ETV Bharat / state

தற்சார்பு வார்த்தை அல்ல; வாழ்க்கை... சொந்த செலவில் குட்டை அமைத்து விவசாயம் செய்யும் கிராமம்!

author img

By

Published : Sep 25, 2020, 6:35 AM IST

நாமக்கல்: வறண்டு கிடந்த கிராமத்தையும், விவசாயத்தையும் காக்க ரூ. 9 லட்சம் மதிப்பில் 2 ஏக்கர் நிலம் வாங்கி குட்டை வெட்டிய கிராம மக்கள், தற்சார்பை வெறும் வார்த்தையாக அல்லாமல் வாழ்க்கையாக வாழ்ந்துகாட்டி வருகின்றனர். அதுகுறித்த சிறப்புக் கட்டுரையை இங்கு காண்போம்.

village-that-sets-up-a-pond-and-cultivates
village-that-sets-up-a-pond-and-cultivates

போதிய மழையின்மை, விவசாய வேலைகளுக்கு ஆள் பற்றாகுறை, இடு பொருள்களின் விலை உயர்வு, விளை பொருள்களுக்கு போதிய விலையின்மை உள்ளிட்டப் பல காரணங்களால் விவசாயம் நாளுக்கு நாள் அழிந்து வருகிறது. இதில் தண்ணீர் இல்லாமல் போனால் நிலை இன்னும் மோசம்.

40 ஆண்டுகளுக்கு முன்பு முப்போகம் விளைந்த பல்லாயிரம் ஏக்கர் நிலம் தற்போது புவிவெப்பமயமாதல், பருவமழை தள்ளிப்போதல், நிலத்தடி நீரை அதிகளவில் உறிஞ்சுதல் உள்ளிட்ட காரணங்களால் இன்றும் விவசாயம் செய்யமுடியாமல் வறண்டு தரிசாக மாறியுள்ளது.

அப்படி தரிசாக கிடந்த நிலத்தை மனித முயற்சியால் மீண்டும் விவசாய நிலமாக மாற்றமுடியும் என நிரூபித்துக்காட்டியுள்ளனர், பேளுக்குறிச்சி கிராம மக்கள். நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை அடிவாரத்தில் உள்ளது, பேளுக்குறிச்சி கிராமம். அந்தக் கிராம விவசாயிகள் எழுபது விழுக்காட்டினர் போர்வெல் நீரை நம்பிதான் விவசாயம் செய்து வந்தனர்.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக நிலத்தடி நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வந்தது. அது நாளைடைவில் 1000 அடி வரை போர்வெல் அமைத்தாலும் தண்ணீர் கிடைக்காத நிலைக்கு இட்டுச்சென்றுள்ளது. இப்படி 15 ஆண்டுகளுக்கும் மேலாக இதே நிலை தொடர்ந்ததால் அப்பகுதியில் கடும் வறட்சி நிலவியது.

அதனால் அக்கிராம மக்கள் நீர் ஆதாரத்திற்கு வழி செய்ய ஒரு முடிவை எடுத்தனர். பேளுக்குறிச்சி கிராமம் கொல்லிமலை அடிவாரத்தில் உள்ளதால் மலையிலிருந்து உற்பத்தியாகி ஓடை வழியாக வரும் தண்ணீரை சேமிக்கத் திட்டமிட்டனர். எப்படி சேமிப்பது என எண்ணிய அவர்களுக்கு குட்டை அமைக்க யோசனை வந்துள்ளது.

சொந்த செலவில் குட்டை அமைத்து விவசாயம் செய்யும் கிராமம்

குட்டை அமைக்க நிலம், ஆள்கூலி, தளவாடங்கள் உள்ளிட்ட பணத்தை திரட்ட அக்கிராமத்தின் 300 விவசாயிகள், WAKE OUR LAKES எனும் அமைப்புடன் சேர்ந்து ரூ.9 லட்சம் பணத்தை திரட்டி, எட்டிகுட்டை மலை அடிவாரப் பகுதியில் 2 ஏக்கர் நிலத்தை வாங்கினர். அதன்பின் தாங்களாகவே சேர்ந்து குட்டையை வெட்ட ஆரம்பித்தனர்.

அதன்படி 2018ஆம் ஆண்டு குட்டை வெட்டி முடிக்கப்பட்டு, அதற்கு "குமரன் ஏரி" எனப் பெயரிடப்பட்டது. குட்டை வெட்டப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் கடந்தும் அதில் நீர் தேங்கவில்லை. கடந்தாண்டு பருவமழை சரிவரப் பெய்யாத காரணத்தால் மழைநீரை சேமித்து வைக்க முடியவில்லை. ஆனால், இந்தாண்டு பருவமழை ஓரளவுக்கு கைகொடுத்து வருகிறது. அதன்காரணமாக, விவசாயிகள் வெட்டிய குட்டையில் நீர் தேங்கத் தொடங்கியது.

நாளடைவில் குட்டை முழுவதும் நிரம்பிவிட்டது. தற்போது அந்த நீரினால் அப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்துள்ளது. வறண்டு கிடந்த கிராமத்தில் தற்போது விவசாயம் அமோகமாக நடைபெற்றுவருகிறது. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் "கையிலிருந்த பணத்தை வைத்து குட்டை வெட்டினோம். ஆனால், ஒன்றரை ஆண்டுகள் தண்ணீர் தேங்கவில்லை. பேரதிர்ச்சியாக இருந்தது.

இதற்கிடையில் கரோனா ஊரடங்கு மீதமிருந்த வாழ்வாதாரத்தையும் அடியோடு பாதித்துவிட்டது. ஆனால், நாங்கள் எதிர்பார்க்காத வேளையில், தற்போது குட்டையில் தண்ணீர் நிரம்பத்தொடங்கியது. அந்தத் தண்ணீரால் நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்துள்ளது. இரண்டையும் வைத்து நாங்கள் விவசாயம் செய்து வருகிறோம்.

தண்ணீரை சேமிக்கத் திட்டமிடல் அவசியம். எதிர்பார்த்த அளவு தண்ணீர் கிடைக்காவிட்டாலும், திட்டமிட்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் லாபம் ஈட்ட முடியாவிட்டாலும் விவசாயத்தையாவது காக்கலாம்" என நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

அதையடுத்து பேசிய WAKE OUR LAKES ஒருங்கிணைப்பாளர் சரவணன், "எங்கள் கிராமத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக கடும் வறட்சி நிலவி வந்தது. நாங்கள் கொல்லிமலை அடிவாரத்தில் இருந்ததால் மலையிலிருந்து ஓடையில் வரும் தண்ணீரை சேமிக்கத் திட்டமிட்டு ரூ. 9 லட்சம் செலவில் குட்டை வெட்டினோம். தற்போது அதில் நீரைத் தேக்கி விவசாயம் செய்து வருகிறோம். இதேபோல நீர் ஆதாரங்களைப் பயன்படுத்தி விவசாயத்தை காக்க அனைவரும் முன்வரவேண்டும்" எனத் தெரிவித்தார்.

அரசாங்கத்தை எதிர்பார்க்காமல் விவசாயிகளே ஒருங்கிணைந்து குட்டையை அமைத்து, நீரைத் தேக்கி விவசாயம் செய்துவருவது அக்கம்பக்கத்து கிராமங்களை வெகுவாக ஈர்த்துள்ளது. பேளுக்குறிச்சி விவசாயிகளைப் போல், ஒவ்வொரு கிராம விவசாயிகளும், பொதுமக்களும் ஒன்றிணைந்து இம்மாதியான நீர் சேமிப்புத் திட்டங்களை செயல்படுத்தினால் நீர் ஆதாரங்களைக் காத்து, விவசாயம் அழியாமல் இருக்கும் என்பது உறுதி.

இதையும் படிங்க: விவசாயிகளுக்கு பலன் அளிக்கும் பண்ணை குட்டை திட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.