ETV Bharat / state

ரப்பர் விவசாயத்தையும் விட்டுவைக்காத கரோனா - அரசிடம் உதவி கேட்கும் விவசாயிகள்

author img

By

Published : Oct 7, 2020, 3:01 PM IST

Updated : Oct 7, 2020, 7:56 PM IST

rubber
rubber

ஓராண்டில் ஆறு மாதம் மட்டுமே மேற்கொள்ளப்படும் ரப்பர் விவசாயத்தில் வரக்கூடிய வருவாய் மூலம்தான், தங்களின் குடும்பத்தை நடத்திவருகிறோம். கடந்த ஆண்டு ஒரு லிட்டர் ரப்பர் பால் நல்ல விலை போனது. ஆனால் தற்போது ஒரு லிட்டர் ரூ.20 முதல் ரூ.22 அளவிலேயே விலை போவதால், அதிகளவில் நஷ்டம் ஏற்படுவதாக ரப்பர் விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு - கேரள எல்லைப் பகுதியான மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது புளியரை கிராமம். இங்கு சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் ரப்பர் விவசாயம் செய்யப்படுகிறது. ரப்பர் விவசாயத்தை பொறுத்தவரை, அவ்வளவு எளிதில் வருவாய் ஈட்டிவிட முடியாது. ஒரு மரத்தை பயிரிட்டு, சுமார் 8 ஆண்டுகள் காத்திருப்புக்கு பிறகுதான், அதிலிருந்து பால் எடுத்து வருவாய் ஈட்ட முடியும்.

மலையடிவார பகுதி என்பதாலும், வனவிலங்குகளால் இவ்வகை பயிர்களுக்கு சேதம் இல்லை என்பதாலும் இங்குள்ள விவசாயிகள் ரப்பர் தோட்டம் அமைப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். இப்பகுதியில் மட்டும் ஆண்டிற்கு ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் லிட்டர்வரை ரப்பர் பால் எடுக்கப்படுகிறது.

rubber
ரப்பர் மரங்கள்

கேரள மாநிலத்தில் அதிக அளவில் ரப்பர் விவசாயம் மேற்கொள்ளப்படுவதால், ரப்பர் பால் வெட்டுவதற்கு கேரள மாநிலத்திலிருந்து ஊழியர்கள் தமிழ்நாட்டிற்கு வருவது வழக்கம். ஆனால், தற்போது கரோனா தொற்று காரணமாக இரு மாநிலங்களுக்கிடையே பேருந்து போக்குவரத்து இல்லாததால் ஊழியர்கள் வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ரப்பர் தோட்ட விவசாயிகள் வருவாயின்றி தவிக்கின்றனர்.

வழக்கமாக ஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி அடுத்த ஆறு மாத காலம்வரை மட்டுமே ரப்பர் பால் எடுக்கப்படுகிறது. கரோனா ஊரடங்கு காரணமாக பால் வெட்ட ஊழியர்கள் வராத நிலையில், பால் எடுப்பதற்கான பருவம் இருந்தும் ஊழியர்கள் பற்றாக்குறையால், பால் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

rubber
மரத்திலிருந்து வடியும் பால்

இது ஒரு புறம் இருக்க, அப்பகுதியில் பெய்துவரும் தொடர் சாரல் மழையாலும், ரப்பர் எடுப்பது தடைபட்டுள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ஓராண்டில் ஆறு மாதம் மட்டுமே மேற்கொள்ளப்படும் இவ்வகை விவசாயத்தில் வரக்கூடிய வருவாய் மூலம்தான், தங்களின் குடும்பத்தை நடத்திவருகிறோம். கடந்த ஆண்டு ஒரு லிட்டர் ரப்பர் பால் நல்ல விலை போனது. ஆனால் தற்போது ஒரு லிட்டர் ரூ.20 முதல் ரூ.22 அளவிலேயே விலை போவதால், அதிகளவில் நஷ்டம் ஏற்படுவதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

ரப்பர் விவசாயத்தையும் விட்டுவைக்காத கரோனா - அரசிடம் உதவி கேட்கும் விவசாயிகள்

ரப்பர் பால் எடுத்து உலர வைத்து, அதனுடன் அமிலம் கலந்து இயந்திரங்கள் உதவியுடன் ஷீட்டாக மாற்றுவதால்தான் இவர்களால் வருமானம் பார்க்க முடியும். தற்போது ரப்பர் பால் வெட்ட முடியாத சூழலில், தோட்டங்கள் முழுவதும் புதர் மண்டி கிடக்கிறது. ஏற்கெனவே வருவாய் இல்லாத நிலையில் பராமரிப்புச் செலவும் இவர்களை வாட்டி வதைக்கிறது.

ரப்பர் மரத்திலிருந்த பால் சேகரிக்கப்படும் முறை
ரப்பர் மரத்திலிருந்து பால் சேகரிக்கப்படும் முறை

வருமானம் இல்லாமல் தவிக்கும் ரப்பர் விவசாயிகளுக்கு கேரள அரசு மானியம், நிவாரணம் மற்றும் இயந்திரம் வழங்கி ஊக்குவிப்பதைப்போல், இங்குள்ள ரப்பர் விவசாயிகளுக்கும் தமிழ்நாடு அரசு உதவ வேண்டும் என்பதே ரப்பர் விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க:தற்சார்பு வார்த்தை அல்ல; வாழ்க்கை... சொந்த செலவில் குட்டை அமைத்து விவசாயம் செய்யும் கிராமம்!

Last Updated :Oct 7, 2020, 7:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.