ETV Bharat / state

தஞ்சையில் தொடங்கியது புத்தகத் திருவிழா: சிறைவாசிகளுக்கு புத்தகம் தானம் செய்ய பிரத்யேக அரங்கம்!

author img

By

Published : Jul 15, 2023, 1:27 PM IST

book-festival-begins-in-thanjavur
தஞ்சாவூர் புத்தகத் திருவிழா சிறைவாசிகளுக்கு புத்தகம் தானம் செய்ய பிரத்யேக அரங்கம்

தஞ்சாவூரில் புத்தகத் திருவிழாவை நேற்று ஜூலை 14ஆம் தேதி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். சிறைவாசிகளுக்கு புத்தகம் தானம் செய்ய தனி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தஞ்சாவூர் : நிர்வாகம் மற்றும் பொது நூலக இயக்ககம் ஆகியவை இணைந்து நடத்தும் தஞ்சாவூர் புத்தகத் திருவிழா 6ம் ஆண்டாக தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் நேற்று ஜூலை 14 ந் தேதி தொடங்கியது.தஞ்சாவூர் புத்தகத் திருவிழாவினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, அரசு கொறடா கோவி.செழியன், மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

தஞ்சாவூர் புத்தகத் திருவிழா

இந்த புத்தக திருவிழாவில் மொத்தம் 110 புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலைப்புகளில் நூல்கள் இடம் பெற்றுள்ளன. தஞ்சாவூர் படைப்பாளர்களை ஊக்குவிப்பதற்காக தனி அரங்கம் இந்தாண்டு புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் சிறப்பு அம்சமாக சிறைவாசிகளுக்கு புத்தகம் தானம் செய்ய பெட்டி வைக்கப்பட்டு தனி அரங்கும் ஏற்படுத்தப்பட்டுள்ளது, இதில் சிறப்பு அம்சமாக புதுச்சேரி நன்மொழி பதிப்பகம் சார்பில் சிறுவர்களை கவர்ந்த பேராசிரியர் சோதியின் 332 நூல்கள் சிறுவர் நூல்களாக இடம் பெற்றுள்ளன.

இவ்விழாவில் நாள்தோறும் தஞ்சாவூர் மாவட்டத்தை சார்ந்த படைப்பாளிகள் பங்கேற்கும் இலக்கிய அரங்கம், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. மேலும் தமிழகத்தின் தலைசிறந்த சொற்பொழிவாளர்கள் பங்கேற்கும் நகைச்சுவை சிந்தனை அரங்கமும் நடைபெறுகிறது, பள்ளி கல்லூரி மாணவர்களை ஊக்குவிப்பதற்காக நாள்தோறும் பல்வேறு போட்டிகள் நடைபெற்று பரிசுகள் வழங்கப்படவுள்ளது.

புத்தக திருவிழா பங்கேற்பாளர்களுக்கு பரிசு கூப்பன் வழங்கப்பட்டு குழுக்கள் முறையில் நாள்தோறும் மூன்று பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு புத்தகங்கள் பரிசாக வழங்கப்படும், இந்த புத்தக திருவிழா வரும் 24ஆம் தேதி வரை நடைபெறுகிறது, மேலும் புத்தகங்களை தஞ்சையில் இருந்து வெளியூர்களுக்கு அனுப்ப அஞ்சல் துறை மூலம் அனுப்பும் சிறப்பு வசதியும் உள்ளது.

புத்தகத் திருவிழாவை தொடங்கி வைத்த பின் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது,வாசிப்பு என்பதை இயக்கமாக கொண்டு செல்ல வேண்டும், வாசிப்பு பழக்கம், நூலகத்துறை ஆகியவை ஏதோ என்று இருந்த காலத்தில் அதற்கென்று முக்கியத்துவத்தை வழங்க வேண்டும் என்று ஆசைப்பட்டவர் தமிழ்நாட்டின் இன்றைய முதலமைச்சர்.பொதுவாக இதுபோன்ற புத்தக கண்காட்சி சென்னையில் மட்டும் நடைபெறும். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு ஒவ்வொரு மாவட்டத்திலும் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. புத்தக கண்காட்சியின் மூலம் அந்தந்த மாவட்ட மக்களின் அறிவு சார்ந்த சமூகத்தை உருவாக்குவதற்கு பயனுள்ள திட்டமாக அமையும் என்று தெரிவித்தார்.

மேலும் தஞ்சையைச் சேர்ந்த மணிமாறன் என்பவர் கூறும்போது :- சிறைத்துறை மூலம் பொதுமக்களிடமிருந்து தானமாக புத்தகங்கள் பெறப்பட்டு சிறைகளில் உள்ள நூலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது, இதன் மூலம் சிறைவாசிகளுக்கு மனம் மாற்றத்தையும் சமூகத்தில் அந்தஸ்தையும் ஏற்படுத்திக் கொடுக்கிறது.

புத்தகம் வாசிப்பதன் மூலம் குற்ற செயல்களில் இருந்து விடுபடுவார்கள், குடும்ப சூழலிலும், பொதுமக்கள் மத்தியிலும் நல்ல பெயரை எடுப்பதற்கு புத்தக தானம் அரங்கு நல்ல வாய்ப்பாக அமையும் என்று தெரிவித்தார். இவ்விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திரசேகரன், நீலமேகம், மேயர் ராமநாதன், மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் புத்தக ஆர்வலர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க : பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் திறக்கப்பட்ட ஈரோடு ஸ்மார்ட் சிட்டி வணிக வளாகம் - தற்போதைய நிலை என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.