ETV Bharat / state

கும்பகோணம் மாநகராட்சி துணை மேயர், அதிமுக கவுன்சிலர்கள் இடையே காரசார விவாதம்!

author img

By

Published : Jun 26, 2023, 8:36 PM IST

Etv Bharat
Etv Bharat

கும்பகோணம் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில், ஆறு மாதங்களுக்கு மேலாக, குப்பை அள்ளும் வாகனகங்கள் முறையாக தங்கள் வார்டுக்கு வருவதில்லை என அதிமுக உறுப்பினர் குற்றம்சாட்டியதை தொடர்ந்து, துணை மேயர் மற்றும் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் காரசார விவாதத்தில் ஈடுபட்டனர்.

மாமன்ற கூட்டத்தில் அதிமுக திமுக உறுப்பினர்கள் இடையே மோதல்

தஞ்சாவூர்: கும்பகோணம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று (ஜூன் 26) மேயர் கே.சரவணன் தலைமையிலும், துணை மேயர் சு.ப.தமிழழகன் மற்றும் ஆணையர் லட்சுமணன் முன்னிலையிலும் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று ஆட்சி அமைத்தமைக்கு வாழ்த்து தெரிவித்தும், ஒடிசா மாநில ரயில் விபத்தில் உயிரிழந்தோருக்கு 2 நிமிடம் மவுனம் காத்து இரங்கல் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து மாமன்ற உறுப்பினர் சாகுல் ஹமீது, தஞ்சை மாவட்ட திட்டக்குழு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டமைக்கு வாழ்த்தும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.

இந்த மாமன்ற கூட்டத்தில், புதிய பேருந்து நிலையத்தில் அமையவுள்ள இருசக்கர வாகன நிறுத்துமிடத்திற்குக் கட்டணமாக நாள் ஒன்றுக்குச் சைக்கிளுக்கு ரூ.5 ஆகவும், இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10 ஆகவும் நிர்ணயம் செய்வது குறித்த பொருளில், திமுக மாமன்ற உறுப்பினர்கள், ரயில் நிலைய நிறுத்துமிடங்களில் நாள் ஒன்றுக்கு ரூபாய் 30 வரை வசூலிக்கிறார்கள் நாம் குறைந்தபட்சம் அதனை ரூ 20 ஆகவோ, ரூ 15 ஆகவோ நிர்ணயம் செய்ய வேண்டும், இதனால் மாநகராட்சி வருவாய் அதிகரிக்கும் எனக் கோரிக்கை முன்வைத்தனர்.

ஆனால், இதற்கு கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் செல்வம் இதனை அதிகரிக்கக் கூடாது என்றார். பெரும்பான்மை உறுப்பினர்கள் இதனை ரூபாய் 15 ஆக அதிகரிக்கலாம் என கருத்து தெரிவித்தனர், மாநகராட்சிக்குட்பட்ட 48 வார்டுகளில் பல வார்டுகளில் இன்னமும், பாதாளச் சாக்கடை பிரச்சினைகள் முழுமையாகச் சரி செய்யப்படாமல், ஆங்காங்கே கழிவுநீர் சாலைகளில் வழிந்தோடி, சுகாதார சீர்கேட்டினை ஏற்படுத்துகிறது எனக் குற்றம்சாட்டினர். அதற்குத் துணை மேயரும், ஆணையரும், இவை விரைந்து சீர் செய்யப்படும் என்றனர்.

மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை மாதம் தோறும் நடத்த வேண்டும் 60 நாட்கள், 70 நாட்களுக்கு ஒரு முறை கூட்டம் நடத்தக் கூடாது என்றும் ஒரே கூட்டத்தில் இன்று 72 பொருட்கள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து உறுப்பினர்கள் அனைவரும் விரிவாக எடுத்துப் பேசி விவாதம் செய்ய முடியாத அவலம் ஏற்படுகிறது எனவே தவறாமல் இனி மாதம் தோறும் கூட்டம் நடத்த வேண்டும் பெரும்பான்மை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். அதற்கு மேயரும், ஆணையரும் இனி அப்படி கூட்டம் நடத்தப்படும் என உறுதி கூறினர்.

மேலக்காவேரி பகுதி மாமன்ற உறுப்பினர் தங்களது வார்டில், நாகை மற்றும் காரைக்கால் பகுதியிலிருந்து மட்டுமல்லாது ஆந்திராவிலிருந்து மீன் கொண்டு வந்து சாலையோரங்களில் வைத்து வணிகம் செய்கின்றனர். இதனால், அந்த வார்டு பகுதிக்குள் நுழைவதே, மீன் சந்தையில் நுழைந்து செல்வதைப் போன்ற நிலை ஏற்படுகிறது, பெரும் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதற்கு மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. பாணாதுறை திருமஞ்சன வீதி சாலையில் மிகப்பெரிய பள்ளங்கள் அதிகம் உள்ளது. இதனை உடனடியாக சீரமைக்க வேண்டும் என அந்த வட்ட மாமன்ற உறுப்பினர் கோரிக்கை விடுத்தார். இதனை சீரமைக்காவிட்டால் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாகவும் அவர் மன்றத்தில் தெரிவித்தார்.

பின்னர், மாமன்ற 19ஆவது வட்ட மாமன்ற உறுப்பினரான ஆதிலட்சுமி இராமமூர்த்தி (அதிமுக) பேசும்போது, “எனது வார்டில், கடந்த 6 மாதங்களாகக் குப்பை அள்ளும் வாகனங்கள் எதுவும் வருவதில்லை. கேட்டால், பழுது என சாக்கு சொல்லி, குப்பைகளை சாக்கு பைகளில் சேகரித்து செல்கிறார்கள். இனியாவது குப்பை அள்ள வாகனங்களை பழுது நீக்கி முறையாகக் குப்பை அள்ள வார்டுகளுக்கு அனுப்பிட வேண்டும்” என்றார்.

அப்போது துணை மேயர் சு.ப.தமிழழகன் குறுக்கிட்டு “இப்போது நீங்கள் கேள்வி கேட்கக் கூட முடிகிறது ஆனால் உங்களது (அதிமுக) ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தலையே நடத்தாமல் வைத்து இருந்தீர்களே” என குத்திக்காட்டிப் பேசினார். இதனால் மற்றொரு அதிமுக உறுப்பினரான குமரேசனும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆதிலட்சுமியுடன் இணைந்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்துப் பேசினார். அதனை அடுத்து துணை மேயருக்கு ஆதரவாக திமுக மாமன்ற உறுப்பினர்கள் பலரும் இதற்குப் பதிலுக்குப் பதில் பேசியதால் சிறிது நேரம் மாமன்றம் பரபரப்பாகக் காணப்பட்டது. பின்னர் கூட்டம் நிறைவடைந்தது.

இதையும் படிங்க: போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள 25 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப திமுக அரசு தயங்குவது ஏன்? - டிடிவி தினகரன் கேள்வி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.