ETV Bharat / state

நீலகிரியில் காட்டெருமை தாக்கியதில் முதியவர் உயிரிழப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 25, 2023, 11:10 PM IST

old-man-dies-after-being-attacked-by-bison
old-man-dies-after-being-attacked-by-bison

Bison Attack Oldman Died: காட்டெருமை தாக்கியதில் பழனிவேல் என்ற முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து மேல் குன்னூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் 65% வனப்பகுதியை கொண்ட மாவட்டமாகும். இங்கு வன விலங்குகளான காட்டெருமைகள், புலிகள், சிறுத்தைகள், கரடிகள் என பல்வேறு வனவிலங்குகள் அதிகளவில் உள்ளன. குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தில் காட்டெருமைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகின்றன.

நீலகிரி மாவட்டம் குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நஞ்சப்பசத்திரம் பகுதியை சேர்ந்தவர் பழனிவேல்(70). இவருக்கு பழனியம்மாள் என்ற மனைவியும் ஐந்து மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளதாக கூறப்படுகிறது. பழனிவேல் தோட்டக்கலை துறை பண்ணையில் ஊழியராக பணிபுரிந்து ஓய்வுப் பெற்றவர் என்று கூறுகின்றனர். இந்நிலையில், இன்று (ஆக.25) மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்பொழுது சாலையில் குறுக்கே வந்த காட்டெருமை ஒன்று பழனிவேலை திடீரென பயங்கரமாக தாக்கியது. இதில் பழனிவேலின் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையும் படிங்க: மின்சாரம் தாக்கி இளைஞர் பலி.. வேலைக்காக அழைத்துச் சென்றவர் வீடு சூறை!

இதனைத்தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பெயரில், குன்னூர் வனத்துறையினர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் பழனிவேலை மீட்டு குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், பழனிவேல் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, பழனிவேலின் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக குன்னூர் அரசு மருத்துவமனையில் வைத்துள்ளனர்.

காட்டெருமை தாக்கியதில் முதியவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், காட்டெருமை தாக்கியது குறித்து மேல் குன்னூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் குன்னூர் வனத்துறையினர் சார்பாகவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: குற்றாலத்தில் திடீர் தீ விபத்து.. 50 கடைகளில் இருந்த 5 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.