ETV Bharat / state

காவிரி நீர் முறைப்படுத்தும் குழுக் கூட்டத்தில் தமிழக பிரதிநிதிகள் நேரடியாக பங்கேற்க தடையா? அரசு அளித்த விளக்கம் என்ன? - Cauvery water management committee

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 16, 2024, 9:07 PM IST

Cauvery water management committee meeting: காவிரி நீர் முறைப்படுத்தும் குழுக் கூட்டத்தில், தமிழக பிரதிநிதிகள் நேரடியாக பங்கேற்க அரசு தவிர்த்துள்ளதாக வெளியான செய்திக்கு தமிழ்நாடு அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

காவிரி ஆறு, தலைமைச் செயலகம் கோப்புப்படம்
காவிரி ஆறு, தலைமைச் செயலகம் கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: காவிரி நீர் முறைப்படுத்தும் குழுக் கூட்டத்தில், தமிழக பிரதிநிதிகள் நேரடியாக பங்கேற்க தடை விதித்து, அவர்களை ஆன்லைனில் கலந்து கொள்ள உள்ளதாக பிரபல நாளிதழ் ஒன்று இன்று (மே 16) செய்தி வெளியிட்டிருந்ததாக தெரிவித்துள்ள தமிழக அரசு, அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து அரசுத் தரப்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியதாவது, "காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் அனைத்து கூட்டங்களிலும் தமிழ்நாடு அரசு சார்பாக நீர்வளத்துறை அதிகாரிகள் நேரிலோ அல்லது காணொலி காட்சி மூலமாகவோ தொடர்ந்து பங்கேற்று தமிழ்நாட்டின் வாதங்களை வலுவாக முன்வைத்து வருகின்றனர்.

டெல்லியில் நடைபெறும் காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டங்களிலும் தொடர்ந்து பங்கேற்று தமிழ்நாட்டிற்கு உரிய நீர் பங்கினை பெறுவதற்கு தேவையான கருத்துகள், தக்க புள்ளி விவரங்களுடன் வலுவாக எடுத்துரைக்கப்பட்டு வருகிறது. காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் 94வது கூட்டம் கடந்த ஆண்டு மார்ச் 21ஆம் தேதி புதுச்சேரியில் நடைபெற்றது.

இதையும் படிங்க: "காவிரி நீர் தொடர்பான கூட்டங்களில் தமிழக பிரதிநிதிகளை நேரடியாக பங்கேற்கச் செய்ய வேண்டும்" - டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

தமிழ்நாட்டின் அதிகாரிகள் அக்கூட்டத்தி நேரில் கலந்து கொண்டனர். இந்நிலையில் உண்மைக்கு புறம்பாக 'காவிரி குழு கூட்டத்தில் பங்கேற்க டெல்லி செல்ல அதிகாரிகளுக்கு தடை' என்ற செய்தி இன்று (மே.16) பிரபல நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது. இதுபோன்று தமிழ்நாடு அரசு எத்தகைய உத்தரவும் பிறப்பிக்கவில்லை என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

பன்மாநில நதிநீர் பிரச்சனை தொடர்புடைய கூட்டங்களில் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் நேரில் கலந்து கொண்டு, தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்ட தகுந்த வாதங்களை எடுத்துரைத்து வருகின்றனர். மேலும், அக்கூட்டங்களில் நேரில் கலந்துகொள்ள தமிழ்நாடு அரசு தேவையான அனுமதியை உடனுக்குடன் அளித்து வருகிறது. இந்நிலையில், செய்தியின் உண்மைத்தன்மையை ஆராயாமல் திரித்து கூறுவது ஒரு பிரபலமான நாளிதழுக்கு உகந்ததல்ல" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

முன்னதாக, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுக் கூட்டத்தில், தமிழக பிரதிநிதிகள் நேரடியாக பங்கேற்க தமிழக அரசு தடை விதித்துள்ளதாகக் கூறி, தனது சமூக வலைத்தள பக்கத்தில் கண்டனம் தெரிவித்து பதிவிட்டிருந்தார். இந்த நிலையில், தற்போது அரசு அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: “அரசு கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை அதிகரிக்க வேண்டும்” - ராமதாஸ் வலியுறுத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.