ETV Bharat / state

புதைந்து கிடந்த கிராமத்தை திரும்பி பார்க்க வைத்த ஈடிவி பாரத்!

author img

By

Published : Jul 1, 2020, 8:23 AM IST

people
people

புதுக்கோட்டை: ஈடிவி பாரத் செய்தி எதிரொலியாக வாகைப்பட்டி கிராமத்தில் நீண்ட நாள்களாக இருந்துவந்த குடிநீர் பற்றாக்குறை, அப்பகுதி மக்கள் சந்திக்கும் சிறுநீரக கோளாறு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து அரசு அலுவலர்கள் ஆய்வு செய்வதாக உறுதியளித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் வாகைப்பட்டி கிராமத்தில் கடந்த நான்கு வருடத்தில் சிறுநீரக பிரச்னையால் பலரும் உயிரிழந்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இவர்களுக்கு எதனால் சிறுநீரக பிரச்னை ஏற்படுகிறது, ஏன் இந்த உயிரிழப்புகள், அக்கிராமத்தில் மறைந்திருக்கும் மர்மம் என்ன என்பது கேள்விக்குறியாகவே இருந்துள்ளது.

இந்நிலையில், கடந்த 23ஆம் தேதி ஈடிவி பாரத் செய்தியாளர் வாகைப்பட்டி கிராமத்தில் நிலவும் பிரச்னைகள் குறித்து அம்மக்களிடம் விசாரித்தபோது அதிர்ந்து போனார்.

தாகம் தீர்க்கும் தண்ணீர் அக்கிராம மக்களின் வாழ்வில் விஷமாக இருந்துள்ளது பேரிடிதான். அங்குள்ள மக்கள் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சத்தோடு தங்களது வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளனர். கிடைக்கும் தண்ணீர் விஷம் என்றாலும் அதுதான் அவர்களின் கண்ணீரை போக்க வந்த தேவாமிர்தம்.

இந்தக் கிராமத்தில் சுமார் 100 குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு தண்ணீர் தொட்டி, குடிநீருக்கான இணைப்புக் குழாய்கள் உள்ளிட்ட வசதிகள் இருந்தும் சுத்தமான குடிநீருக்குத்தான் வழியில்லை.

சுகாதாரமில்லாத தண்ணீரால் தான் இத்தனை உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன என்ற உண்மை புலப்பட்டன. ஒரே ஒரு ஆழ்துளை கிணற்றில் வந்த தண்ணீரை பயன்படுத்தி வந்ததாக தெரிவித்தனர். அதுவும் கடந்த நான்கு ஆண்டுகளில் அடுத்தடுத்து சிறுநீரக பிரச்னையில் ஒவ்வொருவராக உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்த நீரை அருந்தியதால் தான் சிறுநீரக பிரச்னை ஏற்படுகிறது. இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் ஈடிவி பாரத் வாயிலாக கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதுகுறித்த செய்தி தொகுப்பு வெளிவந்தபின் மாவட்டம் முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. காட்டுத்தீ போல் மக்களின் பேச்சாக இருந்தது. இதுகுறித்த பிரச்னை அலுவலர்களின் பார்வைக்கும் சென்றது.

நன்றி தெரிவித்த மக்கள்

இந்நிலையில், ஈடிவி பாரத் செய்தி எதிரொலி காரணமாக வாகைப்பட்டி கிராமத்தை ஆய்வு செய்த அலுவலர்கள் அங்கு நிலவும் தண்ணீர் பற்றாக்குறை, தண்ணீர் குழாய் குறைபாடுகள், குளங்கள் தூர்வாருதல் போன்றவற்றை உடனடியாக நிறைவேற்றி தரப்படும் என அப்பகுதி மக்களிடம் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

அதேபோன்று சிறுநீரக பாதிப்பிற்கு காரணமாக இருப்பது தண்ணீரா என்பதை ஆராய்ச்சி செய்து உடனடி தீர்வு காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தனை வருடங்களாக புதைந்து கிடந்த கிராமத்தை அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்து நடவடிக்கை எடுக்க வைத்ததற்காக அப்பகுதி மக்கள் ஈடிவி பாரத் ஊடகத்திற்கு வாகைப்பட்டி மக்கள் கண்ணீர் நிறைந்த நன்றி தெரிவித்தனர்.

இதனால் இப்பகுதி உள்ள அனைவருக்குமே சிறுநீரக பாதிப்பு உள்ளதா என்பதை அறியும் வகையில் மருத்துவ முகாமினை அமைத்து கண்டறிய வேண்டும் என அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க: உயிரைக் குடிக்கும் குடிநீர்.. தாகம் தீர்க்குமா தமிழ்நாடு அரசு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.