ETV Bharat / state

கும்பகோணம் தனியார் பள்ளியில் களைகட்டிய சமத்துவப் பொங்கல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 7, 2024, 12:50 PM IST

pongal celebration in karthi vidhyalaya school at thanjavur
தஞ்சாவூரில் உள்ள கார்த்தி வித்யாலயா பள்ளியில் பொங்கல் விழா கொண்டாட்டம்

Pongal Celebration: தமிழர் திருநாளான தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கும்பகோணம் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா தமிழர் கலாச்சாரத்துடன் இணைந்த பாரம்பரிய நடனங்களுடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தஞ்சாவூரில் உள்ள கார்த்தி வித்யாலயா பள்ளியில் பொங்கல் விழா கொண்டாட்டம்

தஞ்சாவூர்: ஆண்டுதோறும் தை மாதம் பிறப்பிற்கு முதல் நாள் தொடங்கி, தை 3ஆம் நாள் வரை தொடர்ந்து நான்கு நாட்களுக்கு உலகெங்கும் உள்ள தமிழர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபடுவர். ஏனெனில், பொங்கல் பண்டிகைக்கு முதல் நாளான மார்கழி 29ஆம் நாள் போகி பண்டிகை கொண்டாடப்படும்.

அந்நாள், பழையன கழிதல் என்ற நோக்குடன், அகத்தூய்மை, புறத்தூய்மை, சுத்தம், சுகாதாரம் ஆகியவற்றை முறையாக கடைபிடித்தலை வலியுறுத்தும். அதைத் தொடர்ந்து, தை மாத முதல் நாள் உழவர்களுக்கும், வேளாண்மைக்கு உதவிடும் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தைப்பொங்கல் கொண்டாடப்படும்.

தை 2ஆம் நாள், உழவர்களுக்கு உதவிடும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், மாட்டுப்பொங்கல் விழா கொண்டாடப்படும். நிறைவாக தை 3ஆம் நாள் விழா காணும் பொங்கலாக, பெரியவர்கள் மற்றும் ஆசான்களைச் சந்தித்து ஆசிகள் பெறவும், நண்பர்களைச் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவிக்கவும், அவர்களோடு உற்சாகமாக பொழுதைக் கழிக்கும் வகையில் ஆடிப்பாடி மகிழும் நாளாக அமையும்.

அதுமட்டுமல்லாது, ஆண்களின் வீரத்தை வெளிப்படுத்தும் வகையில் மாடு பிடித்தல், ஜல்லிக்கட்டு போட்டிகள், ரேக்ளா பந்தயம், மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயங்கள் நடத்தப்படும். இவ்வாறு இந்த நான்கு நாட்களும் விழா களைகட்டும். இது நெடுங்காலம் தொட்டு, தமிழர்களால் பாரம்பரியமாக தலைமுறை தலைமுறைகளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இத்தகைய சமத்துவப் பொங்கல் விழா கும்பகோணம் செட்டிமண்டபம் புறவழிச்சாலையில் அமைந்துள்ள கார்த்தி வித்யாலயா பள்ளி வளாகத்தில், சர்வதேச வேஷ்டி தினமான நேற்று (ஜன.06) கொண்டாடப்பட்டது. இதில் மாணவர்கள் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டையிலும், மாணவிகள் பாவாடை தாவணி, சேலையிலும் பங்கேற்று அசத்தினர்.

விழாவினை ஒட்டி, பள்ளி வளாகத்தில் சிறு சிறு குடிசைகள் அமைத்தும், வண்ணக் கோலங்கள் இட்டும், மா வாழை இலை தோரணங்கள் கட்டியும், செங்கரும்புகளை வைத்தும், புத்தம் புதிய மண் பானைகளில் பச்சரிசி இட்டு பாரம்பரியமான விறகு அடுப்பில் பொங்கல் வைத்தனர். மேலும், பொங்கல் பொங்கி வரும் பொழுதில், உற்சாகமாக ‘பொங்கலோ பொங்கல்’ என முழக்கமிட்டு, தட்டுகளையும் கரண்டிகளையும் தட்டி ஓசை எழுப்பி உற்சாக பொங்கலிட்டனர்.

தொடர்ந்து வாழை இலையில் வெற்றிலை பாக்கு, தேங்காய், வாழைப்பழம், பொங்கல் வைத்து சூரியனுக்கு படையலிட்டனர். தொடர்ந்து மாணவ - மாணவியர்களின் தமிழர் கலாச்சாரத்துடன் இணைந்த பாரம்பரிய நடனங்களான பறையாட்டம், தப்பாட்டம், கும்மியாட்டம், சிலம்பாட்டம், பரதநாட்டியம் ஆகியவை இடம் பெற்றது.

இந்த நிலையில், மாணவ - மாணவியர்களின் உற்சாகமிகு சமத்துவப் பொங்கல் விழாவை, அவர்களுடன் இணைந்து பள்ளி நிறுவனத் தலைவர் காரத்திகேயன், தாளாளர் பூர்ணிமா மற்றும் ஆசிரியர்கள் ஆகியோரும் கொண்டாடி மகிழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தைத்தேரோட்டம்..கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் கொடியேற்றம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.