ETV Bharat / state

வண்டலூருக்கு கொண்டுவரப்பட்ட நீலகிரி ஆட்கொல்லி சிறுத்தை..! மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பு..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 9, 2024, 10:13 PM IST

nilgiri leopard
வண்டலூருக்கு கொண்டுவரப்பட்ட நீலகிரி ஆட்கொல்லி சிறுத்தை

Nilgiri leopard: நீலகிரி மாவட்டம் பந்தலூரில் இருவரைத் தாக்கிக் கொன்ற ஆட்கொலி சிறுத்தையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்திப் பிடித்து வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சென்னை: நீலகிரி மாவட்டம், பந்தலூரில் தேயிலைத் தோட்டத்தில் நடமாடி வந்த சிறுத்தை ஒன்று கடந்த மாதம் தேயிலைத் தோட்டத்தில் பணியில் இருந்த மூன்று பெண்களைப் பலமாகத் தாக்கியது. இதில், காயமடைந்த மூவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருந்த நிலையில் சரிதா என்கிற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அதேபோல், கடந்த வாரம் மீண்டும் பந்தலூரில் சிறுத்தை தாக்கியதில் சிறுமி ஒருவர் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார். இதனால், அப்பகுதி மக்கள் கடும் பீதியில் இருந்து வந்தனர். மேலும், சிறுத்தையை உடனடியாக பிடிக்க வனத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.

அதன் அடிப்படையில், வனத்துறை அதிகாரிகள் பந்தலூரில் தேயிலைத் தோட்டம் உள்ளிட்ட சுமார் ஆறு இடங்களில் சிறுத்தையைப் பிடிக்கக் கூண்டுகளை அமைத்துக் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில், பந்தலூர் மேங்கோரேஞ்ச் பகுதியில் தாயுடன் சென்ற மூன்று வயது சிறுமியை சிறுத்தை தாக்கி இழுத்துச் சென்றது.

இதன் பின்னர், பலத்த காயங்களுடன் சிறுமையை மீட்ட பொதுமக்கள் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சிறுமியும் உயிரிழந்தார். இதனால், அப்பகுதியில் பெறும் பதற்றம் நிலவியது உடனடியாக சிறுத்தையைப் பிடிக்கக் கோரி, அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே, சிறுத்தையைப் பிடிக்க வனத்துறை அதிகாரிகள் பாதுகாப்பிற்காக இரண்டு கும்கி யானைகளை வரவழைத்து தீவிரமாகக் களத்தில் இறங்கி சிறுத்தையைத் தேடி வந்தனர். இதை அடுத்து, ஆம்பரோஸ் என்ற பகுதியில் புதரில் பதுங்கி இருந்த சிறுத்தையை முதுமலை புலிகள் காப்பகத்தின் கால்நடை மருத்துவர் ராஜேஷ் யானை மீது அமர்ந்தவாறு துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையைப் பிடித்தனர்.

இதன் பின்னர், மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கப்பட்ட சிறுத்தை நேற்று (ஜன.08) மாலை சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள மீட்பு மற்றும் புணர் வாழ்வு மையத்திற்குக் கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து, சிறுத்தையைக் கூண்டில் அடைத்து தீவிரமாக மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.

இது குறித்து, வண்டலூர் உயிரியல் பூங்காவின் உதவி இயக்குனர் மணிகண்டன் கூறுகையில், "வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள மீட்பு மற்றும் புனர்வாழ்வு மையத்தில் காடுகளில் மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கப்படும் விலங்குகள் அழைத்துவரப்பட்டு பாதுகாத்து உடலில் உள்ள காயங்கள் மற்றும் நலனுக்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு கண்காணிக்கப்படும்.

இதன் பிறகு, இங்கிருந்து விலங்குகள் மீண்டும் அடர்ந்த காடுகளுக்குக் கொண்டு சென்று விடப்படும். அதன் அடிப்படையில் நீலகிரி மாவட்டம் பந்தலூரில், மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கப்பட்ட இருவரைத் தாக்கி கொன்ற ஆட்கொல்லி சிறுத்தையின் உடல் தன்மையை அறிவதற்காக பந்தலூரில் இருந்து வாகனம் மூலம் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

பூங்காவில் அடைக்கப்பட்டுள்ள இந்த சிறுத்தைக்குக் காயங்கள் ஏதாவது ஏற்பட்டுள்ளதா? நோய் வாய்ப்பட்டுள்ளதா? தொற்று ஏதேனும் ஏற்பட்டுள்ளதா? போன்ற மருத்துவ ரீதியாகப் பரிசோதனைகள் செய்ய உள்ளது. இதனால் தொடர்ந்து, மருத்துவர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேலும், அந்த சிறுத்தைக்குத் தேவையான அனைத்து மருத்துவச் சிகிச்சைகளும் அளித்து வருகின்றனர். அதன் பிறகு சிறுத்தையை மீண்டும் அடர்ந்த வனப்பகுதியில் விடுவதா? அல்லது தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் வைப்பதா? என ஆலோசனை செய்து வனத்துறை அதிகாரிகள் மற்றும் மீட்பு புணர்வாழ்வு மைய அதிகாரிகள் முடிவு எடுப்பார்கள்" என தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: நாமக்கல் ஆஞ்சநேயருக்கு தயாராகும் வடை மாலை: 1 லட்சம் வடைகள் சுடும் பணி தீவிரம்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.