ETV Bharat / state

Tenkasi Recounting: செல்லாமல் போன தபால் வாக்குகள்.. ஆனாலும் தென்காசியை தக்க வைத்த பழனி நாடார்.. மறுவாக்கு எண்ணிக்கையில் நடந்தது என்ன?

author img

By

Published : Jul 13, 2023, 9:16 PM IST

Etv Bharat
Etv Bharat

தென்காசியில் 2021-ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலுக்கான மறுவாக்கு எண்ணிக்கை எண்ணிக்கையில் தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் மீண்டும் வெற்றி பெற்றார்.

தென்காசி தொகுதி மறு வாக்கு எண்ணிக்கை

தென்காசி: தமிழ்நாட்டில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் 234 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்று திமுக மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடித்தது. இதில், தென்காசி மாவட்டம் தென்காசி சட்டப்பேரவை தொகுதியில் நடைபெற்ற தபால் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி நடைபெற்றதாக அதிமுக வேட்பாளர் செல்வ மோகன் தாஸ் பாண்டியன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த தேர்தலில் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக கூட்டணியான காங்கிரஸ் வேட்பாளர் பழனிநாடாரை விட 370 வாக்குகள் குறைவாக பெற்று தோல்வி அடைந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தென்காசி சட்டப்பேரவை தொகுதியில் பதிவான தபால் வாக்குகளை மீண்டும் எண்ணும்படி கடந்த ஐந்தாம் தேதி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து இன்று (ஜூலை 13) தென்காசி தொகுதி தபால் வாக்குகள் மீண்டும் எண்ணப்பட்டன இன்று காலை சரியாக 10 மணிக்கு தென்காசி கோட்டாட்சியர் லாவண்யா முன்னிலையில் தபால் வாக்குகள் எண்ண இருந்த நிலையில் படிவம் 13 சிஐ காட்ட வேண்டும் என்று அதிமுக வேட்பாளர் செல்வ மோகன் தாஸ் பாண்டியன் தெரிவித்ததால் வாக்கு எண்ணும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

அதாவது 13 ஏ படிவத்திற்கும் 13 சி படிவத்திற்கும் உள்ள எண்ணிக்கையில் வேறுபாடு இருப்பதாக அதிமுக வேட்பாளர் தேர்தல் அதிகாரியிடம் புகார் தெரிவித்தார். 13 ஏ-ல் வாக்காளர்களின் சுய விவரங்கள் அடங்கி இருக்கும் 13 சி படிவத்தில் வாக்களித்த வாக்குச் சீட்டு விவரம் அடங்கியிருக்கும் சுய விவரம் அடங்கிய படிவங்களின் எண்ணிக்கையை விட வாக்கு பதிவான வாக்கு சீட்டு படிவத்தின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக அதிமுக சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதிமுக புகாரை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்ட நிலையில் மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான துரை ரவிச்சந்திரன் வாக்கு எண்ணும் மையத்துக்குச் சென்றார்.

அங்கு ஆட்சியர் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து மீண்டும் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் படிவத்தில் அரசு அதிகாரிகளின் கையெழுத்து மற்றும் சீல் இல்லாமல் இருப்பதாக கூறி மீண்டும் அதிமுக வேட்பாளர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் வாக்கு எண்ணிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தார். எனவே மீண்டும் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. அதாவது, தபால் வாக்குகளைப் பொறுத்தவரை தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் தங்கள் விண்ணப்ப படிவத்தில் கிரேடு ஏ அல்லது கிரேடு பி அதிகாரிகளிடம் கையெழுத்து மற்றும் சீல் வாங்கி இருக்க வேண்டும் எனவே பலரது படிவத்தில் அதிகாரிகளின் கையெழுத்து மற்றும் சீல் சரியாக இல்லை என்பது அதிமுகவின் குற்றச்சாட்டாக இருந்தது.

தென்காசி தொகுதி வேட்பாளர்கள்
தென்காசி தொகுதி வேட்பாளர்கள்

தொடர்ந்து, மீண்டும் பேச்சு வார்த்தை நடத்திய நிலையில் வாக்கு எண்ணிக்கை மீண்டும் தொடங்கியது. இந்த நிலையில் காலை 10 மணிக்கு தொடங்கி வாக்கு எண்ணிக்கை பல மணி நேரம் ஆகியும் முடிவடையவில்லை. குறிப்பாக மாலை 5 மணி அளவில் வரை தபால் வாக்கு சீட்டுகளை பிரிக்கும் பணிகள் மட்டுமே நடைபெற்றது. அதன் பிறகே வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கும். இதனால் தென்காசி தொகுதி தபால் வாக்கு மறு எண்ணிக்கை தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையில் தென்காசி தொகுதியில் நடைபெற்றுவரும் இந்த மறு வாக்கு எண்ணிக்கை யாருக்கு சாதகமாக இருக்கும் என்பது குறித்து விரிவாக ஆராய்ந்த போது பல தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளது.

தென்காசி சட்டப்பேரவைத் தொகுதியைப் பொறுத்தவரை 2021 சட்டப்பேரவை பொது தேர்தலில் மொத்தம் 2 லட்சத்து 14 ஆயிரத்து 108 வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில், அதிமுக வேட்பாளர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் 88 ஆயிரத்து 945 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் 89 ஆயிரத்து 315 வாக்குகளும் பெற்றனர். தபால் வாக்குகளை பொறுத்தவரை 2021ஆம் ஆண்டில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் ஆயிரத்து 609 வாக்குகளும் அதிமுக வேட்பாளர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் 674 வாக்குகளும் பெற்றிருந்தனர். வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை வைத்து பார்க்கும் போது அதிமுக வேட்பாளர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் காங்கிரஸ் வேட்பாளரை விட 565 வாக்குகள் கூடுதலாகவே பெற்றுள்ளார்.

அதே சமயம் தபால் வாக்குகளை சேர்க்கும் போது காங்கிரஸ் வேட்பாளர் பழனிநாடார் அதிமுக வேட்பாளரை விட 370 வாக்குகள் அதிகம் பெற்று தேர்தலில் வெற்றி பெற்றார். மேலும் 2021 வாக்கு எண்ணிக்கையில் தென்காசி தொகுதியில் மொத்தம் 382 வாக்குகள் செல்லாத ஓட்டுகள் என அறிவிக்கப்பட்டது. அதேபோல் தபால் வாக்குப்பதிவில் 13 பேர் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர். ஒட்டுமொத்த வாக்குப்பதிவில் ஆயிரத்து 159 பேர் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர். எனவே ஒட்டுமொத்த வாக்கு எண்ணிக்கயை பார்க்கும்போது காங்கிரஸ் வேட்பாளர் 370 வாக்குகள் அதிகம் பெற்றிருந்தார். எனவே இன்று நடைபெற்று வரும் மறு வாக்கு எண்ணிக்கையின் போது செல்லாத ஓட்டுகள் அதிகளவு மீண்டும் கண்டறியப்பட்டால் அதன் மூலம் தனக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும் என்பது அதிமுக வேட்பாளரின் கணிப்பாக உள்ளது.

அதே சமயம் அவரது கணிப்பு படி வெற்றி பெற வேண்டும் என்றால் ஒரு உதாரணமாக 371 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட வேண்டும் ஏனென்றால் எண்ணிக்கை மற்றுல் செல்லத்தகுந்த ஓட்டில் மட்டுமே மாற்றம் இருக்கும் யாருக்கு ஓட்டு போட்டார்கள் என்பதில் மாற்றம் இருக்காது. ஆனால், மறு எண்ணிக்கை நடைபெற்றாலும் 371 வாக்குகள் செல்லாதவையாக மாறுவதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு, ஒருவேளை அதிமுக வேட்பாளரின் குற்றச்சாட்டு படி கிரேடு அதிகாரிகளின் உரிய கையெழுத்து மற்றும் சீல் இல்லாமல் இருக்கும் வகையில் வாக்குகள் நிராகரிக்கப்பட்டதும், அது மிகவும் குறைந்த எண்ணிக்கையில் அதாவது பத்துக்கும் குறைவான வாக்குகளே செல்லாதவையாக மாற வாய்ப்பு உள்ளது.

அதன்படி நமக்கு கிடைத்த பிரத்யேக தகவல்படி இன்று நடைபெற்று வரும் இதுவரை 9 வாக்குகள் செல்லாதவை என கண்டறியப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இருப்பினும் சல்லடை சல்லடையாக அலசி படிவத்தை மீண்டும் மீண்டும் சரிபார்த்தால் எப்படியாவது நாம் வெற்றி பெற்று விடலாம் என்று அதிமுக வேட்பாளர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் நம்பிக்கையோடு வாக்கு எண்ணும் மையத்தில் காத்துள்ளார். அதிமுக வேட்பாளரின் ஆட்சேபனையால் வாக்கு எண்ணும் பணியில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை முடிய இரவு 10 மணி வரை ஆகலாம் என கூறப்பட்டது.

எனவே ஒட்டுமொத்த தமிழ்நாடே திரும்பி பார்க்கும் வகையில் இந்த வாக்கு எண்ணிக்கை அதிமுகவுக்கு சாதகமாக அமையுமா அல்லது உள்ளூர் பரபரப்போடு முடிந்து விடும் அளவுக்கு திமுக கூட்டணிக்கு சாதகமாக அமையுமா என்பது இன்னும் சில மணி நேரத்தில் தெரியவரும். வாக்குச்சீட்டுகளை மீண்டும் மீண்டும் அதிகாரிகள் சரிபார்த்தபடியே இருக்கின்றனர். இதற்கிடையில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவை தெரிந்து கொள்வதற்காக திமுக காங்கிரஸ் மற்றும் அதிமுக கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் 500க்கும் மேற்பட்டோர் காலை முதல் வாக்கு எண்ணும் மையத்திற்கு வெளியே ஆவலோடு காத்திருந்தனர்.

மீண்டும் பழனி நாடார் வெற்றி: இந்த நிலையில், தென்காசி தொகுதி மறு வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் மீண்டும் வெற்றிபெற்று தனது தொகுதியை தக்கவைத்துக் கொண்டார். 2021ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது தென்காசி தொகுதில், மொத்தமாக 2 லட்சத்து 14ஆயிரத்து 108 வாக்குகள் பதிவாகியிருந்தனர. அதில், அதிமுக வேட்பாளர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் 88 ஆயிரத்து 945 வாக்குகள் பெற்றிருந்தார், காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் 89ஆயிரத்து 315 வாக்குகள் பெற்றிருந்தார்.

முன்னதாக காங்கிரஸ் வேட்பாளர் ஆயிரத்து 609 தபால் வாக்குகள் பெற்றிருந்த நிலையில் இன்று நடந்த மறு வாக்கு எண்ணிக்கையில் 3 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட நிலையில் ஆயிரத்து 606 வாக்குகள் மட்டுமே பெற்றிருப்பது தெரியவந்தது. அதிமுக வேட்பாளர் முன்னதாக 674 தபால் வாக்குகள் பெற்றிருந்த நிலையில் இன்று நடந்த மறு வாக்கு எண்ணிக்கையில் ஒரு வாக்கு மட்டும் செல்லாது என அறிவிக்கப்பட்ட நிலையில் 673 வாக்குகள் பதிவாகியிருப்பதாக அறிவிக்கப்பட்டது.

இதனால், வாக்கு வித்தியாசத்தில் எந்த ஒரு பெரிய மாற்றமும் ஏற்படவில்லை. இன்று நடந்த எண்ணிக்கையின் படி அதிமுக வேட்பாளர் மொத்தமாக 88ஆயிரத்து 944 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் மொத்தமாக 89ஆயிரத்து 312 வாக்குகளும் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. 2021ஆம் ஆண்டு நடந்த வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளர் 370 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் இன்றைய எண்ணிக்கையின் படி 368 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்று தனது தொகுதியை தக்கவைத்துக்கொண்டார். இந்த வெற்றியை திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.

இதையும் படிங்க: டெல்லிக்கு திடீர் விசிட் அடித்த அண்ணாமலை; ஜெ.பி. நட்டாவுடன் ஆலோசனை.. எதற்கு தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.