ETV Bharat / state

பேனா நினைவுச் சின்னம் அமைக்க மத்திய அரசு அனுமதி!

author img

By

Published : Jun 23, 2023, 6:58 AM IST

பேனா நினைவுச் சின்னம் அமைக்க மத்திய அரசு அனுமதி
பேனா நினைவுச் சின்னம் அமைக்க மத்திய அரசு அனுமதி

சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பேனா சிலை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

சென்னை: சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பேனா சிலை அமைக்கப்படும் என்ற அறிவிப்பிற்கு பலர் எதிர்ப்புகள் தெரிவித்திருந்தாலும் மத்திய அரசு இன்று பேனா சிலை அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது. இது சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

கடலோர ஒழுங்குமுறை மண்டலம், சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் மாநில பொதுப்பணித் துறைக்கு தனது இறுதி ஒப்புதலை வழங்கியதால், மெரினாவில் கருணாநிதி பேனா நினைவுச் சின்னம் வரும்‌ என குறிப்பிடப்பட்டுள்ளது. CRZ (Coastal Regulation Zone) அறிவிப்பு 2011இன் விதிகளின் கீழ் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவின் (EAC) பரிந்துரைகளின் அடிப்படையில் ஜூன் 19 அன்று ஒப்புதல் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் (TNCZMA) வழங்கிய பரிந்துரையின் அடிப்படையில், நிபுணர் மதிப்பீட்டுக் குழு, அமைச்சகத்திற்கு இந்தத் திட்டத்தைப் பரிந்துரைத்தது. கடற்கரையில் இருந்து சுமார் 360 மீட்டர் தொலைவில் ஒரு பேனா நினைவுச் சின்னத்தை அமைக்கவும், நினைவுச் சின்னம் மற்றும் நினைவுச் சின்னத் தளங்களை இணைக்கும் தரைப்பாலம் அமைக்கவும் மாநில அரசு முன்மொழிந்தது.

திட்டத்தின் மொத்த செலவு ரூபாய் 81 கோடியாகும் என்ற நிலையில் இறுதி ஒப்புதல் அளிக்கும்போது, ​​அனுமதி வழங்குவது குறித்து விளம்பரம் செய்ய பொதுப்பணித் துறைக்கு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அனுமதியின் நகலை உள்ளாட்சி அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிறருக்கு அனுப்ப வேண்டும். அவர்களிடம் இருந்து பரிந்துரைகள் மற்றும் பிரதிநிதித்துவங்கள் முன்மொழிவை செயலாக்கும்போது பெறப்பட்டன.

இந்த முன்மொழிவை செயலாக்குவதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், கடந்த ஜனவரி 31 அன்று பொது கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தியது. அதனைத் தொடர்ந்து மார்ச் 24 அன்று மாவட்ட கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் கூட்டம் கூட்டப்பட்டு, ஒப்புதல் பெற பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன. இதனையடுத்து, கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது மற்றும் CRZ அறிவிப்பின் கீழ் அதன் பரிந்துரைகளுக்காக நிபுணர் மதிப்பீட்டுக் குழுவுக்கு ஆணையம் பரிந்துரை செய்தது.

தொடர்ந்து, ஏப்ரல் 17 அன்று நிபுணர் மதிப்பீட்டுக் குழு, திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. அப்போது, பணிகளைத் தொடங்க பொதுப்பணித் துறை ஏலங்களைத் தாக்கல் செய்யும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், சுற்றுச்சூழல் இயக்கம் மற்றும் சமூக ஆர்வலர்கள் இதனை கடுமையாக எதிர்த்து வந்தனர்.

குறிப்பாக, சென்னையைச் சார்ந்த பூவுலகின் நண்பர்களின் அமைப்பு, சட்ட பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகள், சுற்றுச்சூழல் பாதிப்புகளை காரணம் காட்டி பொது கருத்துக் கேட்பு கூட்டத்தில் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த திட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்து சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக எச்சரித்தார். இதனிடையே, தமிழ்நாடு பொதுப்பணித் துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த முன்மொழியப்பட்ட திட்டம் 8,551.13 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. மேலும் பேனா பீடம், ஒரு பாலம் மற்றும் கடற்கரை, கடலில் உள்ள நடைபாதைகள் மற்றும் கருணாநிதி நினைவகத்தில் இருந்து கடற்கரை வழியாக பாலம் வரை பல்வேறு கூறுகளை உள்ளடக்கியது.

அதேநேரம், பேனா நினைவுச் சின்னம் 30 மீட்டர் உயரமும், பாலம் 7 ​​மீட்டர் அகலமும், நிலத்தின் மீது 290 மீட்டர் மற்றும் கடலுக்கு மேல் 360 மீட்டர் தூரமும் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: எதிர்க்கட்சிகள் கூட்டம்: மம்தா பானர்ஜி, ஸ்டாலின் பங்கேற்பு... மிரட்டும் அரவிந்த் கெஜ்ரிவால்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.