ETV Bharat / state

தமிழகத்தில் நடப்பது விளம்பர ஆட்சி - எடப்பாடி பழனிசாமி தாக்கு!

author img

By

Published : Jan 16, 2023, 4:49 PM IST

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

மாட்டுப் பொங்கலை முன்னிட்டு கிராம மக்களுடன் இணைந்து பொங்கல் வைத்து கிராமிய பொங்கல் பண்டிகையை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கொண்டாடினார். அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பல்வேறு திட்டங்கள் தற்போது கிடப்பில் போடப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார்.

சேலம்: கெங்கவல்லி அடுத்த சிறுவாச்சூர் பகுதியில் நடைபெற்ற கிராமியப் பொங்கல் விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். ஏறத்தாழ 70-க்கும் மேற்பட்ட பானைகளில் பொங்கல் வைத்து கிராம மக்கள் மற்றும் அதிமுகவினர் உற்சாகமாக பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.

விழாவில் கலந்து கொண்டு கிராம மக்கள் மற்றும் அதிமுகவினர் முன்னிலையில் பொங்கல் வைத்து எடப்பாடி பழனிசாமி வழிபாடு நடத்தினார். தொடர்ந்து உரையாற்றிய அவர், "தை பிறந்தால் வழி பிறக்கும். தை பிறந்துவிட்டது. அதிமுகவிற்கு வழி பிறந்து விட்டது. இது போன்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்போது என் மனதில் ஒரு மகிழ்ச்சி பிறக்கிறது.

நானும் விவசாயி: நானும் ஒரு விவசாயி. விவசாயப் பெருமக்களோடு கலந்து கொண்டு மாட்டுப் பொங்கல் கொண்டாடியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழக மக்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள். நாட்டிற்கு உணவளிக்கும் விவசாயிகளின் விழாவில் கலந்து கொண்டுள்ளேன். விவசாயப் பணி என்பது சாதாரண பணி கிடையாது. கடுமையான பணி. ரத்தத்தை வேர்வையாக மண்ணில் சிந்தி உழைப்பவர்கள் விவசாயிகள்.

சிறுவாச்சூர் ஏரி அமைக்கும் திட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது திமுக ஆட்சியில் அது கிடப்பில் போடப்பட்டு உள்ளது. மீண்டும் அதிமுக ஆட்சி அமையும். அப்போது இந்த திட்டம் நிறைவேற்றப்படும். விவசாயிகளுக்கான எந்த திட்டத்தையும் இந்த அரசு கொண்டு வரவில்லை.

விவசாய பயிர்க்கடன் தள்ளுபடி: அதிமுக ஆட்சியில் குளம், குட்டைகள் தூர்வாரி குடிமராமரத்து திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தினோம். பருவ மழைக்காலங்களில் பெய்யக் கூடிய நீர், ஏரி குளங்களில் சேகரிக்கப்படுகிறது. அதனை முறையாக பயன்படுத்தினால் விவசாயம் செழிக்கும். விவசாயிகளுக்கான காப்பீடு திட்டத்தைக் கொண்டு வந்தது அதிமுக அரசு. கூட்டுறவு வங்கிகளில், விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்களை இரண்டு முறை தள்ளுபடி செய்தது, அதிமுக அரசு.

தமிழ்நாட்டில் மரவள்ளிக்கிழங்கு விவசாயம் மாவு பூச்சியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தடுக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. பாதிப்பில் உள்ள விவசாயிகளைப் பாதுகாக்க திமுக அரசு தவறிவிட்டது. ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத்தொகுப்பு கடந்த ஆண்டு எப்படி கொடுக்கப்பட்டது என்பது மக்களுக்குத் தெரியும்.

பொங்கல் பரிசு: அதிமுக ஆட்சியில் 2 ஆயிரத்து 500 ரூபாய் பணம் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு முழுவதும் வழங்கப்பட்டது. ஆனால், திமுக ஆட்சியில் கரும்பு கூட கொடுக்க முன் வரவில்லை. அதனை நாங்கள் அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்றதால் தான் தற்போது மக்களுக்கு முழுக் கரும்பு கிடைத்துள்ளது.

இதுதான் திராவிட மாடல் ஆட்சியா. விளம்பரத்துக்காக செயல்படும் அரசு இது‌. மக்களுக்காக எதுவும் செய்யவில்லை. கால்நடைகளுக்கு முறையாக தடுப்பு மருந்து கொடுக்கவில்லை. இதனால் பல்வேறு மாவட்டங்களில் கால்நடைகள் கோமாரி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளன.

கிடப்பில் கிடக்கும் கால்நடை பூங்கா: சட்டமன்றத்தில் இது தொடர்பாகப் பேசினேன். இதனை அரசு மறைத்து விட்டது. ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்காவை அதிமுக ஆட்சியில் கொண்டு வந்தோம். இந்த திட்டத்தை தற்போது கிடப்பில் போட்டுள்ளனர். கால்நடை பூங்கா அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது.

கால்நடை பூங்கா அருகே தோல் தொழிற்சாலை அமைக்கப்படுவதாக தெரிகிறது. அதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தோல் தொழிற்சாலை அமைந்தால் தலைவாசல் பகுதியில் நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கும், வேளாண் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். விவசாயம் அழிந்து போகும். அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: Jallikattu: சூரியர் ஜல்லிக்கட்டில் காளை மோதியதில் பார்வையாளர் பலி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.