ETV Bharat / state

கும்பகோணம் சோமேஸ்வரசுவாமி திருக்கோயிலில் திருமுறை திருவீதியுலா!

author img

By

Published : Jan 8, 2023, 8:30 PM IST

தமிழ்நாட்டில் வேறு எங்கும் காண முடியாத சைவத்திருமுறைகள் பன்னிரெண்டையும் இறைவன் திருமேனிபோல சிவ வடிவமாக அலங்கரித்து, அதற்கு விசேஷ சிவபூஜை செய்து மங்கல வாத்தியங்கள் முழங்க, திருவீதியுலாக கொண்டு வரும் ஆன்மிக வைபவம் திருமுறை திருவீதியுலா கும்பகோணம் வியாழ சோமேஸ்வரசுவாமி திருக்கோயிலில் நடைபெற்றது.

கும்பகோணம் சோமேஸ்வரசுவாமி திருக்கோயிலில் திருமுறை திருவீதியுலா
கும்பகோணம் சோமேஸ்வரசுவாமி திருக்கோயிலில் திருமுறை திருவீதியுலா

கும்பகோணம் சோமேஸ்வரசுவாமி திருக்கோயிலில் திருமுறை திருவீதியுலா!

தஞ்சாவூர்: திருக்குடந்தை சிவனடியார் திருக்கூட்ட 75ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, கும்பகோணம் சோமேஸ்வரசுவாமி திருக்கோயிலில் இன்று பன்னிரெண்டு சைவத்திருமுறைகளை சிவலிங்கமாக அலங்கரித்து, அதற்கு சிறப்பு பூஜைகளுடன் ஆராதனைகள் செய்து, அதனை வீதியுலா கொண்டு வரும் வைபவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான சிவனடியார்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

1948ஆம் ஆண்டு தருமை ஆதீனம் 25ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அருளாசியுடன் துவங்கப்பெற்றது, திருக்குடந்தை சிவனடியார் திருக்கூட்டம். இதில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உறுப்பினராக உள்ளனர். இவர்கள் ஞாயிறுதோறும் தமிழ்நாடெங்கும் உள்ள சிவாலயங்களுக்குச் சென்று திருமுறைகளை ஓதி வழிபாடு செய்வது வழக்கம்.

இவ்வமைப்பின் 75ஆம் ஆண்டு நிறைவினை முன்னிட்டு, கும்பகோணம் வியாழ சோமேஸ்வரர் திருக்கோயிலில் அமையப்பெற்றுள்ள பஞ்சாகரக்கோயில் (சிவாய நம எனும் 5 எழுத்து மந்திரத்தை கையினால் நூல் ஒன்றுக்கு லட்சம் முறை எழுதப்பெற்ற 100 நூல்கள் அடங்கிய குறிப்பேட்டு பெட்டகம்) முன்பு தேவாரம், திருவாசகம், பெரியபுராணம் உள்ளிட்ட பன்னிரெண்டு சைவத்திருமுறை நூல்களையும்; இறைவன் திருமேனி போல சிவ வடிவமாக அழகாக அலங்கரித்து, மலர் மாலைகள் சூட்டி, சிவனடியார்கள் அதற்கு சிவபூஜைகள் நடத்தி வணங்கி மகா தீபாராதனை செய்யப்பட்டது.

அதனைத்தொடர்ந்து திருமுறை பாராயணத்துடன் கும்பகோணம் வியாழ சோமேஸ்வரர் திருக்கோயிலில் இருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க, சைவத்திருமுறை வீதியுலா தொடங்கி, முக்கிய வீதிகள் வழியாக ஆதிகும்பேஸ்வரசுவாமி திருக்கோயிலை சென்றடைந்தது. பின்னர், அங்கு நாயன்மார்கள் அறுபத்து மூவருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் பல்வேறு பாகங்களில் இருந்தும் ஏராளமான சிவனடியார்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர். இது போன்று சைவத்திருமுறை வீதியுலா நிகழ்ச்சி தமிழ்நாட்டில் வேறு எங்கும் காண முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அபயாம்பிகை யானைக்கு பொன்விழா எடுத்து கொண்டாடிய மயிலாடுதுறை பக்தர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.