ETV Bharat / state

திமுக மீது வழக்கு போட்டு யாரும் ஜெயிக்க முடியாது - ஆர்.எஸ்.பாரதி பேச்சு

author img

By

Published : Jun 23, 2023, 10:18 AM IST

கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் பங்கேற்ற திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி
கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் பங்கேற்ற திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி

தஞ்சையில் திமுக சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி மத்திய அரசை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

ஆர்.எஸ்.பாரதி பேச்சு

தஞ்சாவூர்: கும்பகோணம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில், கும்பகோணம் அருகேயுள்ள ஆரியப்படை வீடு ஊராட்சி சமத்துவபுரத்தில் நேற்று இரவு கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதனை திமுக ஒன்றியச் செயலாளரும், தஞ்சை மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் எஸ்.கே முத்துச்செல்வம் தலைமை தாங்கினார். இதில் அரசு தலைமை கோவி செழியன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த பொதுக் கூட்டத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், “திமுகவை யாராலும் அழித்து விட முடியாது. அமைச்சர் செந்தில் பாலாஜி கைது குறித்து நாங்கள் கவலைப்படவில்லை. 2015இல் இருந்து 2023 வரை அமலாக்கத்துறை என்ன செய்து கொண்டு இருந்தது? மக்கள் மத்தியில் திமுக அமைச்சர் கைது என போட்டு திமுக மீது களங்கத்தை ஏற்படுத்தினார்கள்.

ஆனால், அவர் கைது செய்யப்பட்டது 2015இல் நடைபெற்றதற்காக மட்டுமே. அவர் திமுகவிற்கு வந்த பிறகு அதனை திரும்பி கொடுத்து விட்டார். சென்னை உயர் நீதிமன்றமும் அந்த வழக்கை தள்ளுபடி செய்து விட்டது. திமுக மீது மோதி வழக்கு போட்டு யாரும் ஜெயிக்க முடியாது. அதுபோல திமுக போட்ட வழக்குகளில் இருந்து யாரும் தப்பிக்கவும் முடியாது.

உதாரணம், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை கேட்டால் தெரியும். எம்ஜிஆர் தொடங்கி வந்தவன், போனவன், புதிதாக கட்சி தொடங்குபவன் என எல்லோருமே திமுகவை ஊழல் கட்சி என்றே கூறி வந்தனர். இதுவரை எந்த ஒரு வழக்கிலும் திமுக ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற்றதில்லை.

அப்படி கட்சி தொடங்கியவன் எல்லாம் கடைசியில் திவாலாகி, வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு என்பதைப் போல, எந்த கட்சியில் இருந்து வந்தாலும், திமுகவில் சேர்த்துக் கொள்வது வாடிக்கையாகி விட்டது. நான் எதார்த்தத்தை சொன்னேன். கீழே பேசிக் கொள்வதை நான் மேடையிலே பேசுகிறேன்” என்றார்.

மேலும் பேசிய அவர், “திமுக ஊழல் கட்சி அல்ல. கர்நாடக மாநிலத்தில் நடந்த தேர்தலில், 40 சதவீத கமிஷன் கட்சி என பட்டம் வாங்கியது பாஜகதான். இன்று நூற்றாண்டு விழா காணும் கருணாநிதியை இழிவாக பேசாத தலைவர்களே இல்லை. அவரை ஒழிப்பேன், நசுக்குவேன் என பேசியவர்கள் அனைவரையும் அடக்கம் செய்து அவர்களுக்கு மணி மண்டபங்கள் கட்டி மரியாதை செய்து, அவர்கள் கதையை முடித்த பிறகுதான் உயிரிழந்தார்.

1977இல் எப்படி பாட்னாவில், ஜெயபிரகாஷ் ஆட்சி மாற்றத்திற்கு வித்திட்டாரோ, அது போலவே பாட்னாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் அனைத்துக் கட்சி கூட்டத்தின் வாயிலாக 2024 தேர்தலில் இந்தியாவின் ஆட்சி மாற்றம் ஏற்படும். அப்போது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடையாளம் காட்டுபவரே, இந்திய பிரதமராக தேர்வு செய்யப்படுவார்” என கூறினார்.

இதையும் படிங்க: பேனா நினைவுச் சின்னம் அமைக்க மத்திய அரசு அனுமதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.