ETV Bharat / state

அபயாம்பிகை யானைக்கு பொன்விழா எடுத்து கொண்டாடிய மயிலாடுதுறை பக்தர்கள்

author img

By

Published : Jan 8, 2023, 5:23 PM IST

மயிலாடுதுறையில் உள்ள மயூரநாதர் கோயிலில் அபயாம்பிகை பெண் யானை கோயிலுக்கு வருகை தந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு பொன்விழா ஆண்டு பக்தர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அபயாம்பிகை யானைக்கு 50; விழா எடுத்து கொண்டாடும் பக்தர்கள்
அபயாம்பிகை யானைக்கு 50; விழா எடுத்து கொண்டாடும் பக்தர்கள்

அபயாம்பிகை யானைக்கு பொன்விழா எடுத்து கொண்டாடிய மயிலாடுதுறை பக்தர்கள்

மயிலாடுதுறையில் தேவாரப் பாடல்கள் பெற்ற 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மயூரநாதர் ஆலயம் அமைந்துள்ளது. இத்தலம், மயில் சிவபெருமானை பூஜித்த தலம் எனப்போற்றப்படுகிறது. திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான இந்த ஆலயத்திற்கு 1972ஆம் ஆண்டு மூன்று வயது குட்டியாக அபயாம்பிகை யானை அழைத்துவரப்பட்டது. மூன்று தலைமுறைகளாக யானை பாகன்கள் குடும்பத்தினர், யானையைப் பராமரித்து வருகின்றனர்.

மயிலாடுதுறை மக்களின் செல்லப்பிள்ளையாக மயிலாடுதுறை அடையாளங்களில் ஒன்றான இந்த யானை மயிலாடுதுறையில் நடைபெறும் அனைத்து ஆலய விழாக்களிலும் முன்னே செல்வது வழக்கம். யானை மயிலாடுதுறைக்கு வருகை புரிந்து 50 ஆண்டுகள் நிறைவு பெற்றதை பொதுமக்களும் யானை ரசிகர்களும் இன்று பொன்விழாவாக கொண்டாடினர்.

இரண்டு நாள் நடைபெற்ற நிகழ்ச்சியில் நேற்று காவிரி ஆற்றிலிருந்து புனித நீர் யானை மேல் ஏற்றிக்கொண்டு வரப்பட்டு யாகசாலை அமைத்து, அதில் புனித நீர் வைத்து பூஜிக்கப்பட்டது. தொடர்ந்து கரும்பு, அச்சு வெல்லம், பொரி கடலை, பழ வகைகள், கிழங்கு வகைகள், இனிப்புகள் மற்றும் குளிர்பானங்கள் ஆகியவற்றை பொதுமக்கள் மேளதாளங்கள் முழங்க சீர்வரிசையாக எடுத்து வந்து பாசத்துடன் யானைக்கு வழங்கினர்.

மேலும் நிகழ்ச்சியில் திருவாவடுதுறை ஆதீன மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள், மயிலாடுதுறை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார், நகராட்சி நகர்மன்றத் தலைவர் செல்வராஜ் மற்றும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர். பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்து யானையுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த திருவாவடுதுறை ஆதீனம் கூறுகையில், 'காடுகளில் உள்ள யானைகள் உணவு இல்லாமல் நகரங்களில் உள்ள வீடுகளில் புகுந்து சேதப்படுத்துகிறது. திருக்கோயில்களை கட்டி வைத்து அரசர்கள் கோயிலுக்கு யானைகளைக் கொடுத்துள்ளனர். அதுபோல் தமிழ்நாடு அரசும் அனைத்து கோயில்களுக்கும் யானைகளை வழங்கி, யானைகளைப் பாதுகாக்க வேண்டும்' என்றார்.

இதையும் படிங்க:ஜோஷிமத் நில அதிர்வு - பிரதமரின் முதன்மைச் செயலாளர் உயர்மட்ட ஆலோசனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.