ETV Bharat / state

மாடர்ன் தியேட்டர்ஸ் ஆர்ச் பகுதியை நினைவுச் சின்னமாக பாதுகாக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்..

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 17, 2023, 7:43 PM IST

Modern Theatre Arch should be preserved as a monument
மாடர்ன் தியேட்டர்ஸ் ஆர்ச் பகுதியை நினைவுச் சின்னமாக பாதுகாக்க வேண்டும்

Modern Theatre Arch: சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் ஆர்ச் பகுதியை நினைவுச் சின்னமாகப் பாதுகாக்க வேண்டும் எனப் பாட்டாளி மக்கள் கட்சிகளின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

மாடர்ன் தியேட்டர்ஸ் ஆர்ச் பகுதியை நினைவுச் சின்னமாக பாதுகாக்க வேண்டும்

சேலம்: பாட்டாளி மக்கள் கட்சியின் வாக்குச்சாவடி களப்பணியாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று (டிச.17) சேலத்தில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு, கட்சியினருக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

முன்னதாக, சேலம் தனியார் தங்கும் விடுதியில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அன்புமணி ராமதாஸ் கூறுகையில், “சென்னை மழை வெள்ள பாதிப்பு என்பது அடுத்து வரும் ஆண்டுகளிலும் தொடரும். எனவே அரசு, ஏற்கெனவே நாங்கள் வெளியிட்ட 'நாம் விரும்பும் சென்னை' என்ற தலைப்பிலான ஆய்வு முடிவுகளைச் செயல்படுத்த முன்வர வேண்டும்.

சென்னையில் மழைக்காலங்களில் தேங்கும் மழை நீரை, அருகில் உள்ள மாவட்டங்களுக்கு தனிக் கால்வாய் அமைத்துக் கொண்டு செல்ல வழிவகை காண வேண்டும். இன்னும் ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளில், இந்த ஆண்டு பெய்த மழையை விடக் கூடுதலாக மழை பெய்து, வெள்ளம் அதிக அளவில் சென்னையைப் பாதிக்கும் சூழல் உருவாகும்.

தமிழகத்தில் 24 மணி நேரமும் கஞ்சா விற்பனை நடந்து வருகிறது. பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளது. இளைஞர்கள் அதிக அளவில் இந்த கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகி, பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள். எனவே அரசு இதனை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும். கஞ்சா விற்பனையால் மிக மோசமான விளைவுகளை நாம் சந்திக்க உள்ளோம்.

அதேபோல தடுக்கி விழுந்தால் தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடை உள்ளது. விற்பனையை நாளுக்கு நாள் கூடுதலாக்க அரசு நடவடிக்கை எடுக்கிறது. இதற்குத் தான் நாங்கள் பூரண மதுவிலக்குக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்கிறோம். தமிழகத்தில் 365 நாட்களில் மூன்று நாட்கள் தவிர மீதி அனைத்து நாட்களிலும் மது விற்பனை படு ஜோராக நடைபெற்று வருகிறது.

ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும். தமிழக முதலமைச்சர், மத்திய அரசுதான் இதைச் செய்ய வேண்டும் என்று தவறான செய்தியைக் கூறி வருகிறார். தமிழக அரசு விரைவில் சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தாவிட்டால், பல்வேறு கட்சிகளை ஒன்றிணைத்து மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.

சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருகிறது. மேலும், பெரியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர், பெரியார் பற்றிய புத்தகம் எழுதியதற்கு விளக்கம் கேட்டு துணைவேந்தர் கடிதம் அனுப்பியுள்ளது வெட்கப்பட வேண்டிய விஷயம்.

சமூக நீதி அங்கு நிலைநாட்டப் படவில்லை. குறிப்பிட்ட பிரிவைச் சார்ந்தவர்கள் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். பல முறைகேடுகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சென்னையில் 300க்கும் மேற்பட்ட ஏரி, குளங்கள் மூடப்பட்டுள்ளன. அதன் மீது வணிக நிறுவனங்களின் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுக்கால ஆட்சியில், சென்னையில் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் பணி குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். மக்களின் வரிப்பணத்திற்கு உரியப் பதில் கிடைக்க வேண்டும்” எனக் கூறினார்.

அதன் பின்னர், சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் குறித்த கேள்விக்கு, “நாமும் ஒரு செல்பி எடுத்து விடலாமா? ”என்று சட்டமன்ற உறுப்பினர்களைப் பார்த்துக் கேட்டார். தொடர்ந்து, “மாடர்ன் தியேட்டர்ஸ் என்பது சேலத்திற்குப் பெருமை. இந்த மாடர்ன் தியேட்டர்ஸ் மூலமாகத் தான் ஐந்து முதலமைச்சர்கள் வந்துள்ளனர். அந்த அளவிற்கு பெருமைமிக்க இடம். ஆனால் தற்போது மீதமுள்ளது இந்த நினைவு வளைவு மட்டுமே.

அதைப் பாதுகாக்க வேண்டியது அவசியமானது. எந்த ஒரு அரசியல் தலையீடும் அந்த பகுதியில் இருக்கக்கூடாது. ஒரு நினைவுச் சின்னமாகவே இதைப் பாதுகாக்க வேண்டும். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு அந்த இடம் தேசிய நெடுஞ்சாலைக்குள் வருகிறது என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அது எந்த எல்லைக்குள் வந்தாலும் அதனைப் பாதுகாக்க வேண்டும்.

அந்த அடையாளத்தை அழிக்காமல் பாதுகாக்க வேண்டும் என்றால் யாரையும் அச்சுறுத்தக் கூடாது. நெடுஞ்சாலைக்குள் வந்தது என்றால், எப்படி நீங்கள் பட்டா வழங்கினீர்கள். நான் அதைப் பேசினால் நிறைய அரசியலாகும்” என்றார்.

இதையும் படிங்க: அமமுக யாரோடு தேர்தல் கூட்டணி? - ரகசியத்தை உடைத்த டிடிவி தினகரன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.