ETV Bharat / state

டெல்லிக்கு திடீர் விசிட் அடித்த அண்ணாமலை; ஜெ.பி. நட்டாவுடன் ஆலோசனை.. எதற்கு தெரியுமா?

author img

By

Published : Jul 13, 2023, 8:02 PM IST

டெல்லிக்கு திடீர் பயணமாக சென்ற பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அங்கு தேசிய தலைவர் ஜெ.பி. நட்டாவை சந்தித்து, பாதயாத்திரை, நாடாளுமன்ற தேர்தலுக்காக தமிழ்நாடு பாஜக மேற்கொண்டிருக்கும் பணிகள் உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை திடீர் பயணமாக இன்று (ஜூலை 13) காலை டெல்லி புறப்பட்டுச் சென்றார். டெல்லி செல்லும் அண்ணாமலை பாஜக மூத்த தலைவர்களைச் சந்தித்து ஆலோசனை செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டாவை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசியுள்ளார்.

இந்தச் சந்திப்பின்போது, தமிழ்நாட்டின் அரசியல் கள நிலவரம், ஆளுநர் - முதலமைச்சர் மோதல் விவகாரம், அதிமுகவுடனான கூட்டணி குறித்து ஆலோசனை ஆகியவைகள் நடந்ததாக முதற்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், வரும் 28ஆம் தேதி ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் 200 நாள்கள் பாதயாத்திரை நடைபெறவுள்ளது. இந்த பாதயாத்திரை தொடர்பாகவும், நாடாளுமன்றத் தேர்தலுக்காக தமிழ்நாடு பாஜக மேற்கொண்டிருக்கும் பணிகள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், பாதையாத்திரையில் மத்தியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொள்ள உள்ள நிலையில் இது குறித்து ஆலோசனை செய்வதற்காக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டாவுடன் அண்ணாமலை ஆலோசனை நடத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: MK Stalin:அரசு அலுவலகங்களில் மக்களை அலைக்கழிக்காதீர்கள் - முதலமைச்சர் அட்வைஸ்!

மேலும், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி ஐந்து நாள்கள் பயணமாக டெல்லி சென்றிருந்தார். அங்கு தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்குவது குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மத்திய சட்ட வல்லுநர்களிடம் ஆலோசனை மேற்கொண்டதாகவும்; பின்னர் தமிழ்நாடு அரசு குறித்து பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த பயணத்தை முடித்த ஆளுநர் ரவி நேற்று (ஜூலை 12) இரவு மீண்டும் சென்னை திரும்பி இருந்தார்.

இந்த நிலையில் ஐந்து நாள்கள் பயணமாக டெல்லி சென்ற ஆளுநர் சென்னை திரும்பிய உடனே இன்று (ஜூலை 13) காலை அண்ணாமலை டெல்லி சென்று இருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது. ஆனால், இது குறித்து ஜெ.பி. நட்டா அலுவலக ட்விட்டர் பதிவில் சவுத் ஆப்பிரிக்காவில் நடைபெறும் அரசியல் கட்சிகளின் பிளஸ் டயலாக் மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கும் நான்கு பேர் கொண்ட குழு இன்று ஜெ.பி. நட்டாவை சந்தித்து வாழ்த்து பெற்றதாக குறிப்பிட்டுள்ளது.

பிளஸ் டயலாக் மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கும் நான்கு பேர்
பிளஸ் டயலாக் மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கும் நான்கு பேர்

இதில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் உள்ளார் என்பதால் டெல்லி சென்று ஜெ.பி. நட்டாவிடம் வாழ்த்து பெறுவதற்காக சென்றதாகவும் கூறப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: பிரதமர் மோடி பாரீஸ் பயணம்! பிரான்ஸ் தேசிய தின அணிவகுப்பில் பங்கேற்கிறார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.