ETV Bharat / state

மீண்டும் இயங்குமா குன்னூர் மணிக்கூண்டு?

author img

By

Published : Aug 20, 2021, 4:02 PM IST

Updated : Aug 20, 2021, 4:12 PM IST

மீண்டும் இயங்குமா குன்னூர் மணிக்கூண்டு?
மீண்டும் இயங்குமா குன்னூர் மணிக்கூண்டு?

குன்னூரின் அடையாளமாக விளங்கும், செயலிழந்து நிற்கும் சுவிட்சர்லாந்தில் தயாரிக்கப்பட்ட மணிக்கூண்டை மீண்டும் இயங்கச் செய்து முறையாக பராமரிக்க, நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உலகின் மிகப் பழமையான மலைத்தொடர்களுள் ஒன்றான மேற்குத்தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளது குன்னூர். மலைகளின் இளவரசியான உதகையில் இருந்து 19 கிமீ தொலைவில் அமைந்துள்ள குன்னூரானது, சுற்றுலாப் பயணிகளின் பட்டியலில் மறுக்க முடியாதது.

கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மூன்று மாநில சந்திப்புப் புள்ளியின் அருகே அமைந்திருப்பது குன்னூரின் மற்றுமோர் தனிச்சிறப்பு.

பிரம்மாண்ட மணிக்கூண்டு அமைப்பு

பசும்புல்வெளிகள், அடர்த்தியான சோலைகள், எழில் கொஞ்சும் அருவிகள், சிற்றோடைகள், பரந்து விரிந்த தேயிலைத் தோட்டங்கள், கண்கவர் காட்சி முனைகள், அரிதான தாவரங்கள், விலங்கினங்கள், மேகக் கூட்டங்கள் என இன்புற வைக்கும் இயற்கைச் சூழலினால் மனதிற்கு இதமளிக்கக்கூடிய இடமாக திகழ்கிறது குன்னூர்.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த குன்னூரின் பேருந்து நிலையமானது 66 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது. இந்த பேருந்து நிலையம் கட்டப்பட்ட போது, சுவிட்சர்லாந்து நாட்டில் தயாரிக்கப்பட்ட கடிகாரம் பொருத்தப்பட்ட மணிக்கூண்டு அமைக்கப்பட்டது.

அப்போதைய கல்கத்தாவில் இருந்த ஸ்டீல் இண்ட் நிறுவனத்தின் மூலம், இந்த மணிக்கூண்டு 1955ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. சாவி கொடுத்த பின்னர், இரும்பு பாரத்தில் தானியங்கியாக இயங்கும் இந்த பிரமாண்ட கடிகாரமானது, ஒவ்வொரு மணி நேரத்திற்கும் மணியோசை எழுப்பக் கூடியது.

மணிக்கூண்டே குன்னூரின் அடையாளம்

இத்தகைய சிறப்பு வாய்ந்த மணிக்கூண்டை நகராட்சி மேலாளராக இருந்த காதர் பராமரித்து வந்தார். அவரது இறப்புக்கு பிறகு மணிக்கூண்டானது பராமரிப்பின்றி நின்று போனது. அதனைத் தொடர்ந்து கடந்த 2006ஆம் ஆண்டு நகராட்சி நிர்வாகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்த சந்திரன், மணிக்கூண்டை பராமரித்து இயங்க வைத்தார்.

இதுகுறித்து சந்திரன் பேசுகையில், “முன்னர் குன்னூர் வரும் சுற்றுலாப் பயணிகள், இந்த மணிக்கூண்டை கண்டு வியக்கத்தக்க வகையில் சிறப்பாக இயங்கி வந்தது. நான் பணியில் இருந்தபோதும், 2014ஆம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்றபோதும் இந்த மணிக்கூண்டை பராமரித்து வருகிறேன்.

இதற்காக எனது சொந்த பணத்தையே செலவிடுகிறேன். குன்னூர் பேருந்து நிலையம் தொடங்கப்பட்டபோது நிறுவப்பட்ட மணிக்கூண்டே, அப்போதைய குன்னூரின் அடையாளம். இதனை காலத்தால் அழிந்து விடாமல், முறையாக சரி செய்து வரும்தலைமுறையினர் காண வழிவகை செய்யவேண்டும்” என்றார்.

சுவிட்சர்லாந்து பாணியில் உருவாக்கம்

அனைத்து மக்களிடமும் கைக்கடிகாரமும், அலைபேசியும் வந்துவிட்ட காலத்திலும், மணிக்கூண்டில் நேரம் காண்பது உள்ளூர இன்பம் தருவதாகவே இருக்கிறது என கூறுகின்றனர் உள்ளூர் வாசிகள்.

இதுகுறித்து மஞ்சுளா பேசுகையில், “புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்கும் குன்னூரின் அடையாளமே இந்த மணிக்கூண்டுதான். சுவிட்சர்லாந்தின் கடிகார பாணியிலேயே, மணிக்கூண்டானது நிறுவப்பட்டிருக்கிறது.

இந்த சிறப்பு வாய்ந்த மணிக்கூண்டை முறையாக பராமரித்தால், குன்னூர் வரும் சுற்றுலாப் பயணிகளும், உள்ளூர்வாசிகளும் மகிழ்ச்சியுறுவர்” என்றார்.

மலருமா மணிக்கூண்டு?

நேரத்தின் அருமையை உணராதவர் எவருமல்ல. நம் நல் அடையாளங்களை அழியாமல் பாதுகாத்து, வரும் தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் பாதுகாப்பதே ஓர் நல் அரசு நிர்வாகத்தின் கடமை.

அதன்படி செயல்படாமல் இருக்கும் குன்னூர் மணிக்கூண்டை சரி செய்து பராமரிக்க, நகராட்சி நிர்வாகம் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குன்னூரின் அடையாளம் மீண்டும் மலருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க: பிட்டுக்கு மண் சுமந்த லீலை: பக்தர்கள் இன்றி நடைபெற்ற பிட்டு திருவிழா!

Last Updated :Aug 20, 2021, 4:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.