ETV Bharat / state

"திமுக ஆட்சி காலம் விவசாயிகளுக்கு கேடுகாலமாக அமைந்துவிட்டதோ?" - பி.ஆர்.பாண்டியன் கேள்வி

author img

By

Published : Aug 4, 2023, 8:14 AM IST

திமுக ஆட்சி குறித்து விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் கேள்வி
திமுக ஆட்சி குறித்து விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் கேள்வி

திமுக ஆட்சி காலம் காவிரி டெல்டா விவசாயிகளுக்கு கேடுகாலமாக அமைந்துவிட்டதோ? என்றும் ராஜராஜ சோழன் வெட்டிய சமுத்திரம் ஏரி கழிவுநீர் குட்டையாக காட்சியளிப்பது வேதனை அளிக்கிறது எனவும் விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியுள்ளார்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே மாரியம்மன் கோவில் சமுத்திரம் ஏரியில் கழிவுநீர் கலப்பதைத் தமிழ்நாடு அனைத்து விவசாயச் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் நேற்று (ஆகஸ்ட் 3 ) நேரில் பார்வையிட்டார். பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழ்நாட்டில் காவிரி டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் இன்றி குறுவை பயிர்கள் 3.50 லட்சம் ஏக்கரில் கருகத் தொடங்கிவிட்டது. 1.50 லட்சம் ஏக்கரில் மட்டுமே நிலத்தடி நீரை நம்பி சாகுபடி தொடரக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 30 லட்சம் மெட்ரிக் டன் அரிசி உற்பத்தி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால். விவசாயிகள் கண்ணீர் விட்டுக் கதறுகிறார்கள். ஆனால் அதை முதலமைச்சர் கண்டுகொள்ள மறுக்கிறார். திமுக ஆட்சிக் காலம் காவிரி டெல்டா விவசாயிகளுக்குக் கேடுகாலமாக அமைந்து விட்டதோ? என்று விவசாயிகள் அஞ்சுகிறார்கள். குறுவை இழந்த விவசாயிகள் சம்பா பணியையும் துவக்க முடியாமல் நம்பிக்கை இழந்து உள்ளார்கள்.

மேட்டூர் அணையில் 60 அடிக்குக் கீழே தண்ணீர் குறைந்துவிட்டது. கர்நாடகா அணைகளில் நிரம்பத் தண்ணீர் இருந்தும் அதைப் பெற்றுத்தரத் தமிழ்நாடு அரசு வாய் திறக்க மறுக்கிறது. கர்நாடகாவில் பொது விநியோகத் திட்டத்திற்கு அரிசி கிடைக்காமல் திண்டாடுகிறார்கள். ஒட்டுமொத்தமாகத் தமிழ்நாட்டையும், கர்நாடகத்தையும் மோத விட்டு மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது. தட்டிக் கேட்கத் தமிழக முதலமைச்சர் தயங்குவது வேதனை அளிக்கிறது.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசரக் கூட்டத்தைக் கூட்டுவதற்கு எந்த நடவடிக்கையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளவில்லை. பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளைச் சந்திப்பதற்கு அமைச்சர்கள் குழுவையோ, அதிகாரிகள் குழுவையோ அனுப்பி வைக்கக் கூட தமிழக அரசு மறுத்து உள்ளது. காவிரி உட்பட அனைத்து ஆறுகளிலும் கழிவு நீர் கலந்து வருகிறது.

தஞ்சாவூரில் உலகப் பிரசித்தி பெற்ற ராஜராஜ சோழனால் வெட்டப்பட்ட சமுத்திரம் ஏரி ஆன்மீக தலமான தஞ்சை மாரியம்மன் கோவில் அருகே அமைந்துள்ளது. தஞ்சாவூர் மாநகராட்சியில் வெளியேற்றக்கூடிய கழிவுநீர் முழுவதையும், இந்த ஏரிக்குக் கால்வாய் அமைத்துக் கலக்கச் செய்கிறார்கள். இதனால் ஒட்டுமொத்த சமுத்திரமும், ஏரி கழிவுநீர் குட்டையாகக் காட்சியளிக்கிறது. சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே உடனடியாக கழிவு நீர் கலப்பதை தடுப்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகள் உட்பட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஆகஸ்ட் 15ம் தேதி முதல், சென்னையில் சத்தியாகிரகப் போராட்டத்தை துவங்க உள்ளோம்” என்று தெரிவித்தார்.

இதில் அனைத்து விவசாயிகள் சங்க வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார், செயலாளர் பாட்ஷா ரவி, மாநகர செயலாளர் அறிவு உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: வழக்கறிஞரைத் தாக்கிய மனுதாரர் வெட்டி கொலை.. ஸ்ரீவைகுண்டம் கொலையின் பின்னணி என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.