ETV Bharat / state

ஏழைகளுக்கு பலனளிக்காத கார் பந்தயம் தேவையற்றது - ஈபிஎஸ் குற்றச்சாட்டு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 2, 2023, 8:05 PM IST

Etv Bharat
Etv Bharat

Formula 4 car race in Chennai: தமிழக அரசு மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ள ரூ.4 ஆயிரம் கோடி செலவு செய்ததாக கணக்கு காட்டிய நிலையில், சென்னை மாநகராட்சி மழைநீரில் மிதப்பாகவும், சென்னை தீவுத் திடலில் ரூ.242 கோடி செலவில் நடத்தப்படும் கார் பந்தயம் தேவையற்றது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

EPS Press Meet

சேலம்: ஓமலூர் பகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அக்கட்சியின் பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் இன்று (டிச. 2) ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'சென்னையில் கனமழை பெய்து வருகிறது. இதனால், ஆங்காங்கே தண்ணீர் தேங்கி பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன், தமிழக அரசு மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ள ரூ.4 ஆயிரம் கோடி செலவு செய்ததாக கணக்கு காட்டியது. ஆனால், தண்ணீரில் சென்னை மாநகராட்சி மிதக்கிறது. ஊழலில் கைதேர்ந்த இந்த அரசு, மழைநீர் முழுமையாக வெளியேற எதனையும் செய்யவில்லை.

இதன்மூலம், ஒரு திறமையற்ற அரசாக திமுக அரசு செயல்படுகிறது. சென்னை தீவுத்திடலில் 'கார் பந்தயம்' நடத்த முடிவு செய்யப்பட்டு இதற்காக ரூ.242 கோடி செலவு செய்ய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதில் தமிழக அரசு சார்பில் ரூ.42 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது கண்டிக்கத்தக்கது. இதற்காக இருங்காட்டுக்கோட்டையில் ஓடுதளம் இருக்கும்போது, தேவையில்லாமல் சென்னை மாநகருக்குள் இந்த கார் பந்தயம் நடத்துவது பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும்.

கார் பந்தயம் நடத்தும் இடத்தில் அரசு மருத்துவமனை, ரயில் நிலையம், தலைமைச் செயலகம் ஆகியவை உள்ளதால் பொதுமக்கள் பாதிப்படையக்கூடும். இந்த கார் பந்தயத்தை செல்வந்தர்கள் தான் பார்க்கப் போகிறார்கள்; ஏழைகள் அல்ல. எனவே, இந்த கார் பந்தயம் தேவையற்றது. விளம்பரத்திற்காக இந்த கார் பந்தயம் நடத்தப்படுவது கண்டிக்கத்தக்கது" என்றார்.

அமலாக்கதுறை அதிகாரி கைது செய்யப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு பதில் அளித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, 'தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்பதில் தவறில்லை. அதிமுக நாடாளுமன்ற தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்கான அனைத்து கட்டமைப்பு பணிகளையும் மேம்படுத்தி வருகிறது.

நாடாளுமன்ற தேர்தலுக்கு அதிமுக தயாராகி வருகிறது. இன்னும் ஒரு மாதத்தில் முடிக்கப்பட்டு அடுத்த கட்டப் பணிகள் தொடங்கும். தமிழக அரசியல் தலைவர்கள் முதிர்ச்சி இல்லை என்று கூறுவது அவர்கள் கட்சியில் உள்ள திமுக தலைவர்களையும் சேர்த்தா, யாருக்கு முதிர்ச்சி இல்லை என்று கூறியவரை தான் கேட்க வேண்டும்‌" என்று தெரிவித்தார்.

சட்டப்பேரவை சபாநாயகர் தனக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடுப்பதாக தெரிவித்த கருத்து குறித்து கேட்டதற்கு, "அவர் முதலில் ஜனநாயகம் முறைப்படி செயல்படட்டும் பிறகு அவர் சொல்வது நியாயமா? உண்மைத்தன்மை உள்ளதா? என யோசிப்போம். கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் மருத்துவர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த ஊழியர்கள் போராட்டம் நடத்தும்போது, போராட்ட இடத்திற்கு நேரடியாக சென்ற தற்போதைய தமிழக முதலமைச்சரும், அமைச்சர்களும், கோரிக்கைகளை நிறைவேற்றதாக வாக்குறுதி அளித்தனர்.

தேர்தல் நேரத்திலும் உறுதிமொழி அளித்தனர். ஆனால், இதுவரை அவர்கள் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றவில்லை. இதனால், ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம் அறிவித்து உள்ளனர். இந்த விஷயத்தில் தேர்தலுக்கு முன்பும் பின்பும் திமுக இரட்டை நிலைப்பாடு உள்ள கட்சியாக உள்ளது" என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

இதையும் படிங்க: அமலாக்கத்துறை அதிகாரி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.