ETV Bharat / state

'நீட் தேர்வு ரத்து என அகில இந்திய காங்கிரஸ் தலைமை அறிவிக்க வேண்டும்' - பெ.மணியரசன் வலியுறுத்தல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 28, 2023, 11:02 PM IST

அகில இந்திய காங்கிரஸ் தலைமை நீட் தேர்வு ரத்து என அறிவிக்க வேண்டும் - பெ.மணியரசன்
tamil-deysia-perriyakkam-maniarasan-byte-at-swamimalai

தமிழக காங்கிரஸ் தலைமை மட்டுமே நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமையில் உள்ளவர்கள், தாங்கள் வெற்றி பெற்றால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என தமிழ் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் வலியுறுத்தியுள்ளார்.

tamil-deysia-perriyakkam-maniarasan-byte-at-swamimalai

தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே சுவாமிமலையில் இன்று (ஆக. 28) தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், ‘அரசியல் சீரழிவு சமுதாய சீரழிவு அகற்றும் லட்சியம்’ எனும் தலைப்பில் சிறப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ் தேசிய பேரியக்க தலைவர் பெ.மணியரசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இப்பொதுக்கூட்டத்தில், காவிரி உரிமை மீட்புக்குழு இராஜேந்திரன், துணை பொதுச் செயலாளர் க.அருணபாரதி, தஞ்சை மாவட்ட செயலாளர் நா.வைகறை, தலைமை செயற்குழு க.விடுதலை சுடர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பெ.மணியரசன் கூறும்போது, “மாநில உரிமைகளை, ஒன்றிய அரசு ஒவ்வொன்றாக பறித்து வருகிறது. தமிழ்நாடு அரசு மருத்துவக்கல்லூரி சேர்க்கைக்கு டெல்லி அரசு நீட் தேர்வு நடத்தி தமிழ்நாடு மாணவர்கள் அதில் சேர முடியாதபடி வடிகட்டி தடுக்கப்பட்டு அதில் வடமாநில மாணவர்கள் தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரியில் படிக்க மறைமுகமாக வழி வகை செய்கிறது.

இதுவரை 21 உயிர்களுக்கு மேல் பலி கொண்ட நீட் தேர்வினை ரத்து செய்ய வேண்டும். குறிப்பாக இதனை திமுகவுடன் கூட்டணி வைத்துள்ள காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர்கள் மட்டும் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி குரல் கொடுத்தால் போதாது, காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமையும், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என கருத்தை பொது மக்களிடம் பதிவு செய்ய முன்வரவேண்டும்.

1937-38ல் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்ட வணிகவரிகளை வசூலிக்கும் உரிமையை இன்று ஜிஎஸ்டி என்ற பெயரில் ஒன்றிய அரசு தனதாக்கிக் கொண்டது. அடுத்து போக்குவரத்துத்துறை வருமானங்களையும், பத்திரபதிவுத்துறை வருமானங்களையும் பெற்றிட முயற்சி மேற்கொண்டு வருகிறது. சட்டங்கள் அனைத்தும் இந்தியிலும், சமஸ்கிருதத்திலும் பெயர் மாற்றம் செய்யப்படுகின்றன. பல சட்டங்கள் திருத்தப்படுகின்றன.

இந்தியாவில் பல இனங்கள், பல மொழிகள், பலவிதமான பழக்க வழக்கங்களை கொண்ட மக்கள் இணைந்து வாழ்கின்றனர். இந்தியா என்பது தேசமல்ல, ஒன்றியம். தற்போது மாநில உரிமைகள் ஒவ்வொன்றாக, ஒன்றிய அரசால் பறிக்கப்பட்டு கொண்டே வருகிறது. இதற்காக நாங்கள் தமிழ்நாட்டில் போராடுகிறோம். இதை போல பிற மாநிலத்தவர்களும், தங்கள் மாநில உரிமைக்காக குரல் கொடுக்க வேண்டும், போராட முன்வர வேண்டும்.

காவிரி பிரச்னையில் தமிழ்நாட்டிற்கு துரோகம் இழைக்கப்படுகிறது. இதற்காக தமிழ்நாடு அரசு விரைந்து ஒரு வல்லுநர் குழுவை கர்நாடக மாநிலத்திற்கு அனுப்பி, அங்கே நான்கு அணைகளை தவிர ஏனைய இடங்களில் உள்ள நீர்தேக்கங்கள், தடுப்பணைகள் குறித்து கணக்கெடுப்பு செய்து அங்குள்ள நீர் இருப்புகளையும் கணக்கில் கொண்டு விரிவான அறிக்கையினை உச்ச நீதிமன்றத்தில் தாக்க செய்ய வேண்டும்.

அதேபோல் இப்பிரச்னையில், கர்நாடக அரசு ஆணையின் தீர்ப்பின் படி செயல்பட முன்வராவிட்டால், காவிரி மேலாண்மை ஆணையம் அதனை மத்திய அரசின் வாயிலாக நிறைவேற்றிடலாம் என 2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பிலேயே குறிப்பிடப்பட்டுள்ளதால் இதனை செயல்படுத்திட ஒன்றிய அரசை, தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும். திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை முன்பு கடந்த 272 நாள்களாக நிலுவை தொகை தராமலும், தங்கள் நிலங்களின் பெயரில் ஆலை நிர்வாகம் மோசடியாக வங்கிகளில் பெற்ற கடன் என ரூபாய் 400 கோடியை உடன் வழங்கிட கோரி தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள்.

இப்பிரச்னையில் ஆயிரக்கணக்காண விவசாயிகள் சிக்கிக்கொண்டு எப்படி இதில் இருந்து விடுபடுவது என தெரியாத நிலையில் தவிக்கின்றனர். தற்போது இந்த ஆலைக்குச் சொந்தமான விலை நிலங்கள் தரிசாக கிடைக்கிறது, இதில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கரும்பு விவசாயிகள் தங்களது நிலுவை தொகைகள் முழுமையாக வழங்கும் வரை ஏர் பூட்டி விவசாயம் செய்ய வேண்டும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: 2023-2024 நெல் கொள்முதல்; நெல் குவிண்டாலுக்கு ரூ.107 கூடுதல் ஊக்கத்தொகை - முதலமைச்சர் அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.