ETV Bharat / state

சேலம் சோனா கல்லூரியில் சந்திரயான்-3 வெற்றி விழா!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 4, 2023, 10:37 PM IST

Chandrayaan Mahotsav in salem sona college
சேலம் சோனா கல்லூரியில் சந்திரயான் மஹோத்சவ்

Chandrayaan-3 Mahotsav: சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் சந்திரயான்-3 விண்கலத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் நடந்த தொழில்நுட்பக், கலாச்சார நிகழ்ச்சி நடைபெற்றதில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

சேலம்: சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் சந்திரயான்-3 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கியதைக் கொண்டாடும் வகையில் "சந்திராயன் மஹோத்ஸவ்" (Chandrayaan Mahotsav) என்ற பெயரில் தொழில்நுட்பக் கலாச்சார நிகழ்ச்சி இன்று (செப்.04) நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சி கல்லூரியின் முதல்வர் எஸ்.ஆர்.ஆர்.செந்தில்குமார் முன்னிலையில் நடைப்பெற்து. இந்த விழாவில் சோனா கல்வி நிறுவனத்தின் தலைவர் வள்ளியப்பா, துணைத்தலைவர் சொக்குவள்ளியப்பா ஆகியோர் தலைமை வகித்தனர். முன்னதாக இந்த நிகழ்வில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கான வினாடி வினா, நடனம் (குழு&தனி), கட்டுரை எழுதுதல், பாட்டு போட்டி, கதை சொல்லுதல் போன்ற பல போட்டிகள் நடத்தப்பட்டன.

இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்குக் கல்லூரியின் நிர்வாகத்தினர் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டு தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து கல்லூரியின் துணைத்தலைவர் சொக்கு வள்ளியப்பா பேசும்பொழுது, சோனா தொழில்நுட்பக் கல்லூரி இஸ்ரோவின் சந்திரயான் வெற்றிப் பயணத்தில் மிகமுக்கியமான பங்கு வகித்துள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், "சோனா தொழில்நுட்பக் கல்லூரியின் ஆராய்ச்சி மையமான 'சோனா ஸ்பீட்' கடந்த 20 வருடங்களாக இஸ்ரோவிற்கு மோட்டார்களை தயாரித்து அனுப்புகிறதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க சந்திரயான்-3ல் சோனாவின் ஸ்டெப்பர் மோட்டாரைப் பயன்படுத்தி உள்ளது என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று தெரிவித்தார்.

அவரை தொடர்ந்து பேசிய கல்லூரியின் தலைவர் வள்ளியப்பா, "சந்திரயான்-3 இன் வெற்றிகரமான சாதனையுடன், நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முன்னோடி நாடாகவும், நிலவில் மென்மையான தரையிறங்கிய ரோபோ கருவியைக் கொண்ட நான்காவது நாடாகவும், இந்தியா ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது.

இந்த அசாதாரண சாதனை மற்றும் எழுச்சியூட்டும் மைல்கல்லைக் கொண்டாடும் வகையில், அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (AICTE) 'சந்திரயான் மஹோத்சவத்' என்ற தொழில்நுட்பக் கலாச்சார நிகழ்ச்சிகளை இன்று நடத்த முடிவு செய்துள்ளது. இதற்காக இந்தியாவில் உள்ள 200 உயர்கல்வி நிறுவனங்களை அழைத்துள்ளது. இதில் சோனா தொழில்நுட்பக் கல்லூரியும் பங்குபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது" என்று கூறினார்.

அதனைத்தொடர்ந்து சோனா கல்லூரியின் பேராசிரியரும், இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானியுமான கண்ணன், சந்திரயான்-3 திட்டத்தைப் பற்றி அனைவரின் முன்னிலையிலும் விளக்கிப் பேசினார். இந்த நிகழ்வில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள், பேராசிரியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: "உதயநிதியின் தலைக்கு ரூ.10 கோடி" - உ.பி., ஆச்சார்யா அறிவிப்பு.. கொந்தளிக்கும் திமுக..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.