ETV Bharat / state

Salem ARRS: வரதட்சணை கொடுமை: தர்ணாவில் ஈடுபட்ட சேலம் ஏ.ஆர்.ஆர்.எஸ் உரிமையாளரின் மருமகள்!

author img

By

Published : May 31, 2023, 5:25 PM IST

Etv Bharat
Etv Bharat

சேலத்தில் இயங்கி வரும் பிரபல ஜவுளி நிறுவனமான ஏ.ஆர்.ஆர்.எஸ் அதிபரின் மருமகள் வரதட்சணை கொடுமை செய்வதாக கூறி கணவர் வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம்: சேலம் மாவட்டத்தைத் தலைமையாகக் கொண்டு ஏ.ஆர்.ஆர்.எஸ் சில்க்ஸ் என்ற பிரபல தனியார் ஜவுளிக்கடை நாமக்கல், ஓசூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இயங்கி வருகிறது. அது மட்டுமின்றி சேலம் அருகே உள்ள வலசையூரில் ஏ.ஆர்.ஆர்.எஸ் அகாடமி என்ற கல்வி நிறுவனமும் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் ரவிச்சந்திரனின் மகன் கார்த்திக் பாலாஜி கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதம் கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் மகள் சுபராகா என்பவரைத் திருமணம் செய்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக சுபராகாவின் கணவர் கார்த்திக் பாலாஜி மற்றும் அவரது மாமியார் ஆகிய இருவரும், தங்களுக்குக் கடன் சுமை அதிகம் இருப்பதாகவும், அதை அடைக்க உங்கள் வீட்டிலிருந்து ஐந்து கோடி ரூபாய் பணம் வாங்கி வர வேண்டும் என்றும் கூறி சுபராகாவை வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. அது மட்டுமின்றி பணத்தை வாங்கி வரா விட்டால் தன்னுடன் சேர்ந்து வாழ முடியாது எனவும் கார்த்திக் பாலாஜி மிரட்டியதாகத் தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மருமகள் சுபராகா தனது பெற்றோரிடம் நடந்ததைக் கூறி அழுது புலம்பி உள்ளார்.

பணம் கொடுக்க மறுத்து வீட்டிலிருந்த அவருக்கு, கணவரும் மாமியாரும் தொல்லைகள் கொடுத்து, பல்வேறு வகைகளில் கொடுமைப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது .இதனை அடுத்து கார்த்திக் பாலாஜியின் மனைவி சுபராகா தனது சொந்த ஊரான திருச்சூருக்குச் சென்றுள்ளார் .இதனிடையே கார்த்திக் பாலாஜி தனக்கு விவாகரத்து வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதே நேரம், சுபராகா தரப்பில் கேரள நீதிமன்றத்தில் தனது கணவர் வரதட்சணை கொடுமை செய்வதாக மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், வழக்கு விசாரணை முடியும் வரை தனது கணவர் வீட்டில் தான் இருக்க அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் எனவும் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த கேரள நீதிமன்றம், வழக்கு விசாரணை முடியும் வரை சுபராகா அவரது கணவர் இல்லத்தில் இருக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டது. இதனை அடுத்து சேலம் வந்த சுபராகா மற்றும் அவரது பெற்றோர் கார்த்திக் பாலாஜியின் வீட்டிற்குச் செல்ல முயற்சித்துள்ளனர். ஆனால் அங்கு அவர்களை கார்த்திக் அனுமதிக்கவில்லை எனவும் நீதிமன்றம் உத்தரவின் நகலைக் காண்பித்தும் மறுத்து விட்டதாகவும் சுபராகா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து சுபராகாவும் அவரது பெற்றோரும் திருச்சூர் சென்றுள்ளனர். தொடர்ந்து இன்று காலை சேலம் வந்த சுபராகா கார்த்திக் தன்னை வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டும் எனவும் சேர்ந்து வாழ விரும்புவதாகவும் ஆனால் அதை கார்த்திக் மறுப்பதாகவும் கூறி அவரது வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபடத்தொடங்கியுள்ளார். இதை அறிந்த கார்த்திக்கின் பெற்றோர் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றதாகக் கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் சுபராகாவிடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். இருப்பினும் தனது கணவர் தன்னை உள்ளே அனுமதிக்கும் வரை தான் போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என கூறிய சுபராகா தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பேச்சு பொருளாக மாறியுள்ளது.

இதையும் படிங்க: 5வது நாள்.. 3 கும்கி யானை.. 2 ஷிப்ட்.. வனத்துறையில் பலே திட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.