By

Published : Jun 12, 2023, 8:18 PM IST

பெண் எஸ்.பி.க்கு, சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் விசாரணை நிறைவு பெற்ற நிலையில் வரும் 16-ம் தேதி விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.

villuppuram court
விழுப்புரம் நீதிமன்றம்

விழுப்புரம்: கடந்த 2021-ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பாதுகாப்பு பணிக்கு சென்றிருந்த பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக தமிழக காவல்துறையில் சிறப்பு டிஜிபியாக பதவி வகித்தவர் மீது பெண் எஸ்பி ஒருவர் புகார் அளித்திருந்தார்.

உயர் மட்டத்தில் இருக்கும் ஒரு பெண் காவல்துறை அதிகாரிக்கே போதிய பாதுகாப்பில்லை என பல அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் தமிழகம் முழுவதும் இச்சம்பவம் தொடர்பாக விவாத பொருளானது. இதனையடுத்து புகாருக்குள்ளான சிறப்பு டிஜிபி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக செங்கல்பட்டு எஸ்பி ஆகியோர் பணியிட நீக்கம் செய்யப்பட்டனர். அத்துடன் இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸாரால் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து விழுப்புரம் சிபிசிஐடி போலீஸார், முன்னாள் சிறப்பு டிஜிபி, செங்கல்பட்டு முன்னாள் எஸ்பி ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் விழுப்புரத்தில் உள்ள தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆயிரம் பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

இதனைத்தொடர்ந்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கி நேற்று வரை கிட்டத்தட்ட 138 முறை வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளர், முன்னாள் உள்துறை செயலாளர், சீருடை பணியாளர் தேர்வாணைய டிஜிபி உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட சாட்சியங்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அந்த சாட்சியங்களிடம் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் முன்னாள் சிறப்பு டிஜிபி மற்றும் செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை நடத்தி முடித்துள்ளனர்.

தற்போது சாட்சியங்களிடம் விசாரணை, குறுக்கு விசாரணைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு மற்றும் குற்றச்சாட்டிற்குள்ளான முன்னாள் சிறப்பு டிஜிபி, முன்னாள் செங்கல்பட்டு எஸ்பி ஆகியோர் தரப்பினர் தங்களது இறுதி வாதத்தை எழுத்துப்பூர்வமாக தனித்தனியாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

இதனையடுத்து இவ்வழக்கில் அனைத்து விசாரணையும் நிறைவு பெற்றுவிட்டதாக அறிவித்த நடுவர் புஷ்பராணி, வரும் 16-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும், என்றும் தீர்ப்பு வழங்கப்படும் நாளன்று குற்றச்சாட்டிற்கு உள்ளான முன்னாள் சிறப்பு டிஜிபி, முன்னாள் செங்கல்பட்டு எஸ்பி ஆகியோர் நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டு, வழக்கை வரும் 16-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

பெண் எஸ்பிக்கு முன்னாள் சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட அதி முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் அனைத்து தரப்பினராலும் உற்று நோக்கக்கூடிய இந்த வழக்கில் வரும் 16-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளதால் இவ்வழக்கு பெரும் எதிர்பார்ப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: "யார் ஆட்சியில் ஊழல் அதிகம்" - ஸ்டாலினுக்கு சவால் விடுத்த அண்ணாமலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.