ETV Bharat / state

தீபாவளி பண்டிகை எதிரொலி.. கும்பகோணம் கடைவீதிகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 9, 2023, 10:12 AM IST

heavy crowd at Kumbakonam Bazar street amid diwali festival
கும்பகோணம் கடைவீதிகளில் அலைமோதிய கூட்டம்

Heavy Crowd at Kumbakonam Bazar Street: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கும்பகோணம் கடை வீதிகளில் புது ஆடைகள் மற்றும் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.

கும்பகோணம் கடைவீதிகளில் அலைமோதிய கூட்டம்

தஞ்சாவூர்: தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 3 நாட்களே இருக்கும் நிலையில், கும்பகோணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்கள் ஆடை, நகை, பட்டாசு உள்ளிட்ட பொருட்களை ஆர்வமுடன் வாங்கி வருகிறார்கள். இதனால், கடைவீதிகளில் மக்களின் கூட்டம் அலைமோதுவதால் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வருகிற 12-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழகத்தின் பல பகுதிகளில் ஆடை, பட்டாசு, இனிப்பு போன்ற பொருள்களை வாங்குவதற்காகக் கடைவீதிகளில் மக்கள் ஆர்வத்துடன் குவிந்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, கும்பகோணம் பொற்றாமரை குளம் பகுதி கடை வீதிகள் களை கட்ட தொடங்கியுள்ளன.

இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நூறு மைல்களுக்கு அப்பால் இருந்து கும்பகோணத்தில் நல்ல முறையில் வணிகம் நடக்கும் என்பதை நம்பி, நூற்றுக்கணக்கான சிறு வணிகர்கள், தங்கள் வாழ்வாதாரத்திற்காக ஆயத்த ஆடைகள், அழகு சாதனப்பொருட்கள், போர்வை, கால் மிதியடிகள் உள்ளிட்ட பொருள்களை விற்பனை செய்வதற்காக வருகை புரிந்துள்ளனர்.

இங்கு, பண்டிகை காலங்களிலும் விலை மலிவாகக் கிடைக்கும் என்பதால், கும்பகோணம் பொற்றாமரை குளம், ஹாஜியார் தெரு, டைமெண்ட் லாட்ஜ் இறக்கம், காந்தி பார்க் , உச்சிப்பிள்ளையார் கோயில், சாரங்கபாணி பெரிய தேர் என சுமார் 4 கி.மீ சுற்று வட்டத்திற்கு, சாலையின் இருபுறமும் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கடைகளில், உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, வெளியூர்களிலிருந்தும் ஏராளமானோர் குடும்பமாக, பொருட்களை வாங்க ஆர்வத்துடன் வருகின்றனர்.

இதனால் சாலைகளில் வழக்கத்தை விட வாகன போக்குவரத்து அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில், பொது மக்கள் மற்றும் வணிகர்களின் நலன் கருதி, போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் சரவணகுமார் தலைமையில், அப்பகுதியில் 3 சக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, மாற்று வழியில் அனுப்பப்பட்டன.

மேலும், கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக முன்னெச்சரிக்கையாக, கும்பகோணம் டி.எஸ்.பி கீர்த்திவாசன் தலைமையில், உட்கோட்ட காவல் நிலைய போலீசார், அதிக அளவில் குவிக்கப்பட்டுக் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணியும் நடைபெற்று வருகிறது. சாதாரண உடையில் உள்ள போலீசாரும் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3 நாட்கள் நடைபெறும் வணிகத்தை நம்பியுள்ள வணிகர்கள், பகல் பொழுதில் மழை பெய்து தங்களது வணிகத்தைக் கெடுத்து விடக்கூடாது எனவும், இரவு 10 மணி முதல் காலை 7 மணி வரை மழை பெய்தால் தங்களுக்குப் பாதகம் எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கின்றனர். தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், இனி வரக்கூடிய நாட்களில் இதை விட மக்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு வந்தே பாரத் உட்பட கூடுதல் சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே ரயில்வே அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.