ETV Bharat / state

’வேங்கைவயல் பிரச்சனையில் முன்னேற்றம் இல்லாதது அதிர்ச்சி அளிக்கிறது’ - திருமாவளவன்

author img

By

Published : Feb 5, 2023, 9:28 AM IST

திருமாவளவன்
திருமாவளவன்

வேங்கைவயல் பிரச்சனையில் முதலமைச்சர் அக்கரையோடு செயல்பட்டாலும், அதில் முன்னேற்றம் இல்லாதது அதிர்ச்சி அளிக்கிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திருமாவளவன் அளித்த பேட்டி

புதுக்கோட்டை: வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின சமூக மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில், மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் கடந்த டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி கண்டறியப்பட்டு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் வேங்கைவயல் கிராமத்திற்கு நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், நேரில் சென்று அப்பகுதி மக்களை சந்தித்து நடந்த விவரங்களை கேட்டு அறிந்ததோடு, மக்களுக்கு ஆறுதலையும் கூறினார். மேலும் அங்கு நடைபெற்ற மருத்துவ முகாமையும் பார்வையிட்ட அவர் தானும் உடல் பரிசோதனை செய்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் கூறுகையில், "வேங்கை வயலில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம், மனிதாபிமானம் உள்ள எவராலும் சகித்து கொள்ள முடியாது. உலகம் முழுவதிலும் உள்ள ஜனநாயக சக்திகள் வெட்கபட வேண்டிய அவலம். இது குறித்து தமிழக முதலமைச்சரை சந்தித்து பேசினேன்.

சட்டபேரவையிலும் விசிக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. முதலமைச்சரும் இப்பிரச்சனையில் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். ஏற்கனவே காவல்துறையினர் காலம் தாழ்த்துகின்றனர், பாதிக்கப்பட்ட மக்களையே காவல்துறையினர் குற்றவாளியாக ஆக்க முயல்வதாக எழுந்த குற்றசாட்டின் அடிப்படையில், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

முதலமைச்சர் இந்த பிரச்சனையில் அக்கரையோடு செயல்பட்டாலும், இன்னும் குற்றவாளிகளை கண்டுபிடிக்கப்படாமல் இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. இருந்த போதிலும் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த விவகாரத்தில் முதலமைச்சர் குற்றவாளிகளை கைது செய்ய அனைத்து விதமான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார்.

எங்களை பொறுத்தவரையில் தலித்துகளுக்கு எதிரான அரசாக இந்த அரசை பார்க்கவில்லை. முதலில் காவல்துறையினரும் பின்னர் சிபிசிஐடி போலீசாரும் குற்றவாளிகளை கைது செய்வதில் ஏன் காலம் தாழ்த்தி வருகிறார்கள் என்ற காரணம் தான் தெரியவில்லை. வேங்கை வயலில் புதிய குடிநீர் தொட்டி கட்டுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. பொது குடிநீர் தொட்டி கட்ட வேண்டும் என்பதே அரசுக்கு நான் விடுக்கும் கோரிக்கை. இது குறித்து ஏற்கனவே முதலமைச்சரிடம் வலியுறுத்தி உள்ளேன்” என்றார்.

இந்த விவகாரம் குறித்து நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “திமுக அரசை விமர்சிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், வேங்கை வயல் விவகாரம் குறித்து தனது கருத்துக்களை சீமான் கூறி வருகிறார். அவருக்கு பெரியாரை எதிர்க்க வேண்டும், திராவிடத்தை எதிர்க்க வேண்டும் என்பதே கோட்பாடாக உள்ளது.

இந்த விவகாரத்தில் திமுகவை கேள்வி கேட்கும் சீமான், ஏன் பாஜக மற்றும் அதிமுகவை கேள்வி கேட்கவில்லை. சீமானுக்கு வேங்கை வயல் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்பதைவிட, பெரியார் எதிர்ப்பு, திராவிட எதிர்ப்பு தான் மேலோங்கியுள்ளது. அவர் என்னை விமர்சனம் செய்துள்ளது என் மீதான காழ்ப்புணர்ச்சியை காட்டுகிறது” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி. இந்த தேர்தலில் அதிமுகவின் நிலை பரிதாபமாக உள்ளது. தற்போதையை சூழலில் அதிமுகவின் பிளவை பயன்படுத்தி பாஜக தமிழ்நாட்டில் கால் ஊன்ற பார்க்கிறது. அதிமுக தொண்டர்கள் உஷாராக இருக்க வேண்டும்.

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்திருப்பது வாக்கு வங்கிக்கு வலு சேர்க்கும் என்று நான் கருதவில்லை. அதே வேளையில் பாஜவிற்கு எதிராக ஓரணியில் சேர்ந்திருப்பதை நான் வரவேற்கிறேன். நான் ஜாதிய தலைவராக இல்லாமல் அனைத்து சமூக மக்களின் பிரச்சனைகளுக்காகவும் களத்தில் நின்று போராடி வருகிறேன்” என்று கூறினார்.

இதையும் படிங்க: வேங்கைவயல் விவகாரம்: பிறகட்சிகளை குற்றம் சொல்ல திருமாவுக்கு தகுதியில்லை - சீமான்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.