ETV Bharat / state

அமமுக யாரோடு தேர்தல் கூட்டணி? - ரகசியத்தை உடைத்த டிடிவி தினகரன்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 17, 2023, 2:25 PM IST

டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்

TTV Dhinakaran: கடல்நீரில் கலந்த கச்சா எண்ணெய்யை உரிய உபகரணங்களைக் கொண்டு அகற்ற வேண்டும் என்றும், நாட்டுக்கும், நாடாளுமன்றத்திற்கு சிறந்த பாதுகாப்பை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

டிடிவி தினகரன் பேட்டி

மதுரை: திருநெல்வேலி மற்றும் மதுரை மண்டல அமமுக தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம், மதுரை பாண்டியன் ஹோட்டலில் உள்ள அரங்கில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக மதுரை வந்திருந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், மதுரை கோச்சடை பகுதியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “அமமுக தேர்தல் பொறுப்பாளர்களுடன் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக கன்னியாகுமரி முதல் திண்டுக்கல் வரையிலான 59 சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் அமமுகவின் கூட்டணி குறித்து டிசம்பர் இறுதியிலோ அல்லது ஜனவரியிலோ முடிவாகும். ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்பது எங்களது கோரிக்கையாக உள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம் எங்களோடு பணியாற்றி வருகிறார். எங்களோடு வருபவர்கள் அனைவரோடும் சேர்ந்து பணியாற்றுவோம். தேமுதிக பொதுச் செயலாளராக பிரமேலதா பதவியேற்றதற்கு வாழ்த்துகளை ஏற்கனவே தெரிவித்துள்ளேன்.

தலைமைச் செயலாளர் அறிக்கையில், சென்னை 90 சதவீதத்திற்கு மேல் இயல்புநிலை திரும்பிவிட்டது எனவும், மற்ற ஏரியாக்களிலும் கூடிய விரைவில் இயல்புநிலைக்கு திரும்பிவிடும் எனவும் கூறியிருக்கிறார். அதன்படி நடக்கும் என நம்புகிறேன். கடல்நீரில் கலந்த கச்சா எண்ணெய்யை உரிய உபகரணங்களைக் கொண்டு அகற்ற வேண்டும் என நாங்கள் கோரிக்கை விடுக்கிறோம். நாட்டுக்கும், நாடாளுமன்றத்திற்கும் சிறந்த பாதுகாப்பை மத்திய அரசு வழங்க வேண்டும் என்பது எங்களது கோரிக்கை.

தேர்தல் வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றாத, மக்களை ஏமாற்றுகின்ற ஆட்சியாக திமுக ஆட்சி இருக்கிறது. அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதி அறிவித்தார்கள். தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டது போல, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் உரிமை தொகை கொடுக்கவில்லை. ஆகவே, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் உரிமைத்தொகை கொடுப்பேன் என்று கூறியதை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை” என்று கூறினார்.

இதையும் படிங்க: “அவதூறு பேசி அரசியல் செய்ய நினைப்பவர்களின் கன்னத்தில் விழுந்த பளார்” - பேரிடரில் இருந்து மீண்டு சேலத்தில் சந்திப்போம்.. முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.