கரோனா பாதிப்பாளர்களுக்கு உணவு வழங்கிய உணவக உரிமையாளர் சாலை மறியல்!

author img

By

Published : Jan 20, 2022, 8:04 PM IST

கரோனா நோயாளிகளுக்கு உணவு வழங்கிய உணவகம்:அரசு பணம் தராததால் உரிமையாளர் சாலை மறியல்!

கரோனா பாதிப்பாளர்களுக்கு உணவு வழங்கியதற்கு இதுவரை பணம் தராததால் அரசை கண்டித்து சோளிங்கர் அரசு மருத்துவமனை முன்பு உணவக உரிமையாளர்களும் பணியாளர்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ராணிப்பேட்டை: சோளிங்கரில் கரோனா தொற்று காலத்தில் சோளிங்கர் அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு நாள்தோறும் உணவு வழங்க மாவட்ட நிர்வாகம் சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் சாமி உணவகத்தை தேர்வு செய்தது.

நோயாளிகள், செவிலியர்கள், மருத்துவர்கள் என அனைவருக்கும் இந்த உணவகத்தில் இருந்து உணவு வழங்கப்பட்டு வந்தது. இந்த உணவக உரிமையாளர் காய்கறி, அரிசி, மளிகை உள்ளிட்ட அனைத்தையும் கடனாகப் பெற்று சமைத்து கொடுத்து வந்துள்ளார்.

உணவு வழங்கும் உணவகத்திற்கு வாரந்தோறும் பண பட்டுவாடா செய்யப்படும் என அரசு உத்தரவிட்டிருந்தது. இருப்பினும் உணவகத்திற்கான பணம் பட்டுவாடா செய்யப்படாமல் இருந்தது.

இப்படியாக உணவக உரிமையாளருக்கு வழங்க வேண்டிய மொத்தம் ரூ.28 லட்சம் நிலுவையில் உள்ளதாகவும், உரிமையாளர் பலமுறை இதனைக் கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்து இன்று (ஜன.20) உணவக உரிமையாளருடன் பணியாள்கள், காய்கறி வழங்கியோர், அரிசி, பருப்பு, எண்ணெய், மளிகை சாமான் வழங்கியோர் அனைவரும் ஒன்று சேர்ந்து சோளிங்கர் அரசு மருத்துவமனை முன்பு சோளிங்கர், திருத்தணி செல்லும் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த காவல் ஆய்வாளர் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியலை கலைத்தனர். இந்தச் சாலை மறியலால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க:ராணிப்பேட்டையில் காதல் ஜோடி தற்கொலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.