ETV Bharat / state

'பொது இடத்தில் விவாதிக்க தயாரா?' முதல்வர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் சவால்!

author img

By

Published : Nov 30, 2022, 6:07 PM IST

பொது இடத்தில் என்னுடன் விவாதிக்க ஸ்டாலின் தயாரா? - இபிஎஸ் சவால்
பொது இடத்தில் என்னுடன் விவாதிக்க ஸ்டாலின் தயாரா? - இபிஎஸ் சவால்

பொது இடத்தில் வைத்து தன்னுடன் விவாதிக்க முதலமைச்சர் ஸ்டாலின் தயாரா என இபிஎஸ் சவால் விடுத்துள்ளார்.

சேலம்: அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி, இன்று (நவ.30) எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் நிறைவேற்றப்பட்ட பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கலும் நாட்டினார்.

இதனையடுத்து பயணியர் மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த பழனிசாமி, "முதலமைச்சர் ஸ்டாலின் அரசு விழாவில் பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு வளர்ச்சி அடையவில்லை என்றும், பொருளாதாரம் பாதாளத்திற்கு சென்றுள்ளதாகவும், தொழில் வளம் முன்னேற்றம் அடையவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

கடந்த அதிமுக ஆட்சிக்கு இந்தியா டுடே இதழ், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளதாக விருது கொடுத்துள்ளது. அதிமுக ஆட்சி சிறப்பாக நடந்தது என்பதற்கு அதுவே சான்று. தற்போது தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளில் போதைப்பொருள்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது.

ஆளும் கட்சியினர் தலையீட்டால் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை. ராமநாதபுரத்தில் பல கோடி மதிப்பில் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் திமுக கவுன்சிலர் கைது செய்யப்பட்டுள்ளார். திமுகவினரை ஸ்டாலினால் கட்டுப்படுத்த முடியவில்லை.

தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை போன்றவை நாள்தோறும் நடைபெறுகிறது. ஊடகங்களில் வரும் செய்தியின் உண்மை தன்மை அறிந்து செயல்பட வேண்டும். தமிழ்நாட்டில் நிலவும் பிரச்னைகளை பற்றி, அது குறித்து கருத்துகளை எதிர்கட்சியாக கூறுகின்றோம்.

எடப்பாடி கே.பழனிசாமி செய்தியாளர் சந்திப்பு

முதலமைச்சர் இதனை ஏற்க மறுக்கிறார். மக்களை பற்றி முதலமைச்சருக்கு கவலையில்லை. தமது குடும்பத்தை பற்றிதான் முதலமைச்சருக்கு கவலை. திமுகவிற்கு வாக்களித்த மக்கள் வயிறு எரிந்து போயுள்ளனர். அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் திட்டங்கள், திமுக அரசு வந்த உடன் கை விடப்பட்டுள்ளன.

11 மருத்துவக் கல்லூரிகளை தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்தோம். உங்களால் ஒரு மருத்துவக் கல்லூரி கொண்டு வர முடியவில்லை. தமிழ்நாட்டில் அதிக தொழிற்சாலை கொண்டு வந்தது அதிமுகதான். அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் குறித்தும், திமுகவின் 18 மாத ஆட்சியின் சாதனைகள் குறித்தும் பொது இடத்தில் என்னுடன் விவாதிக்க ஸ்டாலின் தயாரா? என சவால் விடுகிறேன். எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து திமுக எம்பிக்கள் பாராளுமன்றத்தில் ஏன் கேள்வி எழுப்பவில்லை?” இவ்வாறு கூறினார்.

இதையும் படிங்க: திமுக தொடர்ந்து ஜனநாயக யுத்தம் நடத்துகிறது - தொண்டர்களுக்கு ஸ்டாலின் மடல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.