ETV Bharat / state

சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு வந்தே பாரத் உட்பட கூடுதல் சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே ரயில்வே அறிவிப்பு

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 8, 2023, 11:01 PM IST

Diwali Special Train: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் தென் மாவட்டங்களுக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் நிலையில், தூத்துக்குடிக்கு ஒரு சிறப்பு ரயில் மற்றும் திருநெல்வேலிக்கு கூடுதலாக வந்தே பாரத் சிறப்பு ரயில் சேவைகளை தெற்கு ரயில் அறிவித்துள்ளது.

தீபாவளியை முன்னிட்டு கூடுதல் சிறப்பு ரயில்கள்
தீபாவளியை முன்னிட்டு கூடுதல் சிறப்பு ரயில்கள்

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு அதிக அளவில் மக்கள் பயணிப்பதால் ஏற்படும் கூட்ட நெரிசல்களை கட்டுப்படுத்த தெற்கு ரயில்வே சார்பில், சிறப்பு வந்தே பாரத், சிறப்பு கரீப் ரத் விரைவு ரயில் உட்பட பல சிறப்பு ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அந்த வகையில், சென்னை - தூத்துக்குடி இடையே ஒரு சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. அதன்படி சென்னை - தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில் (06001) சென்னை எழும்பூரில் இருந்து நவம்பர் 10 மற்றும் 12 ஆகிய தேதிகளில் இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம் 12.30 மணிக்கு தூத்துக்குடி சென்று சேரும்.

அதேபோல் மறு மார்க்கமாக தூத்துக்குடி - சென்னை இடையேயான சிறப்பு ரயில் (06002) நவம்பர் 11 மற்றும் 13 ஆகிய தேதிகளில் தூத்துக்குடியில் இருந்து மாலை 03.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 04.45 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும் வகையில் திட்மிடப்பட்டுள்ளது.

இந்த ரயில், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு விரைவில் துவங்க இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது

இந்த ரயிலில் 1 குளிர்சாதன இரண்டு அடுக்கு படுக்கை வசதி பெட்டி (2 AC), 1குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டி (3 AC), 1 குளிர்சாத மூன்றடுக்கு குறைந்த கட்டண படுக்கை வசதி பெட்டி (3 AC Economy), 10 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள் (SL), 5 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள் (2S), ஒரு சரக்கு மற்றும் ரயில் மேலாளர் பெட்டி ஆகியவை இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தீபாவளி சிறப்பு வந்தே பாரத் ரயில்கள்: மேலும், சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு கூடுதலாக நான்கு வந்தே பாரத் ரயில் சேவையை தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி நவம்பர் 10, 11, 13, 14 ஆகிய தேதிகளில் சென்னை - திருநெல்வேலி இடையேயான வந்தே பாரத் சிறப்பு ரயில் (06055), சென்னை எழும்பூரில் இருந்து அதிகாலை 05.45 மணிக்கு புறப்பட்டு, மதியம் 02.00 மணிக்கு திருநெல்வேலி சென்று சேரும்.

அதேபோல், மறு மார்க்கமாக அதே தேதிகளில், திருநெல்வேலி - சென்னை இடையேயான வந்தே பாரத் சிறப்பு ரயில் (06056), திருநெல்வேலியில் இருந்து மாலை 03.00 மணிக்கு புறப்பட்டு, இரவு 11.15 மணிக்கு சென்னை எழும்பூர் வந்து சேரும். இந்த சிறப்பு ரயில் வழக்கம் போல தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு விரைவில் துவங்க இருப்பதாகவும், பயணிகளின் பேராதரவு காரணமாக திருநெல்வேலிக்கு மட்டும் கூடுதல் வந்தே பாரத் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தீபாவளியை முன்னிட்டு சென்னை - திருநெல்வேலி சிறப்பு ரயில்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.